பறக்கும் கார்
உத்தரகண்ட் அல்மோராவைச் சேர்ந்த ரவி தம்தா இணையத்திலேயே கற்று மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கியுள்ளார்.
உத்தரகண்ட் அல்மோராவைச் சேர்ந்த ரவி தம்தா இணையத்திலேயே கற்று மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் காரை உருவாக்கியுள்ளார். இவர் பொறியியல் பட்டம் பெறாதவர். பதின்மூன்று ஆண்டுகள் தனி மனித உழைப்பில் கண்டறியப்பட்ட காருக்கு 'ஹபிடா ஸ்கைநெக்ஸ்' என்று பெயர் சூட்டியுள்ளார். ஹபிடாவும் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.
உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க்கின் 'டெஸ்லா' கார் நிறுவனத் திட்டம் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதற்குப் பதிலாக வானில் பயணிக்கக்கூடிய காரை பல நூறு கோடி ரூபாய் செலவில் வடிவமைத்துள்ளது. ஆனால், இந்தியாவின் 'ஹபிடா'வை நவீனப்படுத்த சில லட்சம் ரூபாய் போதும்.
ஜகேஸ்வர் தாம் அருகே உள்ள கஃப்லிகான் மலைப்பகுதிகளில் பிறந்து வளர்ந்த ரவி, அந்தப் பகுதியில், ஒரு மருத்துவமனையை அடைய, வளைந்து நெளிந்த சாலைகளில் பல மணிநேரம் பயணிக்க வேண்டியிருக்கும். இதற்காக அவர் சிந்திக்கத் தொடங்கியதன் விளைவுதான் பறக்கும் கார். சாதனைப் பயணம் குறித்து ரவி கூறியது:
Advertisement
Advertisement
'மலைப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளைச் சென்றடைவதில் உள்ள சவால்களால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால் செங்குத்தாகப் புறப்பட்டு தரையிறங்கக்கூடிய பறக்கும் வாகனம் ஒன்றை உருவாக்க 13 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானித்தேன்.
மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தூரம் என்பது எப்போதும் கிலோ மீட்டரில் அளவிடப்படுவதில்லை. வளைந்து நெளிந்த சாலைகளும் கடினமான நிலப்பரப்பும், ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்
படும்போது, குறுகிய பயணத்தை நீண்ட பயணமாக மாற்றிவிடும்.
இதுபோன்ற நேரங்களில் மக்கள் வேகமாகக் கடக்க பறக்கும் வாகனம் ஒன்று இருந்தால், மிகக் குறைந்த நேரத்தில் மருத்துவமனையை அல்லது செல்ல வேண்டிய இடத்தை அடைந்துவிடலாம். செங்குத்தாக மேலே எழக்கூடிய, கடினமான நிலப்பரப்பில் பயணிக்கக்கூடிய, ஓடுபாதை தேவையின்றி தரையிறங்கக்
கூடிய வாகனத்தை உருவாக்குவதே எனது லட்சியமாக இருந்தது. பல ஆண்டுகள் சோதனைகளுக்குப் பிறகு, 'ஹபிடா' கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதல் சோதனைப் பறப்பை நிறைவு செய்தது. அல்மோராவில் உள்ள ஒரு ராணுவ ஹெலிபேடில் இருந்து புறப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு நிமிடம் காற்றில் நிலைத்திருந்தது.
இன்று எலான் மஸ்க்கின் பறக்கும் கார் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. ஆனால், எனது கார் பெரிதாகப் பேசப்படவில்லை. ஒற்றை இருக்கைக் கொண்ட மின்சார பறக்கும் காரான 'ஹபிடா ஸ்கைநெக்ஸ்' சாதனைதான். மருத்துவ அவசர காலங்களிலும், சாலை வழியாகச் சென்றடைய கடினமான பகுதிகளிலும், வான்வழிப் பயணத்தை மேலும் எளிதாக்குவதே 'ஹபிடா'வின் நோக்கம். மலைப்பாதையில் சுமார் 40 கி. மீ. தூரத்தைக் கடக்க ஏறக்குறைய 90 நிமிடங்களாகும் நிலையில், வான்வழியாகப் பயணித்தால், அந்தத் தூரத்தை 10 முதல் 15 நிமிடங்களில் கடக்கமுடியும்.
மாற்றியமைக்கப்பட்ட, மல்டி ரோட்டர் ட்ரோன் தொழில்நுட்பத்தை மின்சார ஸ்கைநெக்ஸ், மேல்நோக்கி உயர தேவையான சக்தியை உருவாக்க, வெளிப்புறம் செங்குத்தாகக் கிளம்புவதற்கும், தரையிறங்கவும் உதவுகிறது. ஹபிடா பொருத்தப்பட்ட பல மின்சார மோட்டார்கள், புரொப்பல்லர்களைப் பயன்படுத்துகிறது. இந்தக் கூறுகள் ஒன்றாகச் செயல்பட்டு, வாகனத்தைத் தரையிலிருந்து மேலே உயர்த்தவும், காற்றில் மிதக்க வைக்கவும், காற்றில் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இந்த மல்டிரோட்டர் அமைப்பு, ட்ரோன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை ஒத்திருந்தாலும், ஒரு நபரை ஏற்றிச் செல்ல விசேஷ மோட்டார்கள் தேவைப்படும்.
ஹபிடாவின் முன்மாதிரி இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் இயங்கும்போது, மாறிவரும் வானிலை, காற்றின் நிலை, தரையிறங்குவதற்கான இடவசதி மற்றும் அவசரகால நடைமுறைகள் போன்ற கூடுதல் அம்சங்களையம் உறுதி செய்ய வேண்டும்.
பறக்கும் கார் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, நடக்கும்போதே கைப்பேசிகளை சார்ஜ் செய்யும் காலணிகள், பார்வைத்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான 'ஸ்மார்ட்' ஊன்றுகோல், மூங்கில் பிளக்கும் இயந்திரம் மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் எனப் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளேன்' என்கிறார் ரவி.
-பிஸ்மி பரிணாமன்