FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 

1895 ஆம் ஆண்டு ஊட்டி ஏரியிலிருந்து 300 அடி உயரத்தில்,   ஊட்டியில் கிறிஸ்துவ சேவை செய்ய வந்த சிஸ்டர்களுக்காக வாங்கப்பட்ட  இடத்தில் தொடங்கிய பள்ளிதான்

30 ஜனவரி 2024, 11:11 pm IST
பகிர்:

1895 ஆம் ஆண்டு ஊட்டி ஏரியிலிருந்து 300 அடி உயரத்தில்,   ஊட்டியில் கிறிஸ்துவ சேவை செய்ய வந்த சிஸ்டர்களுக்காக வாங்கப்பட்ட  இடத்தில் தொடங்கிய பள்ளிதான் St. Hilda’s School & Junior College. இந்தப் பள்ளி 6 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது.

1895 கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி எக்ஸôம் எழுதினார்கள்.   தேயிலை மற்றும் காப்பித் தோட்டத்தில் வேலை செய்யக்  கூடிய பணியாளர்கள், அதிகாரிகளின்  குழந்தைகளுக்கு ஆங்கில கல்வி அளிக்க வேண்டும் என்பதற்காக இப்பள்ளி தொடங்கப்பட்டது. சிஸ்டர் மார்த்தா என்பவர் இந்தப் பள்ளியை  முதன்முதலாக நடத்தினார். இந்தப் பள்ளியில் உள்ள
சர்ச் 1902-1903 - இல் நிறுவப்பட்டது.  

1900-ஆம் ஆண்டு செயின்ட் ஜோசப் மிஷனரி  சிஸ்டர்ஸ்  15 மாணவிகளை வைத்து,  குன்னூரில்  தொடங்கிய பள்ளிதான் இன்று ST. JOSEPH’S CONVENT ANGLO INDIAN GIRLS’ HIGHER SECONDARY SCHOOL என்று வளர்ந்திருக்கிறது. ஊட்டியில் வேலை செய்த   ஐரோப்பிய தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்காக இந்தப் பள்ளி  தொடங்கப்பட்டது.  பின்னர் அங்கே வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பெண் குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.   இங்கு மிகக் குறைந்த கல்விக் கட்டணமே பெறப்படுகிறது.   தற்போது  1500 மாணவிகள் படித்து வருகிறார்கள்.  குறிப்பாக விளிம்புநிலையில்  வாழும் ஏழைப் பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வி தர வேண்டும் என்பதே இப்பள்ளியின் நோக்கம்.  

Advertisement

Advertisement

இந்தப் பள்ளி நாட்டிற்காகப் பாடுபடும் பல சிறந்த பெண்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.  பெண்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவுச் செயலர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், நிர்வாகிகள், தொழில்முனைவோர்கள், டாக்டர்கள் என எண்ணற்ற துறைகளில் மாணவிகளை உருவாக்கியுள்ளது.   

இதேபோன்று  இன்று ஊட்டியில் கேட்டி என்ற இடத்தில்   "தி லெய்ட்லா மெமோரியல் ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ்'  என்ற  பெயரில் செயல்பட்டு வரும் பள்ளி,  1914 -ஆம் ஆண்டு   கொடைக்கானலில்  ரெவரண்ட்  ஜான் ப்ரீடன் என்ற ஐரோப்பியரின் முன்முயற்சியால் தொடங்கப்பட்டது.  1922 ஆம் ஆண்டுதான் அது ஊட்டியில் கேட்டி என்ற இடத்துக்கு மாற்றப்பட்டது.   ஐரோப்பிய புராடஸ்டண்ட் மதப்பிரிவினரின் குழந்தைகளும், இந்தியாவில் உள்ள  ஆங்கிலோ - இந்தியன் குழந்தைகளும் கல்வி கற்பதற்காக  இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது.    

சர் ராபர்ட் லெய்ட்லா நிறைய  பண உதவிகளை இந்தப் பள்ளிக்காக அளித்ததால் இந்த பள்ளி "லெய்ட்லா மெமோரியல் ஸ்கூல்' என்றழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 2082  மீட்டர்  உயரத்தில், ஏறத்தாழ 224 ஏக்கர் பரப்பளவில்  வனப்பகுதியில்  அமைந்துள்ள  இந்த கல்வி நிறுவனம்,  நல்ல தரமான கல்வியைத் தரவேண்டும்  என்ற நோக்கத்துடன் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் குழந்தைகள் எல்லாரும்  ஆங்கிலத்தைக்  கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது. பின்னர் பொதுக்கல்வி கற்றுத் தரப்பட்டது.  இப்பள்ளி ஆண், பெண் இருபாலருக்குமான தங்குமிடப் பள்ளி. மாணவர்கள் பெற்றோரைப் பிரிந்து வாழ்வது தெரியாமல் இருக்க மனநிம்மதி தரும் எல்லா வசதிகளும் இந்தப் பள்ளியில் உள்ளன. பெற்றோரைப் போன்று அன்பு செலுத்தும் ஆசிரியர்களைக் கொண்டுள்ளது இந்தப் பள்ளி.     ஜே பீரிடன்தான் இந்தப் பள்ளியை  1910-இல் நிறுவினார். இந்தப் பள்ளி 1915-இல்  33 மாணவர்களும், 1917-இல் 101 மாணவர்களும்  என வளர்ந்தது. தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். காட்டேஜ் சிஸ்டத்துடன் ஹாஸ்டல்கள் மிக நேர்த்தியான முறையில் உள்ள மிக நல்ல கல்வி நிறுவனமாக நீலகிரியில் செயல்பட்டு வருகிறது.  

ஜேசுட்ஸ் (Jesuits)  என்று அழைக்கப்படக் கூடிய  "சொசைட்டி ஆப் ஜீஸஸ்'   என்ற அமைப்பு  செயின்ட் இக்னேஷியஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது.  1491-ஆம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்த செயின்ட் இக்னேஷியஸ்  1534 - இல் ஜேசுட்ûஸ பிரான்சில் உருவாக்கினார்.  இது கத்தோலிக்க  சர்ச்சின் நிறுவனமாகும்.  உலகமெங்கும்  பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவ வேண்டும் என்று செயின்ட் இக்னேஷியஸ் நினைத்தார்.    அந்த  கனவு  உலகமெங்கும்  380 உயர்நிலைப் பள்ளிகளையும், 190 கல்லூரிகளையும்  உருவாக்கியுள்ளது. 

1852-ஆம் ஆண்டு   பிரான்சில்  ஜேசுட்ஸின் பணிகளின் ஒரு பகுதியாக   " மதுரா மிஷன்' என்ற அமைப்பைத் தொடங்கினார்கள்.  அவர்கள் மூலமாக தென்னிந்தியாவில் கல்விப் பணிகள் தொடங்கப்பட்டன.    இந்த அமைப்பின் மூலமாக  ஆந்திராவில் இரண்டு கல்லூரிகளும், பீகாரில் மூன்று கல்லூரிகளும், கோவாவில் ஒரு கல்லூரியும், குஜராத்தில் ஒரு கல்லூரியும் , ஜார்கண்டில் ஆறு கல்லூரிகளும்,  கர்நாடகாவில் 16 கல்லூரிகளும், கேரளாவில் இரண்டு கல்லூரிகளும்,  மத்தியபிரதேசத்தில் ஒரு கல்லூரியும், மகாராஷ்டிராவில்  9 கல்லூரிகளும், ஒடிசாவில்  2 கல்லூரிகளும், ராஜஸ்தானில்  2 கல்லூரிகளும், தமிழ்நாட்டில்  12 கல்லூரிகளும், தெலங்கானாவில் ஒரு கல்லூரியும், மேற்கு வங்காளத்தில் 7 கல்லூரிகளும்  தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர,  உலகமெங்கும் வெவ்வேறு நாடுகளில் இவர்கள் கல்விப் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்தார்கள். 

மதுரை மிஷன் என்றாலும் அது திருச்சியில் இருந்துதான் மதுரைக்கு வந்தது. தமிழகத்தில் 1844-ஆம் ஆண்டு செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரி திருச்சியில் தொடங்கப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் உயர்கல்வியைப் பற்றி திருச்சிப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சிந்தித்துப் பார்க்காத சூழ்நிலையில் இந்த கல்லூரி தொடங்கப்பட்டது. 1866-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்தது.  1978-ஆம் ஆண்டு தன்னாட்சி பெற்ற கல்விநிறுவனமாக இது  செயல்பட்டு வருகிறது. 

இந்தக் கல்லூரி   தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கி வருகிறது. இது ஆண், பெண் இருபாலரும் படிக்கக் கூடிய கல்லூரியாக உள்ளது. இங்கு 21 இளங்கலைப் பட்டப்படிப்புகளும்,  27 முதுகலைப் பட்டப்படிப்புகளும், இளமுனைவர் பட்டப்படிப்பு 13 துறைகளிலும்,  பிஎச்டி 13 துறைகளிலும்  24  இதர பிரிவுகளிலுமாக மொத்தம்  98 பாடப் பிரிவுகளில் கல்வியை வழங்கி வருகிறார்கள். இந்தக் கல்லூரி வளாகத்தின் பரப்பளவு 75.8 ஏக்கராகும். திருச்சியின் மையத்தில் இது அமைந்துள்ளது. திருச்சியைச் சுற்றியுள்ள மாணவர்கள் இங்கு வந்து பயின்று  உலக அளவில் தனிமதிப்பினை உருவாக்கி வருகிறார்கள். 

எண்ணற்ற துணை வேந்தர்களையும், தொழிலதிபர்களையும் இந்தக் கல்லூரி உருவாக்கியுள்ளது.  இந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.லட்சுமணன், அறிவியல் தொழில்நுட்பத்துறையின் செயலராக  இருந்த  டாக்டர் பி.இராமசாமி,  முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலஸ்வாமி,  மத்திய புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்த ராஜா செல்லையா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 1983-இல் இயற்பியல்துறையில்  நோபல் பரிசு வாங்கிய சுப்பிரமணியம் சந்திரசேகர் இங்குதான் படித்தார். நோபல் பரிசு வாங்கிய டாக்டர் சர்.சி.வி.ராமனும் இங்குதான் படித்திருக்கிறார். நோபல் பரிசு வாங்கிய இரண்டு இயற்பியல் அறிஞர்களை உருவாக்கிய ஒரே கல்விநிறுவனம் இதுதான்.  எழுத்தாளர் சாண்டில்யன்,  திரைப்பட   நடிகர் அசோகன்,   தற்போது இயக்குநராக உள்ள பிரபு சாலமன் ஆகியோரும்  இங்குதான் படித்திருக்கிறார்கள்.    இந்திய அளவில் தரவரிசைப் பட்டியலில் இந்த கல்லூரி நல்ல இடத்தைப் பெற்றுள்ளது. ஜேசுட்ஸ் அமைப்பு இந்தக் கல்லூரி நிர்வாகத்தை அன்று முதல் இன்றுவரை மிகத் திறம்பட நடத்தி வருவதே இதற்கு காரணம். 

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments