FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மண்ணுக்குள் சோழர் அரண்மனை!

பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் பல வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றது.

Updated On : 25 ஆகஸ்ட் 2024, 12:00 am IST
பகிர்:

பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் பல வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றது. சோழ மன்னன் விஜயாலயன் காலத்தில் தொடங்கி, மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் வளர்ச்சி பெற்று உயர்ந்த நிலையை எட்டியது.

மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இறப்புக்குப் பிறகு 1218- ஆம் ஆண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து தஞ்சாவூரைத் தீயிட்டு அழித்தான். இதில், அரண்மனை, மாளிகைகள், மண்டபங்கள் உள்ளிட்ட பல கட்டடங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு, அழிக்கப்பட்டன. மாலிக்காபூரின் படையெடுப்பின்போது இந்த நகரம் மேலும் அழிவுக்கு உள்ளானது.

தற்போதுள்ள அரண்மனை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அதன் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் இந்த அரண்மனையை விரிவுபடுத்தினர். இதனால், தஞ்சாவூரில் சோழர் கால அரண்மனை எங்கே என்ற கேள்வி தொடர்கிறது.

Advertisement

Advertisement

தஞ்சாவூரில் 1995 -ஆம் ஆண்டில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது, அரண்மனை வளாகத்திலுள்ள மணிகோபுரத்தின் முன் உள்ள சிறிய நீர் நிறையும் பள்ளம் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது, சீன நாட்டு களிமண்ணால் செய்யப்பட்ட யாழி, கோழி, ஒட்டகம் ஆகிய பொம்மைகள், பீங்கான் பானை ஓடுகள், இரும்பு ஆணிகள், முக்கோண வடிவ செங்கல், இரும்பு ஆணிகள், முக்கோண வடிவச் செங்கல்கள், இரும்புப் பூட்டுகள் என 150-க்கும் அதிகமான தொல்பொருள்கள் கிடைத்தன. இவை சுத்தம் செய்யப்பட்டு, சர்ஜா மாடியில் உள்ள மராட்டா அகழ்வைப்பகத்தில் தொல்லியல் துறையினர் காட்சிப்படுத்தியுள்ளனர்.

அரண்மனை வளாக மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவுக்கு அமைக்கப்படும் அரங்கத்துக்குள் மழைநீர் செல்வதைத் தடுப்பதற்காக ஏறத்தாழ ஒரு மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்படுவது வழக்கம். அப்போது சுமார் ஒரு மீட்டர் ஆழத்தில் தூண்களின் எச்சம், கூரை ஓடுகள், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் போன்றவை காணப்படுகின்றன.

நிகழாண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின்போதும் தோண்டப்பட்ட பள்ளத்தில் நாயக்கர், மராட்டியர் கால பானை ஓடுகள், கூரை ஓடுகள், சீன நாட்டு பானை ஓடுகள், செங்கல் கட்டடம், சுண்ணாம்பு பூச்சுடன் கூடிய கருங்கல் தூண்கள் காணப்பட்டன. கல் தூண்கள் சங்கீத மகால் பகுதியில் தொடங்கி மைதானத்தில் நேர் வரிசையில் தொடர்கிறது. இந்தத் தூண்களுக்கு கீழே கட்டடங்களும் இருப்பதாகத் தெரிகிறது.

மராட்டியர் காலத்தில் செம்புறாங்கற்கள், செங்கல், சுண்ணாம்பு பூச்சு போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. கீழே உள்ள கட்டுமானத்தில் கருங்கல் தூண்கள் காணப்படுவதால், அவை சோழர் காலத்தைச் சார்ந்ததாக இருக்கும் என்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதை முழுமையாக ஆய்வு செய்தால் சோழர் காலம் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான அய்யம்பேட்டை என். செல்வராஜிடம் பேசியபோது:

'சோழர்கள் இருந்த அரண்மனை, கோட்டை எல்லாமே இப்போது உள்ள இடத்தில்தான் இருந்திருக்க வேண்டும். இவற்றை மதுரை சுந்தரபாண்டியன் அழித்தவுடன், பிற்காலத்தில் வந்த நாயக்கர்கள் தஞ்சாவூர் அருகேயுள்ள அய்யம்பேட்டையில் சிறிது காலம் தங்கி இந்த அரண்மனையைக் கட்டியுள்ளனர்.

பூமிக்கு மேல் இப்போதுள்ள கட்டடங்கள் அனைத்தும் நாயக்கர்களும், மராட்டியர்களும் கட்டியவை. அதை யாரும் அழிக்கவில்லை. பூமிக்கு கீழே இருப்பது அதற்கு முன்பு ஆட்சி செய்தவர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும். அதனுடைய தொடர்ச்சிதான் சங்கீத மகால். அதனால்தான் இந்த மகால் பள்ளத்தில் உள்ளது. இதிலேயே சோழர் கால எச்சங்கள் உள்ளன. எனவே, அரண்மனை மைதானத்தில் அகழாய்வு செய்தால் சோழர் கால அரண்மனைக்கான சான்றுகள் நிறைய கிடைக்கும்.

நான் செய்த ஆய்வில் சோழர் காலத்து பானை ஓடுகள், சீன நாட்டு பீங்கான் ஓடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மற்றொருவர் எரிந்து போன இரும்புத் துண்டுகளைச் சேகரித்தார். இவை சுந்தரபாண்டியன் எரித்து சென்ற இரும்புத் துண்டுகளாக இருக்கலாம். மேலோட்டமாகத் தோண்டும்போதே இவ்வளவு பொருள்கள் கிடைக்கும்போது, முழுமையாக ஆய்வு செய்தால் இன்னும் நிறைய கிடைக்கும்.

இந்த அரண்மனை வளாகத்திலுள்ள அரசர் பள்ளியில் அண்மையில் புதிய கட்டடத்துக்கான அடித்தளம் தோண்டப்பட்டபோது, மண்ணுக்குள் பெரிய சுவர் இருப்பது தெரிய வந்தது. சர்ஜா மாடி கீழே சோழர் கால கல்வெட்டுத் துண்டுகள் இருக்கின்றன.

எனவே, அரண்மனை மைதானத்தில் அகழாய்வு செய்ய வேண்டும். தற்போது அகழாய்வுக்கான நவீன சாதனங்கள் வந்துவிட்டன. அதை வைத்து செய்தால் சோழர் கால கட்டடங்களின் மிச்சம் இருப்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியும். பரந்த அளவில் இல்லாவிட்டாலும், பரிசோதனை அடிப்படையில் சிறிய அளவில் குழி தோண்டி செய்யலாம்.

கீழடி, பொருநை உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுவது போல, இங்கும் அகழாய்வு செய்தால் சோழர் காலம் பற்றி நிச்சயமாக நிறைய தகவல்கள் கிடைக்கும்'' என்கிறார் செல்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments