முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சிறு துளி பெருவெள்ளம்...

'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் கோவையில் அரன்பணி அறக்கட்டளையானது 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் தொடங்கப்பட்டது.

Updated On : 25 ஜனவரி 2026, 4:04 am IST
பகிர்:

'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்படும் கோவையில் அரன்பணி அறக்கட்டளையானது 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் தொடங்கப்பட்டது. சேவை மனப்பான்மைக் கொண்ட நூறு பேருடன் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, தற்போது 25 ஆயிரம் பேரோடு உயர்ந்து நிற்கிறது.

ஒவ்வொருவரும் மாதம்தோறும் நூறு ரூபாய் இன்முகத்தோடு தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல், அரிய தொண்டுகளை இந்த அறக்கட்டளையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

'என்னென்ன சேவைகள் செய்துள்ளீர்கள்?' என்று அந்த அறக்கட்டளையின் தலைவர் பவானி தியாகராஜனிடம் கேட்டபோது:

Advertisement

Advertisement

'வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத் திருமேனிகளுக்குப் பாதுகாப்பு அரண் போல நிழற்கூரைகளை அமைத்துத் தருகிறோம். இத்தகைய திருமேனிகளைக் கண்டு யார் தகவல் கூறினாலும், உடனே அங்குச் சென்று உள்ளுர் மக்களின் சம்மதத்துடன் உடனடியாக நிழற்கூரைகளை அமைக்கிறோம்.

அதன் எதிரே ஆவுடையுடன் கூடிய பாணத்தையும் நிறுவுகிறோம். முதல் நாள் பூஜை நடத்தி முடித்தவுடன் ஆன்மிக நூல்களை அளிக்கிறோம். இதன்வாயிலாக, இசைப் பாடலோடு கூடிய நித்ய வழிபாட்டை தினமும் நடத்திக் காட்டிடும் அற்புத வாய்ப்பு உருவாகிறது.

ஓதுவாமூர்த்தியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களில் சிரமத்துடன் இருப்பவர்களைக் கண்டறிந்து மாதம் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகையாக வங்கிக் கணக்குகளின் மூலம் வழங்கி வருகிறோம்.

பெரியபுராணம், தேவாரம், திருமுறை நூல்களைத் தரமாக அச்சடித்து, மிகக் குறைந்த விலைக்கு எளிய மக்களிடம் சேர்க்கிறோம். இதனால் மக்களிடையே தற்போது மறுபடியும் வாசிப்புப் பழக்கத்தையும் ஆன்மிக நேசிப்பையும் உருவாக்கிடும் முயற்சியையும் மேற்கொள்கிறோம்.

51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தை மணிவாசகரின் அவதாரத் தலமான திருவாதவூரில், 'திருவாசக சபா' என்ற மண்டபத்தை உருவாக்கி, 365 நாள்களும் நடைபெறும் திருவாசக பாராயணம் நிகழ்வில் பங்கேற்போருக்கு மூன்று வேளையும் அன்னதானம் அளித்து வருகிறோம்.

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களுக்கு தீப எண்ணெயும், நாயன்மார்கள் குரு பூஜைக்கான அபிஷேகப் பொருள்களையும் வழங்கிவருகிறோம்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் இலவசமாக சைவசித்தாந்த, பெரியபுராண சொற்பொழிவுகளை மாதம்தோறும் நடத்திவருகிறோம்.

சிதிலமடைந்த பழமையான சிவன் கோயில்களில் அதன் பழமை மாறாமல் திருப்பணிகளை மேற்கொண்டு, வழிபாட்டைத் தொடர வழிவகை செய்கிறோம்.'' என்றார் பவானி தியாகராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.