காஷ்மீரில் இட்லிக் கடை
காஷ்மீருக்குத் தன்னந்தனியே சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த சிந்து, தனது வாழ்க்கை முற்றாக மாறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
காஷ்மீருக்குத் தன்னந்தனியே சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த சிந்து, தனது வாழ்க்கை முற்றாக மாறும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இன்று அவர் பெண் தொழில்முனைவோராக, ஸ்ரீநகரில் இரண்டு உணவகங்களை நடத்தி வருகிறார். மாலை நேரங்களில் இந்த உணவகங்களில் இட்லிகளின் வாசமும், நெய்யில் முறுகும் தோசையின் நறுமணமும், டால் ஏரியிலிருந்து வீசும் இதமான காற்றுடன் கலந்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. தோசை வார்ப்பதற்கு மட்டும் இரு தமிழர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார். உள்ளூர் பணியாளர்கள் இதர உணவகப் பணிகளைச் செய்கின்றனர்.
காஷ்மீரின் பாரம்பரிய ஆடையான 'ஃபெரான்' அணிவதை வழக்கமாக்கிக் கொண்டு, காஷ்மீர் பெண்ணாகவே மாறிவிட்ட சிந்து கூறியது:
'கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் நாடு முழுவதும் தனியாகப் பயணிக்கத் தொடங்கினேன். கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி உள்ளிட்ட மாநிலங்களில் பயணித்தேன். காஷ்மீர் பயணம் எனது பயணத் திட்டத்தில் இருக்கவில்லை. ஜம்முவுக்கு தில்லியிலிருந்து ரயில் இருப்பதை அறிந்து அங்குச் சென்றேன்.
Advertisement
Advertisement
வடக்கே சில இடங்களில் தென்னிந்தியப் பெண் என்பதால், என்னிடம் பாகுபாடு காட்டினர் . ஆனால், காஷ்மீரில் எந்தப் பாகுபாடும் காட்டவில்லை. பாதுகாப்பாகவே உணர்ந்தேன். காஷ்மீரின் கிராமப்புறங்களில் நான் தங்கியிருந்தபோது, அங்குள்ளோர் வசதியாக இல்லை. ஆனாலும், அவர்களிடம் இருந்ததிலேயே மிகச் சிறந்த உணவை எனக்கு வழங்கினர்.
காஷ்மீரில் கிடைத்த உபசரிப்பு வேறெங்கும் எனக்குக் கிடைத்ததில்லை. அந்த உணர்வே என்னை ஸ்ரீநகரில் நிரந்தரமாகத் தங்கத் தூண்டியது.
காஷ்மீரில் நான் கண்டு அதிசயித்த அழகிய புல்வெளிகள், ஆர்ப்பரித்து ஓடும் நீரோடைகள், மக்களின் அன்றாட வாழ்க்கை, உள்ளூர் மக்களுடனான உரையாடல்களை காணொலிகளாகப் பதிவு செய்து வெளியிட்டேன். இவை பலரையும் காஷ்மீருக்கு வரவழைத்தது.
2022-இல் சுற்றுலா பயண நிறுவனத்தைத் தொடங்கினேன். தற்போது சுமார் 24 பேருக்கு அது வேலைவாய்ப்பு அளித்திருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காஷ்மீருக்கு வந்து செல்ல உதவியுள்ளோம்.
தென்னிந்தியர்களுக்கு இங்கிருக்கும் உணவு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. சில நாள்களிலேயே பலருக்கு உடல்நலக்குறைவோ, அசெளகரியமோ ஏற்படுகிறது. அவர்களுக்கு இட்லி, தோசை போன்ற எளிமையான உணவுகளே தேவைப்பட்டன. எனவே, கயாம் பகுதியில் 120 சதுர அடி இடத்தில் 2024 செப்டம்பரில் 'தோசை டிலைட்' என்ற பெயரில் சிறிய இட்லிக்கடையைத் திறந்தேன்.
சொந்த ஊரில் இரவு 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன். ஸ்ரீநகரில் நள்ளிரவும்கூட உணவகத்தை மூடிவிட்டுத் தனியாகவே வீட்டுக்கு வருகிறேன்.
நான் எந்தவிதமான தொல்லைக்கும் ஆளானதில்லை.
என் உணவக வாடிக்கையாளர்களில் 90 சதவீதம் பேர் காஷ்மீர் மக்கள். சுற்றுலாப் பயணிகள் குறைவாகவே வருகின்றனர். உள்ளூர் மக்களில் பலர் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி போன்ற நகரங்களில் படித்தவர்களாகவோ அல்லது பணிபுரிந்தவர்களாக இருந்தனர்.
அங்கு அவர்கள் சாப்பிட்டு மகிழ்ந்த 'இட்லி, தோசை சுவை' அவர்களை எனது உணவகத்துக்கு அழைத்துவந்தன. இங்கு சாப்பிடுவதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
எங்களுக்குத் தேவையான இட்லி அரிசி, உளுந்து, புளி, பெருங்காயம், ஃபில்டர் காபித் தூள் ஆகியவற்றை தமிழ்நாட்டில் இருந்தே வரவழைக்கிறோம். போக்குவரத்துச் செலவு மிக அதிகம் ஆகிறது. அனைத்துப் பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் தருவதால், உணவகத்திலிருந்து சொல்லிக் கொள்கிற மாதிரி லாபம் கிடைப்பதில்லை. சுற்றுலாப் பயண நிறுவனத்தில் வருமானம் வருவதால், கயாம், ஜவஹர் நகர் பகுதிகளில் இரண்டு உணவகங்களை நடத்திச் செல்ல முடிகிறது.
காஷ்மீரி திருமணங்களில் உள்ளூர் பாரம்பரிய 'வாஸ்வான்' உணவு வகைகளுடன், தோசைக்கான கவுன்ட்டரையும் அமைக்கச் செய்யும் அளவுக்கு தோசையைப் பிரபலமாக்க முடிந்துள்ளது. அதுவே எனது உணவகங்களுக்குக் கிடைத்த வெற்றி. எனது உணவகத்துக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் வருகை தந்துள்ளனர்' என்கிறார் சிந்து மிகவும் உற்சாகத்துடன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.