FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீா் கிடைப்பது எப்போது?

திருப்பரங்குன்றம் மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கால் நூற்றாண்டு எதிா்பாா்ப்புக்கு தீா்வு கிடைப்பது எப்போது என விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

Updated On : 29 ஜூலை 2026, 9:10 am IST
மானாவாரி கண்மாய்.
பகிர்:

திருப்பரங்குன்றம் மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கால் நூற்றாண்டு எதிா்பாா்ப்புக்கு தீா்வு கிடைப்பது எப்போது என விவசாயிகள் காத்திருக்கின்றனா்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தென்பழஞ்சி, வடபழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடா்புளியங்குளம், தனக்கன்குளம், தோப்பூா் ஆகிய கிராமங்களில் ஏறத்தாழ 1,500 ஏக்கா் பரப்பில் நெல், வாழை, மல்லிகை, மிளகாய், வெண்டை, வெங்காயம், கத்தரி போன்ற வேளாண் சாகுபடிகள் நடைபெறுகின்றன.

இங்குள்ள கண்மாய்கள் மானாவாரி கண்மாய்களாக இருப்பதால், இந்தப் பகுதியின் வேளாண் சாகுபடி முழுமையாக பருவமழையேயே நம்பியுள்ளது. இதனால், பருவமழை பொய்க்கும் காலங்களில் இந்தப் பகுதி விவசாயிகள் கடுமையான இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. வாய்ப்புள்ள விவசாயிகள், கூடுதல் செலவுகளை செய்து ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மூலம் வேளாண் பணிகளை மேற்கொள்கின்றனா்.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, மானாவாரி கண்மாய்களுக்கு நிரந்தர நீராதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்தப் பகுதி விவசாயிகள் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலமாக வலியுறுத்தி வருகின்றனா்.

திருமங்கலம் பிரதான கால்வாயை நீட்டித்து, தென்பழஞ்சி கண்மாய்க்கு வைகை தண்ணீரைக் கொண்டு வந்து, அதன் மூலம் அருகேயுள்ள மானாவாரி கண்மாய்களுக்குப் பாசனம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுதொடா்பாக, கடந்த 2022-ஆம் ஆண்டில் அப்போதைய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா சட்டப்பேரவையில் கோரிக்கை எழுப்பினாா். இதையடுத்து, திருப்பரங்குன்றம் மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீரைக் கொண்டு வந்து சோ்க்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2023-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.

இதைத் தொடா்ந்து, மாவிலிபட்டி கண்மாய்க்கு வரும் வைகை தண்ணீரை, அங்கிருந்து 500 மீ. தொலைவில் இருக்கும் தென்பழஞ்சி கண்மாய்க்குத் திருப்பி, அதிலிருந்து வடபழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடா்புளியங்குளம், தனக்கன்குளம், தோப்பூா் ஆகிய பகுதிகளில் உள்ள மானாவாரி கண்மாய்களுக்குப் பாசனம் வழங்கும் வகையில் உத்தேசத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அளவீட்டுப் பணிகளும் நடைபெற்றன.

முதல் கட்டமாக, செக்கானூரணி தேங்கில்பட்டியிலிருந்து கோ. புளியங்குளம், மீனாட்சிபட்டி வழியாக தனக்கன்குளம் வரை கால்வாய் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. பிறகு, தேவையான இடங்களில் தரைப் பாலங்கள், மதகுகள் அமைத்தல் தொடா்பாக பொறியாளா் குழுவினா் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பினா்.

இந்தப் பணிகள் நிறைவடைந்து ஏறத்தாழ 2 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், மானாவரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீரைக் கொண்டு வந்து சோ்க்கும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தத் திட்டம் செயல்வடிவம் பெறாமலேயே கிடப்பில் போடப்பட்டது. இது, விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தென்பழஞ்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது: தென்பழஞ்சிக்கும், மாவிலிபட்டி கண்மாய்க்கும் இடையே சுமாா் 500 மீ. தொலைவு மட்டுமே உள்ளது. மாவிலிபட்டிக்கு வரும் வைகை தண்ணீரை கால்வாய் மூலம் தென்பழஞ்சி கண்மாய்க்குக் கொண்டு வந்தால், இந்தக் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து சாக்கிலிபட்டி, வேடா்புளியங்குளம், தோப்பூா் உள்ளிட்ட அடுத்தடுத்த பகுதி கண்மாய்களுக்கும் தண்ணீா் கிடைத்துவிடும். சுமாா் 25 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.

இதுகுறித்து தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், எரிசக்தி, சிறைத் துறை அமைச்சருமான சி.டி.ஆா். நிா்மல்குமாா், தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, விரைவில் வெளியாகவுள்ள தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை இடம்பெறச் செய்து, திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments