முகப்பு

அன்புக்கு எல்லை இல்லை

கேரளம் வயநாட்டின் அருகே அண்மையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் மதம், மனிதாபிமானத்தின் அனைத்து எல்லைகளையும் தாண்டி தனித்து நிற்பதால் கவனம் ஈர்த்துள்ளது.

14 வினாடிகள் முன்பு
அன்புக்கு எல்லை இல்லை
கல்யாணியம்மா
பகிர்:

கேரளம் வயநாட்டின் அருகே அண்மையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் மதம், மனிதாபிமானத்தின் அனைத்து எல்லைகளையும் தாண்டி தனித்து நிற்பதால் கவனம் ஈர்த்துள்ளது.

வாரிசுகளோ, உறவினர்களோ இல்லாத எண்பத்து ஐந்து வயது கல்யாணியம்மா, நவம்பர் 10-இல் காலமானார். அவரை ஐம்பது ஆண்டுகளாக தங்கள் குடும்பத்தில் ஓர்அங்கமாகப் பராமரித்து வந்த அண்டை வீட்டார், இறுதிச் சடங்குகளையும் நடத்தினர். முதுமையில் பெற்றோரைப் பராமரிக்க முகம் சுளிக்கும் வாரிசுகள் பெருகிவரும் இன்றைய காலட்டத்தில், 'பழகிவிட்டார்' என்ற ஒரே காரணத்துக்காக சுமார் ஐம்பது ஆண்டுகளாக கண்ணின் கருமணியாகக் கரிசனமாக யார் பார்த்துக் கொள்வார்கள்.

மூப்பையநாடு ஊராட்சிக்கு உட்பட்ட 'சித்ரகிரி' கிராமத்துக்குள் பல ஆண்டுகளாகச் சிலாகித்துப் பேசப்பட்ட கல்யாணியம்மாவின் பராமரிப்பு, இன்று அகில இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement

கல்யாணியம்மா சுமார் 50 ஆண்டுகளாகத் தனியாகவே வாழ்ந்து வந்தார். இருந்தாலும், முதுமையின் சவால்களை அவர் ஒருபோதும் தனியாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படவில்லை. காப்பன் ரஸாக், அவரது தம்பி சுலைமான், அவர்களது குடும்பத்தினர், கல்யாணியம்மாவைத் தங்கள் சொந்தத் தாயைப் போலவே கவனித்துக் கொண்டனர். கல்யாணியம்மாவுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை தங்கள் கடமையாகச் செய்து வந்தனர்.

ரஸாக்

சென்ற ஆண்டில், கல்யாணியம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் படுக்கையில் முடங்கிய நிலையில், ரஸாக் குடும்பத்தினர் கல்யாணியம்மாவை தங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டனர். குறிப்பாக, ரசாக்கின் மனைவி ருகியா, மிகுந்த அர்ப்பணிப்புடன் கல்யாணியம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தார். கல்யாணியம்மா இயற்கை உபாதைகளை படுக்கையில் நிறைவேற்ற முகம் கோணாமல் கவனித்தார் ரசாக்கின் மனைவி ருகியா. இத்தனைக்கும் ரஸாக் குடும்பம் ஒரு சராசரி நடுத்தர குடும்பம்தான்.

கல்யாணி அம்மா காலமான பிறகு, அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய குடும்பத்தினர் யாரும் இல்லாததால், கல்யாணியம்மா விரும்பியபடி, ரசாக் - சுலைமான் அந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். உள்ளூர் கோயில் நிர்வாகிகள் கல்யாணியம்மா - ரஸாக் குடும்பத்தினர் பந்தம் பிணைப்பை அறிந்திருந்ததால் கல்யாணியம்மாவின் கடைசி விருப்பம் நிறைவேற ஒத்துழைத்தனர். 'இவர் மடம்' பூசாரியின் வழிகாட்டுதலின்படி, 'அந்தூர் குறிஞ்சிலகம்' மயானத்தில் இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்து, உடலைத் தகனம் செய்தனர். இறுதிச் சடங்கின் செலவுகளை ஏற்றுக் கொண்டதும் ரஸாக் - சுலைமான்தான்.

ருகியா

'கல்யாணியம்மாவை தங்களது தாயாக மதித்து கண்ணின் இமை போல கவனித்து வந்த ரஸாக் குடும்பத்தினர், ஈமச் சடங்குகளையும் செய்யப் போகிறார்கள்' என்று தெரிந்ததும் ஊரேகூடி கல்யாணியம்மாவுக்கு அஞ்சலி செலுத்தி பிரியாவிடை அளித்தது.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.