ரத்தத்தின் ரத்தமே... - 2
ரத்தத்தைப் பார்த்தவுடனேயே சிலருக்கு பதட்டம் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.
ரத்தத்தைப் பார்த்தவுடனேயே சிலருக்கு பதட்டம் வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும். மேலும் அதிக இதயத் துடிப்பு நெஞ்சு படபடப்பு வியர்த்துக் கொட்டுதல் நடுநடுங்குதல் போன்றவைகளெல்லாம் ஏற்பட்டுவிடும். தொடர்ந்து ரத்த அழுத்தம் குறைந்து இதயத் துடிப்பும் குறைந்து கடைசியில் ரத்தத்தைப் பார்த்த அந்த மனிதர் சோர்வாகி மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்.
ரத்த பயம் சிறிய வயதிலேயே சிலருக்கு ஏற்பட்டு விடுவதுண்டு. ""ஒருமுறை ஸ்கூலில் படிக்கும் என் பையனுடன் இன்னொரு பையனும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவருக்கொருவர் மோதி இரண்டு பேரும் கீழே விழுந்திருக்கிறார்கள். என் பையனுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் என் பையன் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான். "இவனுக்குத் தான் ஓன்னும் ஆகவில்லையே பின்னர் ஏன் இவன் மயக்கம் போட்டு கீழே விழுந்தான்; என்று எழுப்பிக் கேட்டதற்கு, "எனக்கு ஒரு அடியும் படலம்மா. ஆனா அவனுக்கு அடிபட்டு கால் முட்டியிலிருந்து ரத்தம் வந்துச்சு. அதைப் பார்த்தவுடனே எனக்கு மயக்கம் வந்துடுச்சும்மா'' என்றான். இப்படி ரத்தத்தைப் பார்த்தவுடனேயே மயக்கம் போடுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பூச்சிகளின் உடலிலுள்ள ரத்தத்தின் வேலையும் மனித உடலிலுள்ள ரத்தத்தின் வேலையும் மிகமிக மாறுபட்டது. மனிதர்களின் ரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதே அதிலிருக்கும் "ஹீமோகுளோபின்' என்னும் பொருளினால்தான். இந்த "ஹீமோகுளோபின்' ரத்தத்தில் கலந்திருக்கிறது. ரத்தம் எங்கெல்லாம் உடலில் போய் வருகிறதோ அங்கெல்லாம் "ஹீமோகுளோபின் சென்று வருகிறது. நாம் வெளிக்காற்றை சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் செல்லும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனை இந்த "ஹீமோகுளோபின்' தான் நுரையீரலிலிருந்து சுமந்து கொண்டு உடல் முழுக்க கொண்டுபோய் சேர்க்கின்றது. பூச்சிகளின் உடலிலுள்ள ரத்தம் மனிதனின் ரத்தத்தைப்போல் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்களை சுமந்து செல்வதில்லை. அதனால் பூச்சிகளின் ரத்தத்தில் "ஹீமோகுளோபின்' இல்லை. பூச்சிகளின் ரத்தத்தில் "சிவப்பணுக்களும்' இல்லை. அதனால் தான் பூச்சிகளின் ரத்தம் சிவப்பாக இல்லை.
Advertisement
Advertisement
ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் "ஹீமோகுளோபின்' என்னும் பொருள் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களில் தான் இருக்கின்றன. மனித ரத்தத்தில் சிவப்பணுக்கள் இருக்கின்றன. தேள், நட்டுவாக்கிளி, அட்டை, சிலந்தி, ஈ, வண்டு, பட்டாம்பூச்சி, நத்தை, கொசு, உன்னி, இறால், கரப்பான், எறும்பு, குடல் புழுக்கள் இன்னும் பல முதுகெலும்பில்லாத விலங்குகளுக்கு ரத்தத்தில் சிவப்பணுக்கள் இல்லை.
கொசுவின் ரத்தம் என்ன நிறம் என்ற சந்தேகம் எல்லோருக்குமே உண்டு. கொசு மனித ரத்தத்தைக் குடிப்பதால் சிவப்பா அல்லது இயற்கையிலேயே கொசுவின் ரத்தம் சிவப்பா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உண்டு. உண்மையில் சொல்லப்போனால் கொசுவின் ரத்தம் நிறமற்றது. பின் கொசுவை அடித்தால் சிவப்பாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். கடிக்கும் கொசுவை நீங்கள் அடித்தவுடன் அதன் உடலிலிருந்து வெளிவரும் ரத்தமானது ஆடு, மாடு போன்ற பாலூட்டி விலங்குகளையும் மனிதர்களையும் கொசு கடித்தபோது உறிஞ்சப்பட்ட ரத்தமே. ஏன்? உறிஞ்சப்பட்டது உங்கள் ரத்தமாகக் கூட இருக்கலாம்.
"அறுபது குருதித்துளி சுண்டி, ஆங்கோர் சிறுதுளி விந்தாய் மாறும், அதாவது அறுபது ரத்தத்துளிகள் சேர்ந்து, சுண்டி, ஒரு சிறுதுளி விந்தாய் மாறும் என்று கடுவேலி சித்தர் கூறியதாக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தனது தனிக்கவிதையில் சொல்லியிருப்பார். சித்தர் சொல்லியதுபோல் ஒவ்வொரு துளி ரத்தமும் விலை மதிப்பற்றது தான்.
நமது உடல் எடையில் ரத்தத்தின் பங்கு சுமார் 7 சதவீதம் ஆகும். சுமார் 70 கிலோ எடையுள்ள ஒருவனின் உடலில் சுமார் 4-லிருந்து 5 லிட்டர் அளவு ரத்தம் இருக்கும். உங்களது உடம்பிலிருக்கும் ரத்தத்தின் மொத்த அளவு உங்களுடைய எடையைப் பொறுத்தும் நீங்கள் ஆணா பெண்ணா என்பதைப் பொறுத்தும், நீங்கள் வாழும் இடத்தைப் பொறுத்தும் மாறுபடும். உதாரணத்திற்கு ஒரு கிலோ உடல் எடைக்கு சுமார் 70 மில்லி லிட்டர் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 60 கிலோ உடல் எடை உள்ளவராக இருந்தால் 4200 மில்லி லிட்டர் அதாவது 4.2 லிட்டர் ரத்தம் உங்கள் உடலில் இருக்கிறது என்று அர்த்தம்.
சுமார் 25 கிலோ எடையுள்ள ஒரு நாயின் உடலில் சுமார் 2 லிட்டர் ரத்தம் இருக்கும். சுமார் 750 கிலோ எடையுள்ள ஒரு பசு மாட்டின் உடலில் சுமார் 41 லிட்டர்; ரத்தம் இருக்கும். சுமார் 1 டன் அதாவது 1000 கிலோ எடையுள்ள ஒரு காளை மாட்டின் உடலில் சுமார் 50 லிட்டர்; ரத்தம் இருக்கும். சுமார் 6 டன் உடல் எடையும் சுமார் 22 கிலோ இதய எடையுமுள்ள ஒரு யானையின் இதயத்துக்குள் சுமார் 450 லிட்டர்; ரத்தம் உள்ளே வந்து வெளியே போகிறது.
நமது வயிற்றுக்குள் இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் தான் நமது உடலிலுள்ள மொத்த ரத்தத்தின் அளவை கட்டுபடுத்துகிறது. நமது உடலிலுள்ள ரத்தத்தின் மொத்த அளவை கூட குறைய இல்லாமல் சரியாக வைத்துக்கொள்ள உதவுவதும் இந்த இரண்டு சிறுநீரகங்களே. நமது உடலில் ரத்தம் அதிகமாக இருக்கிறது என்று சிறுநீரகம் நினைத்தால் உடனடியாக உடலிலிருந்து தண்ணீரையும், உப்பையும் (சோடியம்) சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். ரத்தம் குறைவாக இருக்கிறது என்று நினைத்தால் உடனடியாக இவ்விரண்டையும் சேர்த்துக்கொள்ளும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடலிலுள்ள மொத்த ரத்தத்தின் அளவு சற்று கூடுதலாக இருக்கும். மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சமயத்தில் சுமார் 80 மில்லி லிட்டர்; ரத்தம் (அதாவது சுமார் 16 டிஸ்பூன்) பெண்கள் இழக்க வேண்டியது நேரிடும். இது எல்லாப் பெண்களுக்கும் ஒன்று போல் இருக்காது. ஓவ்வொரு பெண்ணின் உடலமைப்பையும் மாதவிடாய் இருக்கும் நாள்களையும் பொறுத்து சற்று மாறுபடும்.
(தொடரும்)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.