FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அம்பு போடும் அம்மன்!

ராமநாதபுரம் தசரா விழாவில் ராஜராஜேஸ்வரி அம்மன்..

16 அக்டோபர் 2026, 3:31 pm IST
பகிர்:

கர்நாடக மாநிலம், மைசூரில் கொண்டாடப்படும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. அதேபோல், கடந்த 400 ஆண்டுகளாக ராமநாதபுரம் சமஸ்தானம் அரண்மனையான ராமலிங்க விலாசத்தில் இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அரண்மனை வளாகத்தில் தொடங்கிய இவ்விழா, அக்டோபர் 20}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக அந்த வளாகமே இந்திரலோகம் போல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இனி, இந்த விழா குறித்தும், இங்கு ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உருவான வரலாற்றையும் பார்க்கலாம்.

கி.பி. 1605- ஆம் ஆண்டில் இருந்து ராமநாதபுரம் பகுதியை சேதுபதி மன்னர்கள் சீரும், சிறப்புமாக ஆட்சி நடத்தி வந்தனர். அந்தக் காலத்தில் மன்னர்கள் இந்த அரண்மனையில்தான் வசித்துவந்தனர். இதன் நடுவே உள்ள மாளிகையே "ராமலிங்க விலாசம்'. மதுரை நாயக்க மன்னரான முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் (கி.பி. 1601}1609) ஆட்சிப்பொறுப்பை சடைக்கத்தேவர் என்பவரிடம் ஒப்படைத்தார். ராமேசுவரம் வரை இவர்களின் ஆளுமை இருந்தது.

Advertisement

Advertisement

ராமேசுவரத்துக்கு சேது என்றும் பெயர். அதைப் பாதுகாப்பது இவர்களின் முக்கியக் கடமையாக இருந்தது. அதனால் இவர்களை சேதுபதி காத்ததேவர் என அழைத்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரம் வந்து செல்லும் தீர்த்த யாத்ரீகர்களுக்கு இவர்கள் பாதுகாப்பு அளித்தனர். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் (கி.பி.1623 } 1659) ஆட்சியில் நடந்த மைசூரு யுத்தத்தின் போது ரகுநாத சேதுபதி படைகளைத் தந்து, அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இதனால் திருமலை நாயக்கர் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக "திருமலை' என்ற பட்டத்தைத் தந்தார். அதோடு நில்லாமல் மைசூரிலிருந்து எடுத்து வந்த தங்கத்தாலான அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மனின் விக்ரகத்தையும் தந்தார். அப்போது, "" வரும் காலங்களில் மைசூரில் நடைபெறும் மாபெரும் தசரா விழாவைப் போல் ராமலிங்க விலாசத்திலும் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்பட வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து உடனடியாக அரண்மனை வளாகத்தில் வடக்குப் பார்த்த வண்ணம் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. அன்று முதல் சேதுபதி மன்னர்களின் குலதெய்வமாக இந்த அம்மனை வழிபட்டு வருகின்றனர். அக்கால நடைமுறைப்படி போருக்குச் செல்லுமுன் கொற்றவைக்கு எருமைக்கடாவை பலிகொடுத்துச் செல்லும் வழக்கம் இங்கும் இருந்தது.

பாஸ்கர சேதுபதி மன்னர் (கி.பி.1889}1903) ஆட்சியில், கர்நாடக மாநிலம், சிருங்கேரி சாரதா பீடம் சங்கராச்சாரியார் ஸ்ரீநரசிம்ம பாரதி தீர்த்த சுவாமிகள், தீர்த்த யாத்திரையாக ராமேசுவரம் வந்த சமயத்தில், ராமலிங்க விலாசத்தில் 48 நாள்கள் தங்கியிருந்து, அம்மனுக்கு நித்ய பூசைகள் செய்து வணங்கினார். அது சமயம் உயிர்ப்பலி கொடுத்து கொற்றவை வழிபாடாக இருந்து வந்த அம்மனை சாத்வீகப்படுத்தி வைதீக பூசை முறைகளாய் மாற்றிட விரும்பினார்.

எனவே, அர்த்த மண்டப வாசலில் ருத்ர ரூபத்தைக் குறைக்க ஆஞ்சநேயரையும், சக்திரூபத்தை வெளிப்படுத்த கிருஷ்ணரையும் பிரதிஷ்டை செய்து வைத்தார். மேலும், சிருங்கேரி சாரதா பீடத்தில் தீட்சை வாங்கிய வேத விற்பன்னர்களே அன்று முதல் நித்ய பூசை செய்து வர கட்டளையும் இட்டார். ஆக, அன்று முதல் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு வைதீக பூசை முறைகள் தொடங்கி தொடர்ந்து வருகிறது.

ராஜா சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி ஆட்சியில் (கி.பி.1928}1967) சிருங்கேரி சங்கராச்சாரியார் ஆலோசனைப்படி மூலவர் ராஜராஜேஸ்வரி அம்மனின் எதிரே விநாயகர் விக்ரகம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மைசூரு தசரா விழாவின்போது தங்க அம்பாரியில் மைசூரு மன்னர் ஊர்வலமாக வருவது மாதிரி ராமநாதபுரத்தில் நடைபெறும் தசரா விழாவில் விஜயதசமி அன்று அம்பு போடும் நிகழ்ச்சியில் மன்னரே வெள்ளி அம்பாரியில் ஊர்வலமாக வந்து கேணிக்கரை மகர்நோன்பு திடவில் அம்பு போடுவது வழக்கம். ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி காலம் வரை இந்த வழக்கம் நீடித்திருந்தது. அவரது காலத்துக்குப் பிறகு இப்போது வேத விற்பன்னர்களே அம்பு போடுவது வழக்கமாக உள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் 20}ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமியன்று, இரவு 7 மணிக்கு அரண்மனை வளாகத்தில் இருந்து ராஜராஜேஸ்வரி அம்மன் தங்க

சிம்மவாகனத்தில், மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் மேள, தாளங்களுடன் புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கேணிக்கரை மகர்நோன்பு திடலில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தரிசனத்துக்காக காலை 9 மணிமுதல் பகல் 12.30 மணி வரையும்; மாலை 6 மணிமுதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும் ராமநாதபுரம் சமஸ்தானம் அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

- அருப்புக்கோட்டை வெ. கணேசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments