முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சவால்கள் நிறைந்த பயணத்தில் சாகசம் செய்த ஜெமினி கணேசனின் பேத்தி!

'மலையேற்றப் பயணம் சவால்கள் நிறைந்தது. பருவநிலை மாறுபாடுகளால் சிகரங்கள் உருகி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும். நதிகள் திசை மாறும்.

Updated On : 14 ஜூன் 2026, 4:04 am IST
பகிர்:

'மலையேற்றப் பயணம் சவால்கள் நிறைந்தது. பருவநிலை மாறுபாடுகளால் சிகரங்கள் உருகி, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும். நதிகள் திசை மாறும். பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் பெரும் தாக்கத்துக்குள்ளாகும். உயிரைக் கையில் பிடித்தவாறே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளிலும் பயணத்துக்கு ஏற்ற சூழ்நிலை ஒரு சில மணி நேரங்களே நிலவும்.

திடீரென்று பனிக்கட்டிகள் உடைந்து கீழே வருகிற ஆபத்தும் இருக்கும்' என்கிறார் சென்னையின் முன்னணி செயற்கை கருத்தரிப்புச் சிகிச்சை மருத்துவர் பிரியா செல்வராஜ். இவர் நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சிகிச்சை முன்னோடி மருத்துவர் கமலா செல்வராஜ் மகளும், நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தியும் ஆவார். இமயமலையில் எவரெஸ்ட் மலையை அண்மையில் ஏறி சாகசப் பயணம் மேற்கொண்ட பிரியா செல்வராஜிடம் பேசியபோது:

கரோனா காலத்தில் நான் என் தந்தையை இழந்ததால், பெரும் சோகத்துக்கு உள்ளானேன். அப்போது மருத்துவமனையிலும், வீட்டுக்குள்ளேயும் வாழ்க்கை முடங்கியதால் எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாவும் சோர்வு ஏற்பட்டது. இயற்கை எழிலான மலைப்பகுதிக்குச் சென்று வந்தால் மனம் எவ்வளவு புத்துணர்ச்சி பெறும் என்று அறிந்தேன்.

Advertisement

Advertisement

நானும் எனது நண்பர்களும் மேற்கு வங்கத்தில் எட்டு நாள் மலையேற்றப் பயணம் மேற்கொண்டோம். அந்தப் பயணம், சொகுசு ஏதுமின்றி, குறைவான வசதிகளோடு இருந்தது. இருந்தாலும், மன அமைதி, புத்துணர்ச்சி, மன மகிழ்ச்சி உள்ளிட்டவை கிடைத்தது. இதனால் ஆண்டுதோறும் மலையேற்றத்துக்குச் செல்வது என்றும், ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டைவிட அதிக உயரம் செல்வது என்றும் முடிவெடுத்தோம்.

எனது 50-ஆவது வயதையொட்டி 2023-ஆம் ஆண்டில் தான்சானியா நாட்டில் உள்ள கிளிமாஞ்சாரோவில் மலையேற்றம் மேற்கொண்டது வாழ்க்கையில் மறக்க முடியாத வகையில் கொண்டாட்டமாக அமைந்தது. பின்னர், முறையான மலையேற்றப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து சான்றிதழ் பெற்றேன்.

அடுத்து நேபாளத்தில் உள்ள மனஸ்லூ சிகரத்தை அடைந்தேன். அதன்பின் மலையேற்றப் பயணங்கள் ஆன்மிக உணர்வூட்டும் பயணமாகவே அமைந்தன.

எனது மலையேற்றப் பயணங்களுக்கான பயிற்சியை சென்னையிலேயே மேற்கொண்டேன். பளு தூக்கிக் கொண்டு, சரிவான பாதையில், படிகட்டுகளில் ஏறி இறங்கினேன். ஓட்டப்பயிற்சி செய்தேன்.

அண்மையில் இமயமலையின் எவரெஸ்ட் மலையேற்றப் பயணத்தை மேற்கொண்டோம். இந்த ஆண்டின் பயணம் சிறப்பு வாய்ந்தது. முப்பது நாள்களில் முடிய வேண்டிய பயணம், வானிலை பாதிப்புகள் உள்ளிட்ட பல காரணங்களால் 45 நாள்களுக்கு நீடித்துவிட்டது. மிரட்டும் சவால்கள் நிறைந்த பயணம்.

எவரெஸ்ட் சிகரத்தைத் தொட வேண்டும் என்பதே என் லட்சியம். அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதையும் நான் அறிவேன். எப்படியும் அதை நான் வெற்றிகரமாக செய்து முடிப்பேன்.

மலையேற்றப் பயணங்களுக்காக உடற்பயிற்சியாளர் சுகப்ராதீப், வழிகாட்டி அனூப் குரங்க், பயண ஏற்பாடுகளைச் செய்த நிர்மல் புர்ஜா ஆகியோருக்கு நன்றி' என்கிறார் பிரியா செல்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.