முகப்பு

அமெரிக்காவில் தமிழும், தமிழ்ப் பண்பாடும்!

எழுத்தாளர், ஓவிய ஆசிரியர், அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவில் பணியாற்றுபவர் எனப் பன்முகத்தன்மையோடு பயணித்து வருபவர் ஷீலா ரமணன்.

5 வினாடிகள் முன்பு
அமெரிக்காவில் தமிழும், தமிழ்ப் பண்பாடும்!
ஷீலா ரமணன்
பகிர்:

எழுத்தாளர், ஓவிய ஆசிரியர், அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவில் பணியாற்றுபவர் எனப் பன்முகத்தன்மையோடு பயணித்து வருபவர் ஷீலா ரமணன்.

டெக்சாஸ் மாகாணத்தில், சான் அன்டோனியோ நகரில் குடும்பத்துடன் வசிக்கும் இவரிடம் பேசியதிலிருந்து:

'எங்களுடைய பூர்விகம் தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட உத்தமபாளையம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றேன். சிறு வயதிலிருந்து, ஓவியங்கள் வரைதல் மிகவும் பிடிக்கும். சிறு சிறு போட்டிகளில் கலந்துகொள்வேன். திருமணத்துக்குப் பின்பு, புணேவில் முறையாக ஓவியம் கற்றுக் கொண்டேன். பின்னர் அதையே அமெரிக்காவில் எனது பணியாக மாற்றிக் கொண்டேன். எனது வகுப்புக்கு வரும் குழந்தைகள், பெரியவர்கள் எனப் பல தரப்பினரையும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. பலரையும் ரசிக்கின்றேன். இதனால் எனது மனமகிழ்ச்சி பெருகுவது மட்டுமல்லாமல், தினமும் புத்துணர்ச்சியாக உணர்கிறேன்.

Advertisement

Advertisement

எழுத்துப் பயணம்

'அம்மா உன்னை எண்ணி ஏங்குகிறேன்', 'வெற்றி உனதே எழுந்து வா', 'போவோமா மெக்சிகோ', 'போவோமா துபாய்-கலிஃபோர்னியா' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளேன். 'வலசை சென்ற வண்ண மயில்கள்' (ஹைக்கூ தொகுப்பு நூல்), 'மங்கையராய் பிறப்பதற்கே' (கவிதைத் தொகுப்பு நூல்), 'வேணாம் சிரிச்சிருவேன்' (சென்ரியு தொகுப்பு நூல்) ஆகிய தொகுப்புகளில் பங்களித்துள்ளேன்.

குறிப்பிட்ட மனிதரின் வாழ்க்கைப் பற்றிய குறிப்புகள், நிகழ்வுகளை வெறும் கட்டுரைகளாக மட்டுமே எழுதாமல், அவரின் வாழ்ந்த காலத்துக்கே சென்று அப்படியே எழுதுகின்றேன். என்னைப் பொருத்தவரை பயோகிராஃபியின் முக்கியத்துவமே, அதைப் படிக்கும்போது அந்தச் செய்திகளை கொடுத்தவர்களுக்கே புதிதாகப் படிப்பது போலவும், கண்முன்னே இப்போதுதான் நடந்தது போலவும் இருக்க வேண்டும். அநாவசியமாக எதையும் திணிக்காமல், அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறும் தகவல்களைக் கொண்டு, உள்ளது உள்ளபடியே, உயிரோட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.

அண்மையில் 'டோரதி' திரைப்படம் திருநங்கைகளை உயர்த்தும் வகையில் வந்துள்ளது. ஆனால், நான் 8 வருடங்களுக்கு முன்பே அப்படி ஒரு கதையை எழுதியிருக்கிறேன். அக்கதைக்காக அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறந்த கதைக்கான 'அறிவொளி விருது' கிடைத்தது. அதேபோல் ஆஸ்டின்-டெக்சாஸ் தமிழ்ச் சங்கத்தின் ஆம்பல் மலருக்காக எழுதிய ஒரு சிறுகதை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 'அல்ஜைமர்' எனும் நினைவுகளை மெல்ல மெல்ல இழந்து வரும் வயதான ஒரு பெண்மணியின் நிலமையை, அவர் கணவர் பார்வையில் இருந்து பார்க்கும்படி அக்கதை இருக்கும்.

தமிழ்ச் சங்கப் பணி

இந்தியாவில் உள்ள வாழ்க்கை முறை, பண்பாடு, கலாசாரம், அரசியல் அமைப்பு ஆகியவற்றை நாம் தெரிந்து வைத்துள்ளோம். அதுவே நாம் பிற நாடுகளுக்குப் பயணப்படுகின்றோம். அங்கேயே நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம் என்ற பட்சத்தில் அந்நாட்டின் கலாசாரம், பண்பாடு, அரசியல் என அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமே. அவ்வகையில் அமெரிக்காவில் தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறேன்.

அப்போது, தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவது, தமிழில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுத வைத்தல், பட்டிமன்றம், கலந்துரையாடல் போன்றவற்றில் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக ஊக்குவித்தல், எங்காவது நிகழ்ச்சிகள் நடந்தால் அதில் கலந்து கொள்ள அனுப்பி வைத்தல் இதுபோன்ற பணிகளைச் செய்தும் வருகிறேன்.

என் கருத்துகளை கதாசிரியராக, பயணக்கட்டுரைகள் வாயிலாக பல தளங்களில் பதிவு செய்கிறேன். இங்கு நடக்கும் நிகழ்வுகள், விழாக்கள், பெரும் மாநாடுகள் என அனைத்தையும் தொகுத்து வழங்கி வருகின்றேன். எங்கள் அக்கம்பக்கத்தில் வாழும் தோழர்களான அமெரிக்கர்கள், பிற நாட்டவர்கள் உணரும் வகையில் அடிக்கடி நமது செயல்பாடுகள் மூலம் எடுத்துக் காட்டுகிறோம். விழாக்களுக்கு அழைக்கிறோம். உணவு பரிமாறிக் கொள்கிறோம். அதே போல அவர்கள் பழக்கவழக்கங்கள் குறித்துப் பேசுகிறேன். இது சமூகப் பார்வையில் நம்மை பலரும் அறியச் செய்யும். நாம் பலரையும் அறிந்து கொள்ள உதவும். நம்மால் நிச்சயம் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை அளிக்கும்.

வித்தியாசமான 100-க்கும் மேலான ஆளுமைகளை நேர்காணல்கள் செய்துள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தனித்தன்மைகளைக் கொண்டவர்கள். இவர்களிடம் இவ்வளவு திறமைகளா, இவ்வளவு வேலைகள் ஆற்றியவர்களா இப்படி ஆச்சரியப்பட்ட நேர்

காணல்கள் பல இருக்கின்றன. ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு பாடம் கற்றுக் கொண்டுள்ளேன்.

நமக்கு இருக்கும் திறமைகளை, நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பண்படுத்தி அதனை நமக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு மகிழ்ச்சியாகவும், பிறர் மதிக்கத்தக்க வகையிலும், செயல்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்துகிறேன். அளவாகப் பேசி வளமோடு வாழவேண்டும் என்று ஆசைப்படும் விஷயங்களை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்'' என்றார் ஷீலா ரமணன்.

-பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.