FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 102: அமெரிக்காவில் தமிழர்களை சந்தித்த அனுபவம்! - குமாரி சச்சு

அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடரில் நடிக்கச் சென்ற போது எனக்கு கொடுக்கப்பட்ட உடைகளைப் பார்த்ததுமே ஆச்சரியம் ஏற்பட்டது. 9 கஜம் புடைவையும், அதற்கு ஏற்றாற்போல் ஜாக்கெட்டும் கொடுத்தார்கள். 

Updated On : 15 ஆகஸ்ட் 2021, 6:00 am IST
பகிர்:

அமெரிக்காவில் தொலைக்காட்சி தொடரில் நடிக்கச் சென்ற போது எனக்கு கொடுக்கப்பட்ட உடைகளைப் பார்த்ததுமே ஆச்சரியம் ஏற்பட்டது. 9 கஜம் புடைவையும், அதற்கு ஏற்றாற்போல் ஜாக்கெட்டும் கொடுத்தார்கள். 

நாங்கள் தங்கியிருந்த அறையிலிருந்து காலையில் கிளம்பினால் இரவு தான் திரும்பி வர முடியும். அங்குள்ள தெருக்களில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சிலர் என் அருகே வந்து புடவையை தொட்டுப் பார்த்துவிட்டுச் செல்வார்கள். எப்படி 9 கஜம் புடைவை கட்டிக்கொண்டு உங்களால் நடக்க முடிகிறது என்று கேட்டபார்கள். இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தமிழ்நாட்டில் இது போன்ற புடைவை கட்டுவது வழக்கம். இது எங்களுடைய கலாசாரம் என்று பதில் அளிப்பேன். ஆனாலும் 9 கஜம் புடைவையில் இருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது.

நாங்கள் குயின்ஸ் என்ற இடத்தில் தங்கியிருந்தோம். சென்னையிலிருந்து முறுக்கு, தட்டை போன்றவற்றை கொண்டு சென்று இருந்தேன். இயக்குநர் கோபு வீட்டிலிருந்து ஒரு சில தின்பண்டங்கள் வந்திருந்தன. காரணம் அங்கு சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற பயம் தான். முதல் நாள் இதை எல்லாம் நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் நாங்கள் படப்பிடிப்பு முடிந்து அறைக்கு வந்த போது எங்கள் அறையில் இரவு உணவு தயாராக இருந்தது. தினமும் எங்களை சமைக்க விடாமல் ஒவ்வொரு நாளும், இரவு உணவு எங்கள் அறைக்கு வந்துவிட்டது. சாம்பார், ரசம், பொரியல், வத்தக்குழம்பு,  அப்பளம், அவியல் என ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகளை எங்களுக்காக தயார் செய்து கொண்டு வந்து கொடுத்தார்கள். உணவும் சுவையாக இருந்தது. எங்களுக்கு கொண்டு வரப்பட்ட உணவு எங்கிருந்து வருகிறது என்று கேட்டதற்கு தயாரிப்பாளரின் நண்பர் வீட்டிலிருந்து வருவதாகச் சொன்னார்கள். 

Advertisement

Advertisement

தொடர்ந்து வாஷிங்டனில் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹுஸ்டன் நகரை அடைந்தோம். கல்யாண காட்சியை எடுத்த இடம் அங்கிருந்த மீனாட்சி அம்மன் கோயில். அங்கு இருந்த குருக்கள் நிஜ கல்யாணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் சிறப்பாக செய்திருந்தார். ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தின் உள்ளே பெரிய ஹால் இருந்தது. அதன் வெளியில் மாப்பிள்ளை ஊர்வலக் காட்சியை எடுத்தார்கள். எனக்கு ஓய்வு கிடைத்த நேரம் அங்குள்ள ஹாலின் உள்ளே சுற்றிப் பார்க்க சென்றேன். 

அப்போது கர்நாடக இசை பாடகி செளமியா பாடிக்கொடு இருந்தார். என்னைப் பார்த்ததும் தமிழர்கள் ஏராளமானோர் நலம் விசாரித்தனர். "நீங்கள் இங்கே வந்து செட்டில் ஆகிவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். "வாஷிங்டனில் திருமணம்' தொடரின் படப்பிடிப்புக்காக வந்துள்ளேன்' என்று அவர்களிடம் சொல்லி விடைபெற்றேன்.

"வாஷிங்டனில் திருமணம்' தொடர் ஒளிப்பரப்பானதும் எல்லோரும் விரும்பிப் பார்த்தார்கள். 1995 -ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொடர் இது. நாங்கள் சென்றது 16 பேர் மட்டுமே. ஆனால் தாலி கட்டும் நேரத்தில் எல்லோரும் வாழ்த்து சொல்லி அட்சதை போடுவது போன்று காட்சி அமைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். தாலிக்கட்டும் சமயத்தில் நாங்கள் அங்கு இல்லையே என்று  வருத்தப்பட்டார்கள். 

ஆனால் தாலிகட்டும் படப்பிடிப்பில் நம்மூர் வழக்கப்படி அட்சதை போடுவதை படமாக்கினார். எல்லோருக்கும் வருத்தம்;  நாங்கள் அமெரிக்கா போகவில்லையே என்று, அன்று அமெரிக்க விசா கிடைப்பது கடினம். செலவும் அதிகம். இதையெல்லாம் கவனத்தில் வைத்து இப்படி ஒரு விஷயத்தை செய்து முடித்தார் இயக்குநர் கோபு. 

நாங்கள் சாவி எழுதிய ஜாலியான கதைக்கு அமெரிக்கா சென்று படப்பிடிப்பு நடத்தி பார்வையாளர்களை சந்தோஷப்படும்படி செய்தோம். என்னுடைய நடிப்புலக வாழ்க்கையில் இது மறக்க முடியாத தொலைக்காட்சி தொடர்.

எனக்கு விருது பெற்றுக் கொடுத்த வேறு ஒரு தொலைக்காட்சி தொடரை எழுதியவர் கோவை அனுராதா. அவரே நடித்து இயக்கினார். அவரின் "காஸ்ட்லி மாப்பிள்ளை‘, "மகாராணி செங்கமலம்',  "சுசீலா ஆண்டி' போன்றவை பேசப்பட்ட தொடர்களாகும். இதில் கதாநாயகனின் அம்மாவாக நடித்திருப்பேன். அப்படிப்பட்ட பாத்திரங்கள் எனக்கு கொடுத்தார். 

 தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments