FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நாவறட்சி தணிய...!

கோடைக்காலங்களில் ஏற்படும் கடும் நாவறட்சி தணிய என்ன செய்ய வேண்டும்?

Updated On : 31 மே 2026, 12:38 pm IST
பகிர்:

கோடைக்காலங்களில் ஏற்படும் கடும் நாவறட்சி தணிய என்ன செய்ய வேண்டும்? காய்ச்சல் வந்தது போல் உடல் சுடுகிறது. வியர்வை அடங்குவதில்லை. வேர்க்குரு அரிப்பு வேறு படுத்துகிறது. நிறைய தண்ணீர் குடித்தால் பசி மந்தம் ஏற்படுகிறது. இவர்களுக்கு மூலிகைகள் மூலம் தீர்வு கிடைக்குமா?

- சந்தோஷ், திருச்சி.

தற்சமயம் உங்களுக்கு பெயரில் மட்டும்தான் சந்தோஷம் இருப்பதாகத் தெரிகிறது. கோடையின் தாக்கத்தினால் அவதியுறும் உங்களுக்கு ஆயுர்வேதம் பரிந்துரை செய்யும் 'ஷடங்கபானீயம்' எனும் ஆறு மூலிகைகள் கலந்த மருந்துப் பொருள்களால் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement

Advertisement

1. கோரைக்கிழங்கு, 2. சந்தனச் சிராய், 3. சுக்கு, 4. குருவேர் (இருவேலி), 5. பர்ப்படப்புல், 6. வெட்டிவேர் -இவற்றை நாட்டு மருந்துக் கடையிலிருந்து வாங்க முடியாவிட்டால், ஒரு சில ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பாளர்கள் பொட்டலமாக பைகள் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிக்கொள்ளலாம்.

இவற்றை சம அளவு எடுத்து கஷாயம் செய்து, தேன்மேம்பொடி சேர்த்துக் குடிக்க, உண்ட உணவு செரிக்கும். நாவறட்சி அடங்கும். காய்ச்சல் குணமாகும். கோடைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்குப் பானமாகக் கொடுக்கலாம்.

மேலும் மசூரிகா போன்று உடலில் ஏற்படும் அம்மைக் கட்டு, கொப்பளங்களுக்கு இந்த மருந்துக் கூட்டத்தில் உள்ள சுக்கை நீக்கி, சீந்தில் கொடி சேர்த்துக் கொடுக்க நல்ல பலன். இதைக் கஷாயமாகவும் பானீய மூலிகைத் தண்ணீராகவும் பயன்படுத்தலாம்.

பானீய மூலிகைத் தண்ணீர் செய்முறை: ஒன்றரை லிட்டர் தண்ணீரில் 50 கிராம் மருந்தைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். பாதியாக வற்றியதும், தண்ணீரை வடிகட்டி, ஆற வைத்து, அதனை நாவறட்சி உள்ள நேரத்தில் தண்ணீருக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.

ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய சந்தனாதி, ஹிமஸôகரம், அமிருதாதி போன்றவற்றில் ஒன்றை தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும். மாலை நேரத்தில் குளியலை வைத்துக் கொள்வது நலம். சாவகாசமாகக் குளிக்கலாம். குளித்த பிறகு வெயிலில் அலைய வேண்டி இராது. பச்சைப் பயறு அல்லது கடலை இவற்றின் மாவு எண்ணெய் போக்க உபயோகிக்க நல்லது. சிறிதளவு எண்ணெய்யின் பசை தலையில் இருக்கும்படி விடுவது நலம். உடல் குளிர்ச்சியாகும். இரவில் நன்றாகத் தூக்கம் வரும். வியர்வை வழிந்தோடாது. மறுநாள் ஊக்கமும் பலமும் குன்றாமல் இருக்கும்.

முற்றின தேங்காயைத் துருவி, அரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். இதை விட்டு சீரகத்தை அம்மியில் வெண்ணெய் போல் அரைத்து, பிறகு அந்தப் பாலிலையே அரைத்த சீரகத்தை சந்தனம் போல் கரைத்துக் கொள்ளவும். வியர்க்குரு கட்டி, கோடைக் கொப்பளங்கள் உள்ள இடங்களில் இதைத் தடவித் தேய்த்து உலரவிடவும். மறுபடியும் அதன் மேல் தடவி

விடவும். ஒரு நாளில் இப்படி ஐந்தாறு தடவை தடவலாம். ஒன்றிரண்டு தினங்களில் மிகக் கடுமையான வியர்க்குரு கட்டிகளும், கோடைக் கொப்பளங்களும் குணமாகிவிடும்.

மாணி பத்ரம், திரிவிருத் போன்ற லேஹிய மருந்துகளை 15 நாள்களுக்கு ஒரு முறை மருத்துவர் ஆலோசனையுடன் அளவைத் தீர்மானித்துச் சாப்பிட்டு, பேதி மூலம் குடலைச் சுத்தப்படுத்திக் கொண்டால் ரத்தக்கட்டி, கோடைக் கொப்பளம், அம்மை போன்றவை வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

உணவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதுவும் இரவில் கூடவே கூடாது. முன்பெல்லாம் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் கூடுமிடங்கள், ரயில் நிலையங்களில் வெட்டி வேர்த் தட்டிகளை சன்னலில் தொங்கவிட்டு, தண்ணீர் தெளித்து வைப்பார்கள். அறைகள் குளிர்ச்சியாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கோடைக்கு உகந்த இயற்கையான குளிர்ச்சி முறையான இதை நீங்கள் வீட்டில் செய்ய முயற்சிக்கலாம். வெட்டிவேர் ஊறிய மண்பானைத் தண்ணீர் குடிக்க மிகவும் நல்லது.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments