FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கைக்குழந்தையோடு வாய்ப்பு தேடியவர்... செளகார் ஜானகி!

அண்மையில் மறைந்த செளகார் ஜானகி, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியை பூர்வீகமாகக் கொண்டவர்.

30 ஆகஸ்ட் 2026, 11:27 am IST
பகிர்:

அண்மையில் மறைந்த செளகார் ஜானகி, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியை பூர்வீகமாகக் கொண்டவர். தாய்மொழி  கன்னடம்.   தமிழ்,  தெலுங்கு,  கன்னடம்,  மலையாளம்  என  400-க்கும்  மேற்பட்ட  திரைப்படங்களில்  நடித்தவர். முன்னணிக்  கதாநாயகர்கள் 

எம்.ஜி.ஆர்.,  சிவாஜி கணேசன்,  ராஜ்குமார்,  நாகேஸ்வர ராவ்,  ஜெமினி  கணேசன் ஆகியோருடன்  நடித்தவர். 

மத்திய  அரசின்  பத்மஸ்ரீ விருது பெற்ற  செளகார்  ஜானகி,  நடிப்புக்கான  வாய்ப்புத்  தேடி   கைக்குழந்தையுடன்  வந்தார்  என்று  சொன்னால்,  இன்று  பலரும்  ஆச்சரியப்படுவார்கள்.  ஆனால் , அதுதான்  உண்மை.

Advertisement

Advertisement

பிரபல  திரைப்பட  நிறுவனத்தின்   நடிக,  நடிகைகளைத்  தேர்வு செய்யும்  பொறுப்பில்  இருந்த  இளைஞரைத்  தேடி,  தனது  கைக்குழந்தையுடன்  சென்றார்  செளகார்  ஜானகி.  தேர்வு  செய்யும்  பொறுப்பில்  இருந்த  இளைஞர் அழகாக,  நடிகர்போலவே  இருந்தார்.  பளிச்சென்ற  முகம்,  சிவந்த  நிறம்,   விளையாட்டு  வீரரின்  உடற்கட்டு.  கவர்ச்சியான  தோற்றம்  எனக் காணப்பட்ட  அவரிடம்  கையில்  குழந்தையுடன்  வந்த  பெண்ணைப்  பார்த்து , 'என்ன  வேண்டும்?'   என்று  கேட்டார்.  

நடிக்க  வாய்ப்புத்  தேடி  வந்திருப்பதாக  செளகார்  ஜானகி  சொன்னதும்,  அந்த  இளைஞர்  கேட்ட  முதல்  கேள்வி , 'இது  யாருடைய  குழந்தை?'

' என்  குழந்தைதான்.'

தன்  குடும்பச்  சூழ்நிலை,  வறுமையை  விளக்கி,  'குடும்பத்தைக்  காப்பாற்ற   நடிக்க  விரும்புகிறேன்'  என்றார்.

குழந்தையை  ஓரமாக  வைத்துவிட்டு  வந்த வரை  'அருகே வாருங்கள்' என்று  அழைத்து,  அவரது உயரத்தை  அளந்து  பார்த்தார்.  5  அடிதான்.

அந்த  இளைஞர்  முகத்தில்  ஏமாற்றம்.

'சரி,  நடித்த  அனுபவம்  உண்டா?'

'ஆந்திர  மகிள  சபா  பள்ளி  நாடகங்களிலும்,  சென்னை  வானொலி   நாடகங்களிலும் நடித்திருக்கிறேன்.'

மறுபடியும்  அந்த  இளைஞர்  முகத்தில்  ஏமாற்றம்.

'புகைப்படம்  ஏதாவது  இருந்தால்  கொடுத்துவிட்டுச்  செல்லுங்கள்.  இப்போது  வாய்ப்பு  இல்லை.   பிறகு  சந்தர்ப்பம்  அமைந்தால்  சொல்லி  அனுப்புகிறோம்'  என்று  அனுப்பிவிட்டார்.

அந்த  நேரத்தில்  இருவருமே  நினைத்திருக்கவில்லை...   இருவரும்  சேர்ந்து  பல  வெற்றிப் படங்களைத்  தரப்  போகிறோம்  என்று. அந்த  இளைஞர்  நடிகர்  ஜெமினி  கணேசன்.

அவர்  நடித்த  முதல் படம்  'செளகார்'.  அந்த  நாளில்  இன்னொரு  ஜானகியும்  திரையுலகில்  இருந்தார்.  அவர்  வி.என். ஜானகி.  ஆகவே,  இவரது  பெயரில்  முதல்  படத்தின்  பெயர்  'செளகார்'   இணைந்து கொண்டது.

கைக்குழந்தையுடன்  வந்த   செளகார்  ஜானகி,   இன்னொரு  குழந்தை  நட்சத்திரத்தை - பின்னாளில்  பெரும்  நட்சத்திரமாகி  மின்னியவர் -  திரைப்படத்தில்  நடிக்கக் காரணமானார்.

வாஹினி  ஸ்டூடியோவில்  ஒருநாள்  ஷூட்டிங்கில்  இருந்தபோது  ஐந்து  வயதுப் பெண்  குழந்தையுடன்  ஒரு  பெண்  அங்கே  வந்தார்.   சிறுமியின்  தாய்,  குழந்தையை  நடிப்பதற்கு  வாய்ப்பு தேடி  ஸ்டூடியா  வந்துள்ளதாக  தெரிவித்தார்.

அந்த  நேரத்தில்  சின்னப்பா  தேவர்  'துணைவன்'  படத்துக்காக  ஜானகியை  புக்  செய்திருந்தார்.  ஒரு  குழந்தை  நட்சத்திரத்தை  தேடிக்  கொண்டிருப்பதாகவும்  சொன்னார்.  அது  நினைவுக்கு  வந்ததும்,  அந்தச்  சிறுமியை,  ஸ்டூடியோவின்  வேறு  பகுதியில்  இருந்த  சின்னப்பா  தேவரிடம்  ஜானகி  அழைத்துச்  சென்றார். இந்தக் குழந்தைக்கு  முருகன்  வேடம்  போட்டால்  அழகாக  இருக்கும்  என்று  செளகார்  ஜானகி  பரிந்துரையும்  செய்தார். அந்தக் குழந்தை  வேறு  யாருமில்லை.   தமிழிலும்  ஹிந்தியிலும்  மின்னிய  நட்சத்திரம்  ஸ்ரீதேவி.

சோகமான  கதாபாத்திரங்களில்  நடித்து  வந்த  செளகார்  ஜானகியை  'புதிய  பறவை'  படத்தில்  நாகரிக  உலகைச்  சேர்ந்த  பெண்ணாக  நடிக்க  பரிந்துரைத்தவர்  சிவாஜி.  முதலில்  இயக்குநர்  தாதா  மிராஸ்  தயங்கினாலும், படப்பிடிப்பு  நடத்தி,  ரஷ்  போட்டுப்  பார்த்த  பிறகுதான்,  சிவாஜி  கூறியது  சரி  என  ஒப்புக்கொண்டார்.

'உயர்ந்த  மனிதன்'  படத்தில்,  சிவாஜிக்கும்  செளகார்  ஜானகிக்கும்  நடக்கும்  வாக்குவாதம்,  குடும்பச் சண்டை  மிகச்  சிறப்பாக  எல்லாராலும்  பாராட்டப்பட்டது.

நடிப்பைக்  குறைத்துக் கொண்டு,  சேத்துப்பட்டில்  'கோகனட்  குரோவ்'  என்ற  ஓட்டலை  வெற்றிகரமாக  நடத்தினார்.  வற்புறுத்திக்  கேட்டுக்கொண்டவர்கள்  படங்களில்  மட்டும்  நடித்து  வந்தார்.

'ரோஜா  இதழ்களில்  உருண்டோடும்  பனித்துளியையும்,  மழையில்  நனைந்து  இளம்  வெயிலில்  மின்னும்  பசுந்தளிர்களையும்  ரசிப்பவள்  நான்.  எளிய  அழகுகளை  ரசித்துக்கொண்டு  பதினைந்து  வயதில்  குடும்ப  வாழ்க்கைக்குத்  தயாரானேன்.  ஆனால் , வாழ்க்கை  எனக்கு  விதித்தது,  அதற்கு  நேர்மாறானது.  கண்கள்  கூசும்  ஒளியில்  அடுக்கு மொழி  வசனங்களில்  செயற்கையாகப்  பேச வேண்டியதாயிற்று' என்று  வேடிக்கையாகப் பகிர்ந்து கொண்டவர்  செளகார்  ஜானகி, 2022-ஆம்  ஆண்டு  மத்திய  அரசின்  பத்மஸ்ரீ விருது பெற்றபோது   தினமணிக்கு   அவர் அளித்த  பேட்டியில்,  '1990-ஆம்  ஆண்டு  சென்னையில்  இருந்து  பெங்களூரு  வந்துவிட்டேன்.  என்  தங்கை  கிருஷ்ணகுமாரிக்கு  பெங்களூரில்  மிகப் பெரிய  எஸ்டேட்  இருந்தது.  அதில்  மூன்று  ஏக்கர்  நிலத்தை  வாங்கி,  அதில்  வீடு  கட்டிக் கொண்டு  தனியாக  இருக்கிறேன். இயற்கையோடு  இணைந்த  நிதானமான  அமைதியான  வாழ்க்கை.  இது  எனக்கு  மிகவும்  பிடித்திருக்கிறது ' என்று  குறிப்பிட்டிருந்தார்.

-எம்.பாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments