FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருமந்திரம் மலர்ந்த திருவாவடுதுறை!

திருவாவடுதுறையில் அண்மையில் நடைபெற்ற 23-ஆவது திருமந்திர மாநாடு இளைய தலைமுறையினர் திருமந்திரத்தின் சிறப்புகளையும், திருமூலர் வரலாற்றையும் அறிய உதவும் வாய்ப்பாக அமைந்திருந்தது.

7 நவம்பர் 2026, 6:38 pm
பகிர்:

சுஜாதா மாலி

திருவாவடுதுறையில் அண்மையில் நடைபெற்ற 23-ஆவது திருமந்திர மாநாடு இளைய தலைமுறையினர் திருமந்திரத்தின் சிறப்புகளையும், திருமூலர் வரலாற்றையும் அறிய உதவும் வாய்ப்பாக அமைந்திருந்தது. 51 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த மாநாடு, தமிழிலக்கியங்களைப் போற்றிடும் வகையில் சிறப்புடன் நடைபெற்று ஆன்மிகவியாளர்கள், தமிழறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

சோழநாடு காவிரியால் வளம் பெற்றதால், ஆற்றின் இரு கரையிலும் உள்ள பல தலங்கள் 'துறை' என்ற பெயராலேயே வழங்கப்படுகின்றன. அவ்வகையில் பசு வளம் மிக்க ஊராக இருந்தமையால் 'திருவாவடுதுறை' என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்தத் திருவாவடுதுறை, இறைவி பசு வடிவுடன் வழிபட்ட தலமாகும். 'திரு +ஆ+அடுதுறை = திருவாவடுதுறை' என்று பெயர் மருவியது. மூவர் முதலிகளால் பாடல் அருளப்பெற்ற தலம் இது.

Advertisement

Advertisement

சேந்தனார் திருவிசைப்பா, திருமூலர் திருமந்திரம், திருமாளிகைத்தேவர் மற்றும் நமசிவாய மூர்த்திகள் சமாதிக் கோயில் முதலியன இங்குள்ளன. கயிலையிலிருந்து தென்னாடு வந்த சுந்தரநாதயோகி என்பார் மூலன் எனும் ஆடு மேய்ப்பவரின் உடல் தாங்கி தவம் செய்த இடம் இந்த திருவாவடுதுறை. இங்குள்ள கோயிலில் இருக்கின்ற அரச மரத்தின் கீழ்தான் திருமூலர் யோகம் பயின்றதாக வரலாறு.

திருமூலரால் அருளப்பட்ட 'திருமந்திரம்' எனும் மெய்யியல் நூல் 'அன்பே சிவம்' என்கிற உயர்ந்த கருத்தைக் கூறும் சைவ சித்தாந்தத்தின் தலையாயப் படைப்பாகும். திருமூலரின் ஓலைச் சுவடிகள் துறைசை ஆதீனத்து 'சரசுவதி மகால்' நூல் நிலையத்தில் பாதுகாக்கப் பெற்றுள்ளன. திருமந்திரம் நூல் முழுமைக்கும் ஆதீன மகா வித்துவான் ச. தண்டபாணித் தேசிகரால் 'பஞ்சாக்கர தீப உரை' எனும் பெயரால், விரிவுரை எழுதப் பெற்று, ஆதீன வெளியீடுகளாகக் கிடைக்கப் பெறுகின்றன. இதுவரை திருமந்திரம் தொடர்பான 85-க்கும் மேற்பட்ட நூல்கள் திருமடத்தால் வெளிவரச் செய்யப்பட்டுள்ளன.

திருவாவடுதுறை ஆதீன குரு முதல்வரின் மகரத்தலைநாள் குரு பூஜை விழாவில், திருமந்திர நூல் (ஒரு பகுதி) வெளியீடும், திருமந்திரத்தில் சிறந்து விளங்கிடும் அறிஞர் ஒருவருக்கு விருது வழங்குதலும் ஆதீனத்தாரால் நடத்தப் பெறுகின்றன.

இந்தச் சிறப்புகள் மிகுந்த ஊரில் முதலாவது திருமந்திர மாநாடு இருபத்தொன்றாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் காலத்தில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் துவங்கப் பெற்றது. அவரது காலத்திலேயே 11 மாநாடுகள் (1964 வரை) தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன. அடுத்தடுத்து பட்டத்தில் விளங்கிய குருமகா சந்நிதானங்கள் காலத்திலும் இதுபோன்று 22 மாநாடுகள் நடத்தப்பெற்று வந்தன.

அதன்பிறகு தடைபட்டிருந்த இந்த நிகழ்வை 51 ஆண்டுகள் தற்போதைய 24-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் மீண்டும் புத்தாக்கம் செய்து துவக்கி வைத்துள்ளார். இது திருவாவடுதுறையில் நிகழ்த்தப்பட்டுள்ள 23-ஆவது மாநாடாகும்.

திருமூலரின் குரு பூஜை தினமான ஐப்பசி - அசுவதி தினத்தையொட்டி, மூன்று நாள்கள் சிறப்பு விழாவாக இந்த மாநாடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

அக்டோபர் 23-இல் தொடக்க நாளன்று திருமுறைப் பெட்டகத்தை யானையின் மீது வைத்து தமிழறிஞர்கள், ஓதுவார்கள் உடன் சூழ திருவீதியுலா நிகழ்த்தப்பட்டது. திருவாவடுதுறை குரு மகா சந்நிதானம் குத்து விளக்கேற்றி ஆசியுரை வழங்கி மாநாட்டு விழாவைத் துவக்கி வைத்தார். இந்த விழாவில் 'திருமந்திரம் - மூலம்' எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.

இரண்டாம் நாளன்று 'திருமந்திரம் அருளிய ஞான சாதனங்கள்' எனும் நூல் வெளியிடப்பட்டது. மூன்றாம் நாள் திருமந்திரக்கட்டுரையான 'இரண்டாம் தந்திரம் (பாகம் - 1)' என்கிற நூலை வெளியிட்டு நிறைவு ஆசியுரை வழங்கினார்.

மூன்று நாள்கள் நடைபெற்ற மாநாட்டில் பல அமர்வுகளில் பல தலைப்புகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. திருமந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தந்திரங்கள் குறித்து விளக்கவுரை அளிக்கப்பட்டன. திருமந்திரத்தில் சிறந்து விளங்கிடும் தமிழறிஞர்களுக்கு விருதுகளும் பட்டங்களும் வழங்கப் பெற்றன.

இதுதவிர, 'திருமூலர் வாழ்வியல் வரலாறு - நாட்டிய நாடகம்', 'திருமந்திர முற்றோதல்' முதலான பல நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.