FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

சரித்திரம் பேசும் சத்திரம்!

மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ராணி மங்கம்மாள்.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:01 am IST
திருப்பரங்குன்றம் கோயில் மண்டபத்தில் ராணி மங்கம்மாள் தனது பேரனுடன்...
பகிர்:

ஆர். கணேசன்

மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ராணி மங்கம்மாள். பெண்கள் முடி சூட்டிக் கொள்ளாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து 1689-ஆம் ஆண்டு முதல் 1704 ஆண்டு வரை மதுரையை திறம்பட ஆட்சி செய்திருக்கிறார்.

தர்ம சிந்தனையும், தெய்வ பக்தியும் கொண்ட இவர், மக்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரையில் மத்திய சந்தை, பள்ளி, கல்லூரிக் கட்டடங்கள், பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆ ட்சியர் அலுவலகம், தமுக்கம் கோடைக்கால அரண்மனை, மங்கம்மாள் சத்திரம் எனப் பல்வேறு அறப்பணிகளைச் செய்தார் என வரலாறு கூறுகிறது.

Advertisement

Advertisement

யாத்ரீகர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட ராணி மங்கம்மாள் சத்திரம், மதுரையில் பாரம்பரியத்துடன் கூடிய பழங்கால கட்டடப் பெருமைகளுள் ஒன்று. ஒருகாலத்தில் இங்கு ராணி மங்கம்மாவின் உருவச் சிலை அமைக்கப்பட்டிருந்ததாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மதுரை திருப்பரங்குன்றம் கோயில் உள்ளே முன் மண்டபத்தில் இடப்பக்கத் தூணில் ராணி மங்கம்மாள் தனது பேரனுடன் நிற்கும் உருவச்சிலை இன்றும் உள்ளது.

ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள இந்தச் சத்திரம், சுமார் இருநூறு அடி நீளம் கொண்டு ரயில் பயணிகளை எதிர்கொண்டு வரவேற்கிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக, சில வருடங்கள் முன்பு வரை பயணிகள் தங்கும் விடுதியாகக் கோலோச்சியது. ஆனால், இன்று தன் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு அலங்கோலமாகக் காட்சியளிக்கிறது.

இதே வளாகத்தில் மற்றொரு பகுதியில் மாநகராட்சி தகவல் மையமாகவும் மற்றும் மதுரை தொகுதி எம்.பி அலுவலகமும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. தற்போது அதுவும் காலி செய்யப்பட்டு விட்டது.

இந்தச் சத்திரம் வரிசையில் இருந்த கருப்பட்டி சத்திரம் அண்மையில் இடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல கட்டடங்களுடன் சேர்த்து ராணி மங்கம்மாள் சத்திரத்தையும் இடிக்கப் போவதாக மக்களிடம் செய்தி காட்டுத் தீயாகப் பரவியது.

பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் ராணி மங்கம்மாள் சத்திரத்தை இடிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். அதில் வெற்றி கிடைக்க, மாநகராட்சி சார்பில் மங்கம்மாள் சத்திரத்தை புரனமைப்பு செய்து, பின்னர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் சுண்ணாம்புக் காரை கட்டடமாக மிளிர்ந்தது பின்னாளில் கருங்கல், செங்கல் கட்டடமாக மாற்றப்பட்டிருக்கிறது.

அக்காலத்தில் மதுரைக்கு வரும் யாத்ரீகர்கள், வழிப்போக்கர்கள் இங்கு தங்கிச் சென்றிருக்கிறார்கள். எந்த நேரமும் நீர்மோர் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டிருக்கிறது.

இச்சத்திரம் நுழைவு வாசல் பக்கவாட்டு சுவரின் ஒரு ஓரத்தில் சிறிய கல்வெட்டில் ஆங்கில எழுத்துகளுடன் 'ராணி மங்கம்மாள் சத்திரம் 1900' என்று எழுதப்பட்டிருந்தது.

இன்னொரு கல்வெட்டில் 'ராணி மங்கம்மாள் சத்திரம் விஸ்தரிப்புக் கட்டடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் வி.இராமையா அவர்களால் 16.11.1965 அன்று திறந்து வைக்கப்பட்டது' என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த இரண்டு கல்வெட்டும் இப்போது காணப்படவில்லை.

பராம்பரியமான சின்னங்கள், கட்டடங்கள், சிற்பங்கள் உள்பட யாவும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்கிற மக்களின் கோரிக்கைகளால் ராணி மங்கம்மாள் சத்திரம் சற்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments