முகப்பு
இளைஞர்மணி

மவுஸ் தேவையில்லை... தலையை ஆட்டினால் போதும்!

எல்லாத் துறைகளிலும்  இப்போது கணினி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.   வீட்டிலிருந்து வேலை செய்வது என்று வந்த பிறகு,  வீடுகளிலும் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

எல்லாத் துறைகளிலும்  இப்போது கணினி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.   வீட்டிலிருந்து வேலை செய்வது என்று வந்த பிறகு,  வீடுகளிலும் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன.

கணினியில் வேலை செய்ய மிகவும் பயன்படுவது மவுஸ். இந்த மவுஸை நகர்த்தித்தான் கணினித் திரையில் நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்க முடியும். தேர்ந்தெடுத்த பிறகு  தொடர்ந்து பணி செய்ய முடியும். 

ஏதேனும் சிறு விபத்து காரணமாக கையில் அடிபட்டுவிட்டால், கணினியில் வேலை செய்ய முடியாது.  பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்தவர்கள், குறைபாடுள்ள கைகளுடன் பிறந்தவர்களும் கணினியில் வேலை செய்ய முடியாது.

உலகமே கணினிமயமாகிவிட்ட இக்காலத்தில், மாற்றுத்திறனாளிகள் கணினியில் பணி செய்ய வேண்டுமானால் என்ன செய்வது?  அவர்களும் பிற மனிதர்களைப் போல பெரிய நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்து உழைத்து வாழ்க்கையில் உயர்வது எப்படி? என்று யோசித்தார் சென்னையைச் சேர்ந்த 23 வயதேயான இளைஞர் பிரவீண் குமார்.

சென்னை ராஜலட்சுமி என்ஜினியரிங் காலேஜில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவில்  பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர், படிக்கும்போது விளையாட்டாக உருவாக்கிய ஒரு கருவியை மேம்படுத்தி, மவுஸூக்குப் பதிலாக அதைப் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டார்.  அதன் விளைவாக,  கைகளே இல்லாத ஒருவர் கூட கணினியில்  வேலை செய்ய உதவும்.

"மவுஸ்வேர்' என்ற கருவியை தனது "டெக்ஸ்ட்ரோவேர் டிவைசஸ்'  என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார். அதைப் பற்றி பிரவீண் குமாரிடம் பேசினோம்:

"" நம் வாழ்க்கையில்  ஓர் அங்கமாகிவிட்டது கம்ப்யூட்டர்.  சாதாரணமான மிகச் சிறிய கடைக்கு நீங்கள் சென்றாலும், பெரிய நிறுவனங்களுக்குச் சென்றாலும் நீங்கள் கம்ப்யூட்டரைப் பார்க்க முடியும். அதுபோன்று எல்லா வேலைகளையும் கம்ப்யூட்டரிலேயே இப்போது செய்கிறார்கள். மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து, அஞ்சலகத்துக்குச் சென்று ஒரு பதிவுத் தபாலை அனுப்புவது, ரயில், பஸ் டிக்கெட் எடுப்பது வரை எல்லா வேலைகளும் கம்ப்யூட்டரை மையப்படுத்தித்தான் சுழல்கின்றன.

படிக்கும்போது வீடியோ கேம் விளையாடுவதற்காக இதைத் தயாரித்தேன். படிப்பு முடிந்ததும் ஏதேனும் தொழில் தொடங்கினால் என்ன என்று நினைத்தேன்.  அப்போதுதான் நான் ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த வீடியோ கேம் விளையாட உதவும் கருவி கண்ணில் பட்டது.

நம்நாட்டைப் பொருத்தவரையில் கைகள் சரிவர இயங்காமல் நிறையப் பேர் இருக்கிறார்கள். பிறவியிலேயே கையில்லாமல் கை குறைபாடுகளுடன் பிறப்பவர்கள் இருக்கிறார்கள்.  இளம்பிள்ளை வாதம்,  பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு கைகள் செயலிழந்து போனவர்களும் இருக்கிறார்கள்.  சிலர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் காலத்தில்  விபத்தில் சிக்கி கைகளை இழந்து இருப்பார்கள்.  அவர்களால் அந்த அலுவலகப் பணியைத் தொடர முடியாமல் போய்விடும். கையையும் இழந்து வேலையையும் இழந்து  கஷ்டப்படுவார்கள்.

விபத்தினால் கைகளில் காயம் ஏற்பட்டாலோ, சிறு எலும்பு முறிவு போன்றவை ஏற்பட்டாலோ அவை சரியாகும் வரை வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது. எவ்வளவோ அறிவும் திறமையும் உள்ள மாற்றுத்திறனாளிகள்,  கைகளில் உள்ள குறைபாடுகளினால் பொருத்தமான வேலை கிடைக்காமல், வாழ்க்கையை இழந்து நிற்கிறார்கள் அவர்களுடைய நிலையை மேம்படுத்துவதற்காகவும் இந்தக் கருவியை நான் உருவாக்கியிருக்கிறேன். 

இந்தக் கருவி இயங்கும்முறை மிகவும் எளிமையானது.  கணினித் திரையில் உள்ளவற்றை மவுஸை அடிக்கடி நகர்த்தி, அவற்றைத் தேர்ந்தெடுத்துதான் நாம் வேலையைத் தொடர முடியும். கை சரியாக இயங்காவிட்டால், மவுஸை நகர்த்த முடியாது.  மவுஸூக்குப் பதிலாக நான் உருவாக்கிய இந்தக் கருவி செயல்படும். 

இந்தக் கருவியின் ஒரு பகுதியாக ஒரு சிறிய பாக்ஸ் இருக்கிறது. அந்த பாக்ஸூக்குள் மோஷன் சென்சார்கள் உள்ளன.  இந்த சிறிய பாக்ஸை தலையில் பொருத்திக் கொள்ள வேண்டும்.  இதை நீங்கள் ஹெட்போன் வடிவிலான ஏதேனும் ஒன்றில் இணைத்து தலையில் மாட்டிக் கொள்ளலாம். 

இந்த கருவியைத் தலையில் மாட்டிக் கொண்டு தலையை ஆட்டினால், தலையின் அசைவைக் கண்டறிந்த சென்சார்கள்,  அதை  கம்ப்யூட்டருக்குத் தெரிவித்துவிடும்.  கம்ப்யூட்டரில் ஒரு யுஎஸ்பி ஸ்டிக்கை ஏற்கெனவே மாட்டி வைத்திருக்க வேண்டும்.  இந்த யுஎஸ்பி ஸ்டிக் வயர்லெஸ் மவுஸ்  வேலை செய்வதற்குப் பயன்படக் கூடியது.

தலையை ஆட்டும்போது தலையின் அசைவுக்கு ஏற்ப கம்ப்யூட்டர் திரையில்
கர்சர் நகர்ந்து செல்லும்.  திரையில் உள்ள எதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்க  ஒரு ஸ்விட்ச்சை அழுத்த  வேண்டும்.  அந்த ஸ்விட்ச்சை கால்களால் மிதித்தும் அழுத்தலாம்.   அந்த சுவிட்சை கணினி மேசையில் வைத்து, கையில் இயங்கக் கூடிய எந்தப் பகுதியைப் பயன்படுத்தியும் அழுத்தலாம்.  சிறிது அளவே கை இயக்கம் உள்ளவர்கள், அந்த இயக்கத்தை வைத்தும் அழுத்தலாம். அப்படி அழுத்தியவுடன்,  கம்ப்யூட்டரில் நீங்கள் தேர்ந்தெடுக்க நினைத்த பகுதி செலக்ட் ஆகிவிடும். தொடர்ந்து இவ்வாறு தலையை அசைத்தும்,  சுவிட்சை அழுத்தியும் வேலையைத் தொடரலாம். 

கணினியில் வேலை செய்வதற்கு அடுத்து செய்ய வேண்டியது, டைப் அடிப்பது. மவுஸ் பிடிப்பதற்கே  கைகளைப் பயன்படுத்த முடியாதவர்கள் டைப் அடிக்க இயலாது.  பேசினாலேயே அதை டைப் அடித்துவிட உதவும் "ஸ்பீச் டூ டெக்ஸ்ட்'  மென்பொருள்கள் இப்போது நிறைய வந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் சில ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. பிற மொழிகளில் அவ்வளவு  சிறப்பாகச் செயல்படுவதில்லை.  அந்தக் குறையை நீக்கும்விதமாக அந்த மென்பொருளை நாங்கள் மேம்படுத்தியிருக்கிறோம்.  தமிழ்,  ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், வங்காளம், மராத்தி உள்ளிட்ட பல மாநில மொழிகளில் பேசினால், அது எழுத்து வடிவில் மாறிவிடும்.

எங்களுடைய இந்த முயற்சிக்கு சென்னை ஐஐடி உதவி செய்திருக்கிறது. இந்தக் கருவியைத் தயாரிப்பதற்கான நிதி உதவி, அலுவலக இடம், சந்தைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், உதவிகள் அனைத்தையும் ஐஐடி சென்னை செய்து கொடுத்திருக்கிறது. இதுவரை 30 யூனிட்கள் தயாரித்திருக்கிறோம். அவை பயன்பாட்டில் இருக்கின்றன.  அதிக அளவில் தயாரிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன'' என்கிறார் பிரவீண் குமார். 

முழு கட்டுரையைப் படிக்க →