இன்னாதம்ம இவ்வுலகம், இனிய காண்க
ஒரு சாலை விபத்து என்றால் நான்கு திசைகளில் இருந்து ஆள்கள் பரிதாபத்துடன் ஓடிவருவார்கள்.
தி.செ.
ஒரு சாலை விபத்து என்றால் நான்கு திசைகளில் இருந்து ஆள்கள் பரிதாபத்துடன் ஓடிவருவார்கள். சிலர் பயந்து ஒதுங்கி நின்றாலும், சிலர் தூக்கிவிட்டு ஆசுவாசப்படுத்துவார்கள். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக 108-க்கு போன் செய்ய முயல்வார். ஒருவர் சோடா அல்லது தன்னிடம் உள்ள தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து ஆசுவாசப்படுத்துவார். இது மட்டுமே உலகமாக இருந்துவிட்டால், அதைவிட மகிழ்ச்சி ஏதுமில்லை.
ஆனால், இந்தக் கூட்டத்தில் ஒரு திருடனும் நுழைந்துவிடுவான். கிடைத்ததை எடுத்துக்கொள்வான்.
Advertisement
Advertisement
நேபாள துயரத்திலும் இது நடந்துள்ளது.
நேபாளத்தின் துயரச் செய்தி கேட்டவுடன் பல்வேறு நாடுகளும், பல தரப்பு மனிதர்களும் அங்கே உதவிக்கு வந்தனர். அது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இறந்தவர்களில் சிலரது உடல் கரை ஒதுங்க, அந்த உடல்களில் இருக்கும் தங்க நகைகளை சிலர் உருவி எடுக்கும் விடியோ சமூக ஊடகத்தில் வைரலானது. அந்த இரண்டு பேரையும் நேபாள அரசு கைது செய்தது என்றாலும், இவர்கள் நகை திருடும் கும்பலின் ஒரு சிலர் மட்டுமே.
இத்தகைய பேரிடர் அல்லது விபத்துகளின்போது இவர்களும் - காக்கை கழுகுகள் போல, வருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு வேறு அமைப்புகள், போலீசார் அல்லது ஆம்புலன்ஸ் வரும் முன்பாகவே இவர்கள் வந்துவிடுவார்கள். கிடைத்த உடல்களில் கிடைத்த நகைகளைத் திருடுவார்கள். விலை உயர்ந்த கைப்பேசி, மடிக்கணினி எல்லாமும் மாயமாகிவிடும்.
2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி காலை சுனாமி ஏற்பட்டது. நானும் சில நண்பர்களும் நாகைக்குச் சென்றோம். மீண்டும் சுனாமி ஏற்படும் என்ற அச்சத்தால் நாகை, வேளாங்கண்ணி பகுதியில் இருந்து மக்கள் குடும்பத்துடன் திருவாரூருக்கு சாரி சாரியாக நடக்கத் தொடங்கியிருந்தனர். ஆனால், அவர்களின் அச்சத்தை மீறி சில கூட்டம் இரு சக்கர வாகனத்தில் கடற்கரை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தது.
இவர்கள் போய்க் காப்பாற்ற ஏதுமில்லை. இருப்பினும் காயமடைந்தவர்களை, இறந்த உறவுகளை அடையாளம் காண விரைகிறார்கள் எனத் தோன்றியது. ஆனால், இவர்களில் சிலர் நகைத் திருடர்கள் என்கிற கசப்பான உண்மை பிறகு தெரியவந்தது.
அன்று இரவு அரசு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட உடல்கள் அனைத்தும் லாரியில் மூட்டை அடுக்குவது போல அடுக்கப்பட்டபோது அங்கே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. மகளிர் உடல்களில் ஒரு துளி தங்கம் கிடையாது. இவர்களில் பலர் வேளாங்கண்ணிக்கு வந்தவர்கள்.
அன்று இரவு திருவாரூரில் தங்க நேர்ந்தது. ஓட்டல், டீக்கடைகளில் சுனாமிதான் பேச்சாக இருந்தது. நாகை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பேச்சில் நகைத்திருட்டு சம்பவம் அடிபட்டது. 'இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க முடியவில்லைங்க. 'நீ யார்?' என்று கேட்டால், 'தங்கை சார், அம்மா சார், அக்கா, அண்ணி சார் என்று அழுகிறான், அவனுக்கும் அந்த உடலுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், உறவைச் சொல்லி அழும் அவனிடம் என்னவென்று விசாரிப்பது...' என்று சொல்லிக் கொண்டிருந்தார் நேரில் பார்த்தவர்.
வேளாங்கண்ணி வந்திருந்த அலுவலக நண்பர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டு பிழைத்துக்கொண்டார். ஆனால், அவரது இளம் மனைவி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார். அவரது மனைவி உடலைத் தேட நாங்களும் உதவினோம். மறுநாள் காலை கடலோரம் ஒதுங்கிய உடல்கள் அள்ளி வரப்பட்டு, கிடத்தப்பட்டிருந்த வளாகத்தில் சென்று தேடினார். அதில் அவரது மனைவியின் உடலும் இருந்தது. அவர் அலறி அழுது, இந்த உடலை ஊருக்குக் கொண்டு செல்ல முடியுமா என்று விசாரிக்க அதிகாரிகளைச் சந்தித்துத் திரும்பிய வேளையில், ஒரு நபர் அந்த உடலை, 'இது என் மனைவி' என்று உரிமை கோரினார்.
நண்பர் தன் மனைவியின் அடையாளங்களை தெரிவித்து, உரிமை கோரியதும் அந்த நபர் விலகிச் சென்றுவிட்டார்.
பின்னர்தான் தெரிந்தது. இறந்தவர் குடும்பத்துக்கு அரசு அளிக்கும் பணம், பொருள்களைப் பெறுவதற்காக ஏதாவது ஒரு உடலை உரிமை கோரி, பதிவு செய்யும் நாடகமும் அங்கே நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆதார் இல்லை, ஆண்ட்ராய்டு செல்போன் இல்லை... இருவரையும் போட்டோ எடுத்து பதிவு செய்துகொள்ள வாய்ப்பில்லை. வாட்ஸ்ஆப் இல்லை. உரிமை கோருபவரின் பெயர், முகவரி எழுதிக் கொண்டு ஒரு தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, உடலை ஒட்டுமொத்தமாகப் புதைக்க அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆகவே உரிமை கோரி எவரும் நடிக்க முடியும்.
சாலை விபத்துகளிலும் நகைத்திருட்டு நடக்கிறது. அடிபட்டு குற்றுயிராகக் கிடந்தால் மீட்க மற்றவர்கள் உதவிக்கொண்ட்டிருக்க எவனோ ஒருவன் தன் வேலையில் கவனமாக இருப்பான். நகைகள், பெட்டிகள், கணினி, கைப்பேசி எல்லாமும் மாயமாக மறைந்துவிடும். இன்றைய தேதியில் ஒரு மனிதனின் கைப்பேசியை வைத்து, காயமடைந்தவர் அல்லது இறந்தவரின் முகவரி மற்ற உறவுகள், அல்லது நண்பர்களின் தொடர்பு எண்களை அறிய முடியும். ஆனால், கைப்பேசி காணாமல் போய்விடும்.
நண்பரின் பெற்றோர் கார் விபத்தில் சிக்கினர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தந்தை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அரசு மருத்துவமனையிலேயே தாய் இறந்துவிட்டார். உடலை பெறும் நடைமுறைகளில் ஒன்றாக இறந்தவரின் உடைமை ஒப்படைக்கப்பட்டது . வெறும் மூக்குத்தி மட்டுமே தந்தார்கள்.
'தாலிச்சங்கிலி காணாமல் போயிருக்கலாம். தாலிச்சரடும் மாங்கல்யமும்கூட இல்லையா?' என்றார் நண்பர்.
'மூக்குத்தி மட்டும்தான் இருந்தது' என்று மருத்துவ ஊழியர் சொன்னார்.
அந்த துயர வேளையில் இந்த நகைத்திருட்டுக்காக வாதம் செய்ய முடியாது. வாதிட்டால் நாம்தான் சிறுமைப்பட்டுப்போவோம். உடலைப் பெற்றுச் சென்றாக வேண்டும். ஆகவே நண்பர் எதையும் பேசாமல் கையெழுத்துப் போட்டார்.
விபத்துக்காலத்தில் ஓடிவந்து உதவும் அன்பு உள்ளங்களைத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது. அவர்களது உதவியையும் அரவணைப்பையும் நாம் காலம் முழுதும் எண்ணிப்பார்த்து நன்றி சொல்ல வேண்டும். இத்தகைய நல்லவர்களால்தான் உலகம் இயங்குகிறது. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
ஆகவே, இன்னாதம்ம இவ்வுலகம், இனிய காண்க.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.