நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள தேனலை கிராமத்தைச் சேர்ந்தவர் என்.ராமமூர்த்தி. இவரது மனைவி ஆர்.ராஜேஸ்வரி.
கடந்த 2003-ஆம் ஆண்டு தேனலை கிராமத்தில் வயது முதிர்ந்த ஒரு ஆதரவற்றவருக்கு தனது இல்லத்தில் வைத்து உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து உதவி வந்துள்ளார். காலப்போக்கில் இவரது இல்லத்தைத் தேடி வயது முதிர்ந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால் பாதித்த மாற்றுத் திறனாளிகள், கண்பார்வை அற்றவர்கள், ஆதரவற்றவர்கள் என பலரும் படிப்படியாக வரத் துவங்கியுள்ளனர்.
காலப்போக்கில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இவரது இல்லத்துக்கு வரத் துவங்கியதும் இதனை அரசாங்கத்தில் எம்.என்.டிரஸ்ட் என்று பதிவு செய்தார். தமிழக அரசின் சமூக நலத் துறை இந்த இல்லத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. ஆதரவற்றவர்கள் தங்குவதற்காக வங்கிக் கடன், தன்னிடம் இருந்த நகைகள், விருப்ப ஓய்வில் கிடைத்த பணம் இவற்றைக் கொண்டு படிப்படியாக தனது சொந்த இடத்தில் 6 பெரிய கட்டடங்களை தியான மண்டபத்துடன் சேர்த்து கட்டி, ஆதரவற்றவர்களுக்கு இன்றுவரை உதவி வருகிறார்.
தற்போது இவரது இல்லத்தில் 45 வயது முதல் 96 வயது வரையிலானோர் தங்கியுள்ளனர். மேலும், முற்றிலும் கண் பார்வை இழந்த மூன்று பெண்கள், கை, கால் இழந்த மாற்றுத் திறனாளிகள் என 51 ஆதரவற்றவர்களை கவனித்து வருகிறார்.
ராமமூர்த்தி நம்மிடம் பகிர்ந்ததாவது:
"33 ஆண்டுகாலமாக தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் அவர்கள் படும் வேதனைகளையும், சமுதாயம் இவர்களைப் புறக்கணிக்கும்போது செல்லும் இடம் தெரியாமல் தவித்து வருவதையும் நேரடியாகப் பார்த்துள்ளேன். எனக்கு இந்த உடல், ஆரோக்கிய வாழ்க்கையை கடவுள் தந்திருப்பதற்கு ஏதாவது நோக்கம் இருக்கும் என்ற எண்ணத்தில் என் மனைவி ராஜேஷ்வரியிடம் இவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கலந்து பேசினேன்.
அப்போது அவர் கொடுத்த ஆலோசனைப்படி எங்களுக்கு இருந்த வசதியில் வயது முதிர்ந்த ஒருவருக்கு மட்டும் ஆதரவு அளித்து, தங்கும் இடம், உணவு அளித்து வந்தோம். இது படிப்படியாக உயர்ந்து 50 பேருக்கு மேல் ஆனது. இவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது, எனவே இவர்களுக்கு உதவிட வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது எங்களது குடும்பத்துக்கு ஆகும் செலவினங்களைக் குறைத்தோம். தேவையில்லாமல் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கால விரயம் செய்யாமல் இந்த ஆதரவற்ற மக்களுக்காக வாழ முடிவு செய்தோம். பல்வேறு நல்ல உள்ளங்கள் மத்தியில் இருந்து உதவிகள் கிடைக்கின்றன.
வயதானவர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவளிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் வெளியில் இருந்து சமைத்துக் கொண்டுவரும் உணவுகளை இங்கு தங்கியிருப்பவர்களுக்கு வழங்குவதில்லை. மாறாகப் பொருள்களாக வாங்கி அவற்றை இங்கு தங்கியுள்ளவர்களின் நிலைக்கேற்ப பாதுகாப்பான சத்தான உணவாக நாங்களே தயாரித்து வழங்கி வருகிறோம்.
சோலார் இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் சுடுதண்ணீர் வழங்கப்படுகிறது. எப்போதும் தொடர்பு கொள்ளும் வகையில் மருத்துவர் இருக்கிறார். இங்குள்ள ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை. அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இங்குள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் என அனைத்து விழாக்களையும் கொண்டாடுவோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுத் துணி, படுக்கை விரிப்பு, சோப்பு, சீப்பு கொடுப்போம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த இல்லத்துக்கு வந்து முதியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவார்கள். இதன் மூலம் அவர்கள் ஒருபோதும் தங்கள் பெற்றோரையோ அல்லது கவனிப்பு தேவைப்படுவோரையோ கைவிடக் கூடாது என்ற பாடத்தைக் கற்றுக் கொள்கின்றனர்.
எனது மனைவி ராஜேஸ்வரிக்கு சிறிது நேரம் கூட அலுவலகத்தில் உட்கார நேரம் இருக்காது. சமையல் பணியில் உதவியாக இருப்பார், பாத்திரங்கள் துலக்குவார், முதியோரின் துணிகளைக் கூட துவைப்பார்.
இவர்களுக்கு செய்யும் இந்தப் பணியால் எனக்கும், எனது மனைவி, பிள்ளைகளுக்கும் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. எங்கள் வாழ்நாளில் இந்த சேவையைத் தொடர்ந்து செய்து வருவோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.