வயிறு வலிக்க சிரிக்கலாம்...
நடப்பாண்டு யாருக்கு எப்படி அமைந்திருக்கிறதோ? இல்லையோ? ஆனால், நடிகை சம்யுக்தா விஸ்வநாதனுக்குச் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.

நடப்பாண்டு யாருக்கு எப்படி அமைந்திருக்கிறதோ? இல்லையோ? ஆனால், நடிகை சம்யுக்தா விஸ்வநாதனுக்குச் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.
'ஐ அம் கேம்', 'டபுள் ஆக்குபன்சி' என அடுத்தடுத்துக் கவனிக்க வைத்த நடிகை சம்யுக்தா, 'மிஸ்டர் பாரத்' திரைப்பட வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார்.
'மிஸ்டர் பாரத்' எப்படி உருவாகியிருக்கிறது என அவருடன் ஒரு சந்திப்பு:
Advertisement
Advertisement
'மிஸ்டர் பாரத்' திரைப்படம் குறித்துச் சொல்லுங்கள்?
நான் முதல் முதலில் ஒப்பந்தமான திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'. சொல்லப் போனால் என்னுடைய அறிமுக திரைப்படமே இதுதான். ஆனால், அதன் பிறகு ஒப்பந்தமான திரைப்படங்கள் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு விட்டன.
2024 ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகும்போது, இந்த அணியில் இணைந்த புதிய நபர் நான் மட்டுமே. எனினும் பாரத், நிரஞ்சனின் விடியோக்கள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவர்களுடன் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
உங்களது கதை தேர்வுகள் எப்படி இருக்கின்றன?
நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கவே விரும்புகிறேன். 'ஐ அம் கேம்' திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்தது நல்ல அனுபவம். இயக்குநர் நாகாஸ் எனக்கு நன்கு பரிச்சயமானவர். 'டபுள் ஆக்குபன்சி' திரைப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்டது.
என்னுடைய கதாபாத்திரமும் திரைப்படத்தில் முக்கியமான ஒன்று என்பதால், அதில் மகிழ்ச்சியுடன் நடித்தேன். ரசிகர்களும் அதற்குண்டான வரவேற்பை எனக்குக் கொடுத்தனர். தனித்துவமான எனது நடிப்பை கதாபாத்திரங்களில் கொடுக்கவே ஆசைப்படுகிறேன். அதைக் கூடுமானவரை நிறைவேற்றவும் முயற்சிக்கிறேன்.
'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் புதிய படக்குழுவுடன் இணைந்துள்ளீர்கள். இந்த அனுபவம் எப்படி இருந்தது?
படப்பிடிப்புத் தளம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பாரத், நிரஞ்சனின் விடியோக்களுக்கு இணையத்தில் இருக்கும் வரவேற்பு எப்படி கிடைத்தது என்பதை படப்பிடிப்பு தளத்தில் உணர முடிந்தது. இதுமட்டுமல்லாமல் இயக்குநர், நடிகர் என்பதைத் தாண்டி அனைத்து வேலைகளையும் அவர்கள் அக்கறை எடுத்துச் செய்தனர். துடிப்பான, கலகலப்பான அனுபவத்தை மிஸ்டர் பாரத் எனக்குக் கொடுத்திருக்கிறது.
வசனங்கள் பேச கஷ்டப்பட்டதாகக் கேள்விப்பட்டோமே?
அப்படி இல்லை. தமிழில் சரியாக உச்சரிக்க விரும்புகிறேன். படப்பிடிப்புத் தளத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும்போது சிரிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. எனக்கு இயல்பாக தமிழில் த, ட ஆகிய எழுத்துகளின் உச்சரிப்பு கடினமாகவே உள்ளது. 'கடத்தப்பட்டது' என்னும் சொல்லை உச்சரிக்க கடினமாகவே இருந்தது. சில டேக்குகள் எடுத்தாலும் முயற்சித்து அதை முடித்தேன். டப்பிங் செய்யும் போது அதை இன்னும் இயல்பாக்க முயற்சிக்கிறேன்.
'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
நகைச்சுவையான ஒரு திரைப்படமாக 'மிஸ்டர் பாரத்' இருக்கும். மூன்று வருடங்கள் ஆனாலும் இன்றைக்கும் இளமையான காட்சிகள் திரைப்படத்தின் உள்ளன. அதுபோக நிரஞ்சனின் எழுத்தும், எங்களது நடிப்பும் ரசிகர்கள் ஏற்கும் வகையில் கண்டிப்பாக இருக்கும். இரண்டரை மணி நேரம் வயிறு வலிக்க சிரிக்க 'மிஸ்டர் பாரத்' கண்டிப்பாக உறுதியளிக்கிறது. எனவே மறக்காமல் திரையரங்குகளில் ரசிகர்கள் இதைப் பார்க்கலாம்.