மிளகாய்ச் சந்தை
கர்நாடகத்தில் உள்ள ஹாவேரி மாவட்டத்துக்கு உள்பட்ட பைடாகி நகரம் மிளகாய்க்கு மிகவும் பிரபலம்.
கர்நாடகத்தில் உள்ள ஹாவேரி மாவட்டத்துக்கு உள்பட்ட பைடாகி நகரம் மிளகாய்க்கு மிகவும் பிரபலம். 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி, இன்று வரை அங்கு நடைபெறும் மிளகாய்ச் சந்தையில் ஆண்டுக்கு ரூ.3,070 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதன்வாயிலாக, ரூ.18.42 கோடி அளவுக்கு வரியாக அரசுக்குக் கிடைக்கிறது.
விவசாயிகள் ஒவ்வொரு நாள் காலையிலும் இங்குள்ள மிகப் பெரிய சந்தை வளாகத்துக்கு உலர்ந்த சிவப்பு மிளகாய்கள் ஏற்றப்பட்ட நூற்றுக்கணக்கான லாரிகளுடன் வருகின்றனர். சில மணி நேரங்களில், நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த அடர் சிவப்பு மிளகாய்களை வாங்க வியாபாரிகள் குவிகின்றனர். பிற்பகலுக்குள் அவை அனைத்தும் விற்பனையாகி, இந்திய மசாலா வியாபார நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆசியாவின் மிகப் பெரிய உலர்ச் சந்தைகளில் ஒன்றான இந்தச் சந்தையில் வெளிப்படையான ஏலமும், உடனடியாக பண விநியோகமும் சிறப்பாகும். இந்தச் சந்தையில் பைடாகி மிளகாய் மட்டுமல்லாமல், கர்நாடகாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்படும் மிளகாய்களும் ஏலம் விடப்படுகின்றன. கர்னூல், அதோனியைச் சேர்ந்த விவசாயிகளும் தங்களது உற்பத்தி மிளகாய்களைக் கொண்டு வந்து விற்கின்றனர்.
Advertisement
Advertisement
பைடாகி டப்பி, பைடாகி கட்டி, குண்டு மிளகாய் என மூன்று ரகங்கள் இங்கு விற்பனையானாலும், 'பைடாகி டப்பி' ரகமே அதிக விலை பெறுகிறது. அதன் பிரகாசமான சிவப்பு நிறம்தான் தனித்துவமான நறுமணமும், சுருக்கமான தோற்றத்துக்காகவும் பாராட்டப்படுகிறது.
இந்த பைடாகி மிளகாய், அரை வறண்ட கால நிலை உள்ள பிரதேசத்தில் வளர்கிறது. மலைநாடு, சமவெளிக்கு இடையே அமைந்துள்ளதே இந்த நகரின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். 2011-இல் இந்த ரகத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இந்த அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் 16 மிளகாய்களில் இதுவும் ஒன்றாகும். இந்த வகை மிளகாய்கள் அமெரிக்கா, ரஷியா, மலேசியா, இந்தோனேசியா உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
பைடாகி டப்பி குட்டையாகவும் பருமனாகவும் அதிக விதைகளுடனும் அடர் நிறத்துடன் இருப்பதால் மசாலாக் கலவைகள், ஒலியோரெசின் பிரித்தெடுப்பதற்கு மிகவும் உதவியாகவும் உள்ளன. மிளகாயில் உள்ள இயற்கை நிறமூட்டும் 'ஒலியோரெசின்' என்ற பொருளானது பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ்கள், மசாலாக் கலவைகளிலும், உதட்டுச் சாயம், நகப்பூச்சு உள்ளிட்ட மருந்து, அழகுச் சாதனப் பொருள்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
தண்டுகள் இல்லாத மிளகாய்கள்தான் நன்கு விற்பனையாகிறது. மிளகாயில் உள்ள இந்தத் தண்டை அகற்றும் பணியைப் பெண்கள் செய்து, கிலோவுக்கு பத்து ரூபாய் ஊதியமாகப் பெறுகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.