கைப்பேசியை விடு... புத்தகத்தை எடு!
ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது ஒவ்வொரு வாசகரும் ஒரு புதிய வாழ்க்கையை அனுபவிக்கிறார்.
ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது ஒவ்வொரு வாசகரும் ஒரு புதிய வாழ்க்கையை அனுபவிக்கிறார். அவர் தனது வாழ்நாளில் எத்தனை புத்தகங்கள் வாசிக்கிறாரோ அத்தனை அனுபவம் கிடைக்கிறது. தொலைக்காட்சி, கைப்பேசி, சமூக வலைதளங்கள் ஆகியன நமது நேரத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியவுடன், நம்மிடையே வாசிக்கும் பழக்கம் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த நிலையை மாற்ற பெரும் முயற்சியை திருச்சி ஹைவேஸ் காலனி, சுந்தர்ராஜ் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அந்தப் பகுதி மக்களிடையே மேற்கொண்டு வருகின்றனர்.
சுந்தர்ராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கப் பொருளாளரும், ஓய்வு பெற்ற பத்திரிகையாளருமான சையத் முதஹர் சகாப், 2018-ஆம் ஆண்டு முதல் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து மாணவர்கள், பொதுமக்களிடம் செய்தித்தாள், புத்தக வாசிப்பை இயக்கமாக மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டிலேயே திண்ணை நூலகத்தை அமைத்து, மக்களுக்குப் புத்தகங்களை வழங்கி வருகிறார். அந்த நூலகத்தைக் கண்காணிக்க யாரும் இல்லாத நிலையிலும், பொதுமக்கள் அங்குள்ள குறிப்பேட்டில் பதிவு செய்துவிட்டு, புத்தகத்தை எடுத்துச்சென்று படித்துவிட்டு மீண்டும் அங்கு வந்து வைத்து விடுகின்றனர்.
இதுகுறித்து சையத் முதஹர் சகாப் நம்மிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
'நான் 9-ஆம் வகுப்பு படிக்கும்போது எனது வகுப்பாசிரியர் சிவதீனநாதன் வாசிப்பின் அவசியம் குறித்து விளக்கினார். அன்றுமுதல் வாசிப்பு மீது எனக்கு ஒரு பெரும் ஈர்ப்பு இருந்து வருகிறது. பணியாற்றிய காலங்களிலேயே வாசிப்பை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற வேட்கை இருந்தது. ஆனால், பணிச்சூழலால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.
பணி ஓய்வுக்குப் பின்னர், வாசிப்புப் பழக்கம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல 2020-ஆம் ஆண்டு எங்கள் பகுதியிலுள்ள பூங்கா அருகே 'செய்தித்தாள் மேஜை' என்ற திட்டத்தை சங்க நிர்வாகிகளுடன் இணைந்து தொடங்கினோம். அந்த மேஜையில் செய்தித்தாள்களை வைத்தோம். பூங்காவுக்கு வருபவர்கள் மட்டுமின்றி அவ்வழியே சென்ற பொதுமக்களும் படிக்க ஆரம்பித்தனர்.
நாங்கள் மேற்கொண்டு வரும் வாசிப்பு இயக்க முயற்சிகளை 2025-ஆம் ஆண்டில் அறிந்த அப்போதைய திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், பூங்காவில் ஒரு படிப்பகம் அமைத்துக் கொடுத்தார். இந்தப் படிப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
செய்தித்தாள் வாசிப்பு இயக்கம்: பின்னர் மாதத்தில் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் நடத்தத் தொடங்கினோம். இதில், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு செய்தித்தாள்களை வாசிக்கின்றனர். வாசித்து முடிந்தவுடன் மாணவர்களுக்கு விநாடி-வினா நடத்தப்பட்டு சரியான பதிலளிக்கும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மாதம் ஒரு புத்தகம்: 'மாணவர்களுக்கு மாதம் ஒரு புத்தகம்' என்ற திட்டம் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் 30 பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ஒரு புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. சிறிய புத்தகங்களையே வழங்குகிறோம். உதாரணமாக, ஜெயமோகனின் யானை டாக்டர் போன்றவை. அதைப் படித்துவிட்டு அவர்கள் அந்தப் புத்தகம் குறித்து விமர்சனம் செய்யவேண்டும். இதுவரை 6 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டின் நிறைவில் அவர்களிடம் 10 புத்தகங்கள் இருக்கும்.
ஹைவேஸ் காலனி சுந்தர்ராஜ் நகரில் உள்ள 300 வீடுகளில் 40 வீடுகளில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் நூலகம் என்ற அமைப்பை உருவாக்கிவிட்டால், குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தையும் எளிதாக ஏற்படுத்திவிடமுடியும்.
வாசிப்பு என்பது ஒரு பழக்கம் மட்டுமில்லை; அதுவொரு வாழ்வியல் ஒழுக்கம். ஒழுக்கமே வாழ்வை வளப்படுத்தும். வாசிப்பை நேசிக்க வைத்துவிட்டால், குழந்தைகள் ஒரு செயலை ஒழுக்கத்துடன் மேற்கொண்டு வெற்றி பெறுவார்கள். மாணவர்களிடையே புத்தக வாசிப்பை வழக்கப்படுத்தும் விதமாக இப்பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படிக்கும் 125 மாணவர்களை அய்யப்பா நகரில் உள்ள அரசு கிளை நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளோம். அந்த நூலகம் சார்பில் என்னை சமூக ஆர்வலர் என அங்கீகரித்து 100 புத்தகங்களை வழங்கியுள்ளனர். இந்தப் புத்தகங்களை மாதந்தோறும் மாணவர்களுக்கு வழங்குகிறோம்.
புத்தகக் கண்காட்சி: ஆண்டுக்கு 5 முறை புத்தகக் கண்காட்சி நடத்துகிறோம். இதற்காக மாணவர்களுக்கு உண்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதில் சேர்த்து வைக்கும் பணம் மூலம் புத்தகங்கள் மட்டுமே வாங்க வலியுறுத்துகிறோம். மாணவர்களும் பணம் சேமித்து புத்தகங்கள் வாங்குகின்றனர். அவர்களை வாசிக்க வைப்பதில்தான் பெரும் சவாலே உள்ளது.
தவிர, மாணவர்களுக்கான பட்டிமன்றம், தேர்தலின் அவசியம் குறித்து உறவினர்களுக்கு மாணவர்கள் மூலம் அஞ்சல் அட்டை அனுப்புதல், ஒலிம்பிக் - காமன்வெல்த் போன்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கையொப்ப இயக்கம், மஞ்சப்பை இயக்க விழிப்புணர்வு, மரக்கன்று வளர்ப்பு, கோடைக் காலத்தில் பறவைகளுக்குத் தண்ணீர் வழங்குதல் எனப் பல்வேறு முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இது என் தனி முயற்சி அல்ல. சங்கத்தினர் தரும் உற்சாகமும் ஆதரவும்தான் காரணம். சுந்தர்ராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலர் துரை செந்தில்குமார் இந்த திட்டச் செலவை ஏற்பதால் புத்தகம் வாங்கமுடிகிறது. பேப்பர் சந்தா செலுத்த முடிகிறது. இது வீண் செலவு என்று அவர் கூறியதே இல்லை. நாங்கள் செய்யமுடியாததை நீங்கள் செய்கிறீர்கள். நன்றாகச் செய்யுங்கள் என்கிறார். அதனால் இது சாத்தியமாகிறது' என்கிறார் சையத் முதஹர் சகாப்.
படங்கள்: வி. நாகமணி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.