திரைக்கதிர்
'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸூக்கு பிறகு அதன் ரீமேக் சர்ச்சைகள் குறித்துப் பேசியிருக்கிறார் ஹெச்.வினோத்.
'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸூக்கு பிறகு அதன் ரீமேக் சர்ச்சைகள் குறித்துப் பேசியிருக்கிறார் ஹெச்.வினோத். அந்தப் பேட்டியில் அவர், 'சினிமா என்பது ஒரு வியாபாரம். ஒரு இயக்குநராக எனது தொழிலை நேர்மையாகவும், உண்மையான ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். நான் ஒன்றும் பெரிய படைப்பாளி கிடையாது. ஆனால், நமது கற்பனைத் திறனை எந்தளவுக்கு வேலையில் கொண்டு வருகிறோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது.
வேறொரு படத்தை அப்படியே நகலெடுத்தால், அதில் படைப்பாற்றல் எங்கே இருக்கிறது? அதில் நாம் புதிதாக என்ன சேர்த்திருக்கிறோம்? தங்களது சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை வைத்துப் படம் எடுக்கும் பல இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் உண்மையான படைப்பாளிகள். நான் அப்படிப்பட்டவன் அல்ல. செய்திகளில் வரும் மனிதர்களின் கதைகளை எடுத்துப் படமாக மாற்றுகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த சில நாள்களாக, அர்ச்சகர் ஒருவர் மந்திரம் சொல்லும் காணொலி ஒன்றைப் பதிவிட்டு, 'இதனை அப்படியே எடுத்து வைத்துதான் 'கருப்பு' படத்தில் வரும் அந்தக் குறிப்பிட்ட பின்னணி இசையை சாய் அபயங்கர் அமைத்திருக்கிறார்' என விமர்சனம் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்குத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சாய் அபயங்கர்.
Advertisement
Advertisement
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் அந்தக் குறிப்பிட்ட பகுதி, தன்னுடைய ஸ்டூடியோவில் ரெக்கார்ட் செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். கடவுள் மந்திர வரிகளைக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட பகுதியை வாரணாசியைச் சேர்ந்த அர்ச்சகர் அனந்த நாராயணனை வைத்து சாய் அபயங்கர் ரெக்கார்ட் செய்திருக்கிறார். அந்த மந்திரத்தின் உச்சரிப்பு சரியாக வரவேண்டும் என்பதற்காகக் காசியைச் சேர்ந்த அர்ச்சகரை இங்கு வரவழைத்து ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் படம், 'அப்பா குட்டி'. இதில் பிரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்பிரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கண்ணை நம்பாதே', 'பிளாக் மெயில்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ராஜீவ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தந்தை - மகளுக்கு இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 2-ஆவது தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் நடிப்பது மட்டுமல்லாமல் இசையமைப்பு மற்றும் படத்தொகுப்புப் பணிகளையும் கவனிக்கிறார் விஜய் ஆண்டனி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.