முகப்பு

மலைக்க வைக்கும் மலை அரண்மனை!

கேரளத்தின் முதன்மையான பாரம்பரிய அருங்காட்சியகமாய், மலைக்க வைக்கும் அரண்மனையாய், அமைதியான மலைகளின் உச்சியில் திருப்போணித்துரா மலை அரண்மனை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கொச்சி மன்னர்களின் செழுமை, வரலாறு, கலாசாரம், பாரம்பரியத்துக்குப் பெருமைமிக்கச் சான்றாக விளங்கும் இந்த அரண்மனையின் கம்பீரத் தோற்றம், பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

15 வினாடிகள் முன்பு
மலைக்க வைக்கும் மலை அரண்மனை!
பகிர்:

கேரளத்தின் முதன்மையான பாரம்பரிய அருங்காட்சியகமாய், மலைக்க வைக்கும் அரண்மனையாய், அமைதியான மலைகளின் உச்சியில் திருப்போணித்துரா மலை அரண்மனை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கொச்சி மன்னர்களின் செழுமை, வரலாறு, கலாசாரம், பாரம்பரியத்துக்குப் பெருமைமிக்கச் சான்றாக விளங்கும் இந்த அரண்மனையின் கம்பீரத் தோற்றம், பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

மலை மீது வாகனங்கள் சென்று வர, வளைந்து வளைந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலை வசதிகள் உள்ளன. இந்தப் பாதையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், தரையில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல எழிலான படிக்கட்டுகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களைக் கடந்த காலத்தோடு வாழச் செய்யும் இதன் கட்டடக்கலை, காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள், கொச்சி மன்னர்களின் கடந்த கால நினைவுகளுடன் பாரம்பரியத்தின் காவியத்தை நம் கண் முன் கொண்டு வருகிறது.

1865-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கம்பீரமான கட்டடம், ஒருகாலத்தில் கொச்சி ஆட்சியாளர்களின் வசிப்பிடமாக இருந்தது. அவர்களின் நேர்த்தியான ரசனையையும் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் பறைசாற்றிய இடமாகத் திகழ்ந்தது. இப்போது இந்த அரண்மனை, பல நூற்றாண்டுகள் பழைமையான கலைப்பொருள்கள், தொல்பொருள்களின் புதையலைக் கொண்ட தொல்பொருள் அருங்காட்சியகமாகவும், கேரளாவின் முதல் பாரம்பரிய அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது.

Advertisement

Advertisement

மலை அரண்மையில் வாழ்ந்த பரீட்சித் தம்புரான் எனும் 18 -ஆம் இராம வர்மா, கொச்சியின் கடைசி மன்னர். 1949-ஆம் ஆண்டில் கொச்சியும் திருவிதாங்கூரும் இணைக்கப்படுவதற்கு முன்பு அவர் இந்த கொச்சி சமஸ்தானத்தை ஓராண்டுக் காலம் ஆட்சி செய்தார்.

கண்களைக் கவரும் கலையம்சங்கள்

52 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நேர்த்தியான படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இந்த அரண்மனை வளாகம் 49 கட்டடங்களைக் கொண்டுள்ளதுடன், பாரம்பரிய கேரள கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. டச்சு கட்டடக் கலைப் பாணியின் தனித்துவமான சாயலையும் கொண்டுள்ளது. இங்குள்ள மிகப் பழைமையான கட்டடங்கள் பாரம்பரிய மாநிலத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகமாகச் செயல்படுகிறது. இதில் சிற்பங்கள், கையெழுத்துப் பிரதிகள், கொச்சி அரசக் குடும்பத்தின் உடைமைகள், எண்ணெய் ஓவியங்கள், சுவரோவியங்கள் என அரிய பழங்காலப் பொருள்களின் பட்டியல் முடிவற்றது.

குடைக்கல், தொப்பிக்கல், சிந்து சமவெளி, ஹரப்பா போன்ற பண்டைய நாகரிகங்களின் செங்கற்கள், மரத்தாலான நினைவுச் சின்னங்கள், தூர கிழக்கின் பழங்கால மட்பாண்டங்கள் ஆகியவற்றையும் இங்கு காணலாம். மரகதங்கள், வைரங்கள், மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட, ஒன்றே முக்கால் கிலோ எடை கொண்ட கொச்சி வம்ச மன்னர்களின் மகுடம் இன்றும் இங்குள்ளது. அரண்மனையின் உருவப்படக்கூடத்தில் மன்னர்களின் உருவப்படங்கள், நேர்த்தியான தஞ்சாவூர் ஓவியங்கள், கலைஞர்களின் நுட்பமான திறமை, கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

மறுபுறம் சமகால கலைக்கூடம், புகழ்பெற்ற ராஜா ரவிவர்மா உள்ளிட்டோரின் கலைப்படைப்புகளையும் ஓவியங்களையும் காட்சிப்படுத்துகிறது. அரச குடும்பத்தினர் பயன்படுத்திய 150-க்கும் மேற்பட்ட பீங்கான் பொருள்கள் உள்ளன. ஆட்டுத்தோலில் எழுதப்பட்ட பைபிள் கையெழுத்துப் பிரதி நூற்றாண்டுகளைக் கடந்தும் புத்தம்புதிதாகக் காட்சி அளிக்கிறது.

கல்வெட்டுக் கூடங்கள், கடந்த காலங்களைப் பற்றிய மதிப்புமிக்கப் பார்வைகளை அளிக்கின்றன. செப்புப் பட்டயங்கள், பனை ஓலைகள், கல்வெட்டுகளின் தொகுப்பு, முற்கால நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மரச் சிற்பக் கூடத்தில் 14- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருள்கள் உள்ளன. அவற்றில் பெருங்கற்கால எச்சங்கள், கிரீடங்கள், சிற்பங்கள், தந்தப் பொருள்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட மன்னர்களின் கல்வெட்டுகள் அடங்கும். மேலும், நந்தி, தாமரை மீது அமர்ந்திருக்கும் விநாயகர் ஆகியோரின் அழகான சிற்பங்களும் உள்ளன.

ஆயுத, சிற்பக் கூடங்கள்

மிகவும் சுவாரசியமான வகையில் உள்ள அருங்காட்சியகத்தின் ஆயுதக் கூடத்தில் பழங்கால ஆயுதங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல் சிற்பங்கள் பெரும்பாலும் 10- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை,.அவற்றில் பெரும்பாலானவை நடுகற்களாகும். 14 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலோகப் பொருள்கள், அரிய வெள்ளி, வெண்கலப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு வடிவங்களில் அரச குடும்பத்தினர் பயணம் செய்யும் வாகனங்கள் வியப்பூட்டுகின்றன.

படமாக்கப்பட்ட திரைப்படங்கள்

மலை அரண்மனையில் மணிச்சித்ரதாழ், களியூஞ்சல், டிரீம்ஸ், சோட்டா மும்பை உள்ளிட்ட ஏராளமான மலையாள திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் மான்கள் பூங்கா, சிறுவர் பூங்கா, வரலாற்றுக்கு முந்தைய பூங்கா ஆகியன உள்ளன. அரண்மனை வளாகத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தாவரங்கள் கொண்ட தாவரவியல் பூங்கா உள்ளது.

காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் அருங்காட்சியகம் திறந்திருக்கும். திங்கள்கிழமை வார விடுமுறை.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில், கொச்சி மாநகரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இந்த திருப்போணித்துரா அரண்மனை அமைந்துள்ளது. இதன் அருகில் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் உள்ளது.

-பனையபுரம் அதியமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.