FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அய்யனாரும் அழகிய குதிரைகளும்!

தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் அய்யனார் கோயில் இருக்கும்.

22 ஆகஸ்ட் 2026, 7:38 pm IST
பகிர்:

தமிழ்நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் அய்யனார் கோயில் இருக்கும். அதைப் பார்க்கும்போதே அந்தக் கிராமத்தின் பொருளாதாரச் சூழல், அய்யனாரை குலதெய்வமாகக் கொண்டிருப்பவர்கள் வசதி வாய்ப்புகளை ஓரளவு அறியலாம்.

'அய்யனார் காவல் தெய்வம்' என்பதால் ஊர் எல்லையில், நீர்நிலைகளின் கரைகளில்தான் அதன் கோயில்கள் அமைந்திருக்கும். கிராமத்தினுள் திருடர்கள், எதிரிகள், கொடிய விலங்குகள் நுழைந்திடாதவாறும், கொடிய நோய்கள் மக்களைப் பாதிக்காதவாறும் அய்யனார் பாதுகாப்பார் என்று கிராம மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. வெட்டவெளியில் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டிருப்பதும் உண்டு.

இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கும் அய்யனார் சிலைகள் தலையில் கிரீடம், நெற்றியில் திருநீறு, கையில் பெரிய வீச்சரிவாள், பெரிய மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தருவார். வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கம்பீரமான சிலைகள் சில நேரங்களில் பயத்தை ஏற்படுத்தும் வகையிலும்கூட இருக்கும். பீடத்தின் மீது இடது காலை மடித்து வைத்து வலது காலை கீழே தொங்கவிடப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். சில கோயில்களில் அய்யனார் தனது துணைவியர்களுடன் காட்சி தருவதும் உண்டு.

Advertisement

Advertisement

சங்க இலக்கியங்களில் அய்யனார்: சங்க காலத்தில் அய்யனார், 'சாத்தன்' என்றழைக்கப்பட்டதாகவும், சீத்தலைச்சாத்தனார் எனும் புலவரது குலதெய்வம் அய்யனார் (சாத்தன்) எனக் கருதப்படுகிறது. சாத்தன் கோயில்கள் நிறைய இருந்தன என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவ சமயக் குரவர் அப்பர் தனது திருப்பயற்றூர் பதிகத்தில் சிவனைப் பற்றிக் குறிப்பிடும்போது 'சாத்தன்' எனும் சொல்லைக் கையாண்டுள்ளார்.

'பார்த்தனுக் கருளும் வைத்தார்

பாம்பரை யாட வைத்தார்

சாத்தனை மகனா வைத்தார்'

என்று எழுதியுள்ளார்.

கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தில் 'மகாசாத்தன் படலம்' எனும் பிரிவில், 'அய்யனார் தனது தளபதியான மகாகாலனை சூரபத்மனிடமிருந்து இந்தி

ராணியை மீட்க அனுப்பினார்' என்றும், 'மகாகாலன் சூரபதுமனுடைய தங்கை அஜமுகியின் கைகளைக் கொய்தான்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அய்யனாரின் குதிரைகள்: யானை, குதிரைகள் அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவான வாகனங்களாகும். மற்ற விலங்குகளோடு ஒப்பிடுகையில் குதிரை வேகமும், விவேகமும் கொண்டது. கலியுக விநாயகர் எனும் வடிவில் பிள்ளையார் குதிரை மீது வருகிறார். சிவன் மாணிக்கவாசகருக்கு அருளும் பொருட்டு, குதிரை சேவகனாய் எழுந்தருள்வதை மதுரைப் புராணங்கள் கூறுகின்றன.

காவல் தெய்வமான அய்யனார் விரைந்து செல்லவும், கரடு முரடு நிறைந்த பாதை, முட்கள் நிறைந்த, மேடு பள்ளமான பாதைகளில் செல்லவும் குதிரையே உகந்தது என்பதால் அய்யனாரின் வாகனம் குதிரை என்றானது. குதிரைகள் சம்ஹார கோலத்தைக் காட்டுவதாகும்.

தர்மம், அதர்மம், காமம், மோட்சம் ஆகிய நான்கும் குதிரையின் கால்களாகவும், கிரியை, ஞானம் ஆகியவை கண்களாகவும், விதி முகமாகவும், மந்திரங்கள் குதிரைக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்களாகவும், பிரணவ மந்திரம் கடிவாளமாகவும், உபநிஷதங்கள் குதிரையின் முதுகுப்பகுதியில் அணிவிக்கப்படும், சேணமாகவும் விளங்குகின்றன.

யாகங்களின் சின்னமாகக் கருதப்படும் குதிரைகள் தீய சக்திகளை விரட்டுவதாகவும், பகைவர்களை குழம்பச் செய்வதாகவும் மக்களிடையே நம்பிக்கை உண்டு. அதனால் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக் கடனாக குதிரை உருவங்களை அய்யனார் கோயிலில் வைத்து வழிபடுகின்றனர்.

இன்றைய தொழில்நுட்பம் வராத அன்றைய காலகட்டத்தில் சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை, யானைச் சிலைகளே அய்யனார் கோயில் முன்பாக அமைக்கப்பட்டன. ஆனால், சுடுமண் சிற்பக்கலை என்பது நீண்டதொரு வரலாற்றைக் கொண்டது.

'நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்

மண்மாண் புனைபாவை யற்று'

எனும் திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் தமிழர்களிடையே சுடுமண், மண் சிற்பக்கலைகள் வழக்கத்தில் இருந்ததை எடுத்துரைக்கின்றன.

வியப்பூட்டும் சுடுமண் சிற்பங்கள்: அய்யனார் கோயில் முன்பாக அமைந்துள்ள சுடுமண் சிற்பங்களை உற்று நோக்கினால், நம் முன்னோர்களின் கைவண்ணம் வியப்பை ஏற்படுத்தும். கோயில் மட்டுமின்றி கிராமங்களுக்கே அழகு சேர்த்துக்கொண்டிருந்த சுடுமண் சிற்பங்கள் இன்று பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன.

ஆனால், சுடுமண்ணால் குதிரைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டபோது உயர்ந்து நிற்கும் காதுகள், அடர்த்தியான முடியுடன் அழகாகக் காட்சியளிக்கும் குதிரையின் வால் மற்றும் பிடரி, சிவந்த நாக்கு, வெள்ளை நிறப் பற்கள் எனக் குதிரையின் சிறிய அளவிலான உடலுறுப்புகளும் அழகாக வடிவமைக்கப்பட்டது.

குதிரையைக் கட்டுப்படுத்தவும், அழகாகக் காட்டவும் அணிவிக்கப்படும் பல்வகையான ஆபரணங்களும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் லகான், கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணியுடன் கூடிய கயிறு, குதிரையை ஓட்டுபவர் அமர்வதற்கு வசதியாக அதன் முதுகுப்பகுதியில் அமைக்கப்படும் சேணம் ஆகியனவும் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டன.

சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டாலும் அதன் உறுப்புகள், அதற்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள் என அனைத்தும் ஆச்சர்யப்பட வைக்கிறது. எந்தக் குதிரைச் சிற்பங்களும் தனியே அமைக்கப்படுவதில்லை. குதிரைச் சிற்பத்தின் இருபுறத்திலும் மனித உருவங்கள் அமைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

ஒருபுறம் துப்பாக்கியுடன் கூடிய காவலர் என்றால், மற்றொருபுறம் குதிரை வீரன் சிற்பங்களும், நடுப்பகுதியில் அமர்ந்த நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ நாய் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். காவலர், குதிரை வீரன் சிற்பங்கள் அதற்கே உரித்தான திடகாத்திரமான உடல், அதற்கான ஆடைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக அய்யனார் கோயில் முன்பாக சுடுமண் குதிரைச் சிற்பங்கள் அமைத்தனர். ஆனால், சுண்ணாம்புக் கலவை, சிமென்ட் ஆகியவை புழக்கத்திற்கு வந்த பின்னர் சுடுமண் சிற்பங்கள் இல்லாமற்போய்விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments