பொறுமை அவசியம்...
கையில் உயர்ரக காமிரா இருந்தாலும், நல்ல புகைப்படத்தை எடுத்துவிட முடியாது.
'கையில் உயர்ரக காமிரா இருந்தாலும், நல்ல புகைப்படத்தை எடுத்துவிட முடியாது. ஒரு காட்சியை முழுமையாக உள்ளுணர்ந்து, சரியான தருணத்துக்குக் காத்திருக்க வேண்டும். அதற்கு பொறுமை மிகவும் அவசியம்' என்று கூறியவர், உலகப் புகழ் பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் ரகு ராய்.
1942- ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜாங் பகுதியில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்தவர் ரகு ராய். இவர் கட்டடவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் எஸ்.பி.ராய் அளித்த ஊக்கத்தால், புகைப்படத் துறைக்கு ரகுராய் வந்தார். அவரது தொழில்முறை காமிரா பயணம் 1960-களில் தொடங்கியது. தன் வாழ்க்கையையே புகைப்படக் கலைக்கு அர்ப்பணித்த அவர், 'பத்மஸ்ரீ' விருது பெற்றவர். இவர் தனது 83-ஆம் வயதில் தில்லியில் அண்மையில் மறைந்தார்.
ஒருமுறை இளம் புகைப்படக் கலைஞர் ஒருவர், 'எந்த காமிரா வாங்கலாம்?'' என்று கேட்டபோது ரகு ராய், 'முதலில் உன் கண்களால் பயிற்சி செய். பின்னர் காமிரா வாங்கலாம். ஒரு நல்ல புகைப்படம் என்பது கண்ணால் மட்டும் அல்ல; மனதாலும் பார்க்கப்பட வேண்டும்'' என்பார் ரகுராய்.
Advertisement
இவர் 1966-இல் ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையில் தலைமைப் புகைப்படக் கலைஞராகத் தன் பத்திரிகைப் பயணத்தைத் தொடங்கினார். இந்திய அரசியல், சமூக வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய சம்பவத்தையும் அவர் படம் பிடித்திருக்கிறார். வறுமை, நகர வாழ்க்கை, கிராமப்புறங்கள், மத விழாக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவை அவரது காமிராவால் உயிர்ப்புடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இவரது புகைப்படங்கள் கலைநயமிக்கவை, ஆழமான பார்வையைக் கொண்டவை. மனித உணர்வுகளை நுட்பமாகப் பதிவு செய்வதில் அவர் வல்லவர். ஒளி, நிழல், அமைப்பு ஆகியவற்றை திறமையாகப் பயன்படுத்தி, ஒவ்வொரு புகைப்படத்தையும் ஒரு கலைப் படைப்பாக மாற்றுவது அவருக்குக் கை வந்த கலை.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மிக அருகில் இருந்து பலமுறை படம் பிடித்திருக்கிறார் ரகுராய். ஒருமுறை பாதுகாப்பு அலுவலர்கள் இல்லாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்த இந்திரா காந்தியை படம் பிடித்தார். அந்தப் புகைப்படம் அதீத அதிகாரத்தின் பின்னால் இருக்கும் ஒரு பெண்மணியின் தனிமையை வெளிப்படுத்தியது.
1975-இல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது ஊடகங்களின் மீது கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. அந்த நேரத்தில் உண்மையான தருணங்களை பதிவு செய்வது ஆபத்தானதாக இருந்தது. தில்லியின் மிகவும் நெரிசல் மிகுந்த பரபரப்பான சாந்தினி சௌக் பகுதி வெறிச்சோடிக் கிடக்க, அங்கே கண்ணில் பட்டவர்கள் அனைவரும் காவலர்கள் மட்டுமே என்பதை அவர் புகைப்படம் எடுத்தார். 'நெருக்கடி நிலையின் யதார்த்தம் என்ன?' என்பதை அது வெட்ட வெளிச்சமாக்கியது.
கொல்கத்தாவில் அன்னை தெரசாவை எடுத்த புகைப்படங்கள் எளிமையையும், கருணையையும் மிகவும் ஆழமாக வெளிப்படுத்தின. அவரைப் படம் பிடிக்கும்போது, ஒருவிதமான அமைதியை உணர்ந்ததாக ரகு ராய் கூறியுள்ளார்.
தலாய் லாமா, சத்யஜித் ரே, ஹரிபிரசாத் செளராசியா, பிஸ்மில்லா கான் உள்ளிட்ட பிரபலங்களை படம் பிடித்தவர் ரகுராய். பிரபலங்கள், சாமானியர்கள், அகதிகள் என்று யாரை படமெடுத்தாலும் ரகுராய் காட்டும் தொழில் சிரத்தை ஒரே மாதிரியானது. அதுவே அவரது பலமும்கூட. அவர் 'மேக்னம் போடோஸ்' என்ற அமைப்புடன் இணைந்தவுடன், அவர் எடுத்த பல புகைப்படங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தன. உலக அளவில் பல புகைப்படக் கண்காட்சிகளில் அவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவர் எடுக்கும் புகைப்படங்களில் சிரிப்பு, துயரம், பயம், நம்பிக்கை போன்ற உணர்வுகள் மிகவும் இயல்பாக வெளிப்படும். இவர் யாரையும் 'போஸ்' கொடுத்து புகைப்படம் எடுக்க விரும்ப மாட்டார். 'இயல்பாக இருங்கள்! நான் படம் எடுத்துக் கொள்கிறேன்!'' என்று கூறுவார். அவர் பெரும்பாலும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களை எடுக்கவே விரும்புவார். இதனால் கவனம் சிதறாமல் உணர்வுகளின் மீது கவனம் குவிகிறது.
போபால் விஷவாயு விபத்தின்போது ரகு ராய் எடுத்த ஒரு குழந்தையின் உயிரிழந்த உடலை காட்டும் புகைப்படம் துயரத்தின் சின்னமாக மாறியது. தில்லியின் குழப்பம், அழகு, வாழ்க்கை எனப் பல பரிமாணங்களையும் பதிவு செய்துள்ளார். உலகப் புகழ் பெற்ற தாஜ்மகாலை மனிதர்கள், ஒளி, காலநிலை ஆகியவற்றுடன் இணைத்து புதிய கோணத்தில் காட்டியவர் ரகுராய்.
'அப்பாவுக்கு இரண்டு ஆண்டுகள் முன்பு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. உரிய சிகிச்சையால் அவர் முற்றிலும் குணமடைந்துவிட்டார். சில மாதங்கள் கழித்து வயிற்றுப் பகுதிக்கு பரவியதும் சிகிச்சையால் குணப்படுத்தப்பட்டது. அண்மையில் அவரது மூளைக்கு புற்றுநோய் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதுமைக்குரிய பிரச்னைகளும் இருந்தன. மருத்துவர்கள் முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை'' என வருத்தத்துடன் கூறுகிறார் ரகு ராயின் மகனும், புகைப்படக் கலைஞருமான நிதின் ராய்.