முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கோடை இருள்...

இருளர் இனத்தின் வாழ்வியல் பதிவு

Updated On : 14 ஏப்ரல் 2024, 12:00 am IST
பகிர்:

"கோடை இருள்' - இருளர்களைப் பற்றிய படம். இலக்கிய உலகில் கவிதாயினியாகத் தடம் பதித்திருக்கும் குட்டி ரேவதி இயக்கிய படம். இருளர் இனம் உயர்வுப் பெறக் குரல் கொடுக்கிறார்.

இருளர்களின் வாழ்க்கை முறை அவர்களது தெய்வங்கள், கோயில்கள், திருவிழாக்கள், திருமணச் சடங்குகள், அவர்கள் பாடும் பாடல்கள், ஆடும் நடனங்கள், இதை எல்லாம் இந்தப் படம் விளக்கமாகப் பதிவு செய்திருக்கிறது.

சிகப்பி என்ற இருளர் இனப் பெண்ணின் வாழ்க்கைக் கதையை இந்தப் படம் சித்தரிக்கிறது. இருளர் இன இளைஞர் ஒருவர் சிகப்பியைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். இல்லறம் நல்லறமாக நடக்கிறது. வேலை பார்க்கும் இடத்தில் பணத்தைத் திருடி விட்டார் என்று இருளர் இன இளைஞரை முதலாளி சந்தேகப்பட்டு பலமாக அடித்துத் துவைத்து விடுகிறார். கணவரைத் தேடி வரும்போது, அவர் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடப்பதை அறிந்த சிகப்பி பதறுகிறாள்.

Advertisement

Advertisement

தனது கணவரின் கை எலும்பு முறிந்ததை அறிந்து, நாட்டு வைத்தியம் செய்யும் பெண்மணியிடம் சிகப்பி அழைத்துச் செல்கிறாள். அங்கு நடைபெறும் சிகிச்சையில் இருளர் இன இளைஞர் குணம் பெறுகிறார்.

சிகப்பி பாம்பு பிடிப்பதிலும் வல்லவள். அவள் பிடிக்கும் பாம்புகள், பாம்புப் பண்ணைக்குச் செல்கின்றன. பாம்புப் பண்ணையில் பாம்புகளின் விஷம் எடுக்கப்பட்டு மருத்துவம் செய்ய கொண்டு செல்லப்படுகிறது.

உள்ளூர் மைனர் ஒருவருக்கு சிகப்பியின் மீது ஆசை. அந்த மைனர் காமத்துடன் தன்னை நெருங்கும்போது, சிகப்பி தான் கையில் பிடித்து வைத்திருந்த பாம்பை வீசுகிறாள். பாம்பைக் கண்டு பயந்து மைனர் ஓட்டம் பிடிக்கிறார்.

படம் செய்திப் படமாக மாறிவிடாமல் இதைப் படமாகக் காட்சி அளிக்க கவிதாயினி குட்டி ரேவதி மிகுந்த அக்கறை எடுத்துகொண்டிருப்பதால், படம் பார்வையாளர்களை வசீகரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.