குழந்தை பெற்றால் காசு கொட்டும்!
இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் பல குழந்தைகள் இருப்பார்கள்.
இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் பல குழந்தைகள் இருப்பார்கள். 1990-களில் 'நாம் இருவர்; நமக்கு இருவர்' என்ற பிரசாரம். 'நாமிருவர்- நமக்கொருவர்' என்ற நிலை இப்போதாகிவிட்டது. இதுவே இப்போது உலகெங்கும் பின்பற்றக்கூடிய நிலையாகும். ஆனால், சிங்கப்பூரில் பெற்றோர் குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்று அமலாகி உள்ளது.
அதாவது, 'சிங்கப்பூரில் குழந்தை பெற்றால் ரூ.50 லட்சம்' என்று சமூக ஊடகங்களில் ஒரு வாரமாகத் தகவல்கள் வைரலாகிவருகின்றன. உண்மையில் அந்த நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், இத்தகைய முடிவை பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகஸ்ட் 23-இல் நடைபெற்ற தேசிய தினப் பேரணியில் வெளியிட்டார்.
சிங்கப்பூரின் மொத்த கருவுறுதல் விகிதம் 2025-ஆம் ஆண்டில் 0.87 என்ற மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் மக்கள்தொகை குறையக்கூடும் என்ற கவலை அரசிடம் உள்ளது.
Advertisement
Advertisement
அதனால், குழந்தை பெற விரும்பும் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பொருளாதாரம், சமூகத் தடைகளைக் குறைப்பது அரசின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது. இதன்படி, குழந்தை பிறந்தது முதல் 17 வயது வரை பல்வேறு கட்டங்களில் வழங்கப்படும் நேரடி நிதியுதவி, சேமிப்பு, மானியங்கள், கல்வி சார்ந்த உதவிகளைச் சேர்த்தால் ஏறக்குறைய 70 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அளவுக்கு ஆதரவு கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம்.
குழந்தை பிறந்தவுடன் முதலாண்டில் 10 ஆயிரம் டாலர் 'குழந்தைக்கான பரிசு', சுகாதாரச் செலவுகளுக்காக 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும். ஒரு வயதை எட்டியவுடன், 16 வயது வரை ஆண்டுக்கு 2 ஆயிரம் டாலர் வீதம், 32 ஆயிரம் டாலர் வழங்கப்படும்.
குழந்தையின் வளர்ச்சிக்கான வங்கிக் கணக்குத் தொடங்கப்படும்போது, ஆரம்ப மானியமாக 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும். குழந்தை 17 வயதை அடையும்போது, உயர்கல்விக்காக 10 ஆயிரம் டாலர் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்தின்படி நேரடி நிதியுதவியாக 62 ஆயிரம் டாலர் வரை வழங்கப்படும்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் உதவிகளையும் சேர்த்தால், குழந்தை 17 வயதை அடையும் காலத்தில், 70 ஆயிரம் டாலர் வழங்கப்படும். ஆகவே, இந்திய மதிப்பில் ரூ.52 லட்சம் என்பது நிர்ணயிக்கப்பட்ட பரிசு கிடையாது. சிங்கப்பூர் டாலரின் மதிப்பு, கணக்கிடப்படும் மாற்று விகிதத்தின் அடிப்படையில், ரூபாய் மதிப்பு மாறுபடும். இந்தத் தொகை முழுவதும் குழந்தை பிறந்தவுடன் பெற்றோரின் கையில் கிடைக்கும் பணம் கிடையாது.
திட்டத்தின் சாதகமும், பாதகமும்..?
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், 2026-ஆம் ஆண்டில் 17 வயது அல்லது அதற்குக் குறைவான சிங்கப்பூர் குழந்தைகளுக்கும் வயதுக்கேற்ப பயன்கள் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று மட்டும் கூறும் ஊக்குவிப்பு அல்ல; குழந்தை பிறந்தவுடன் அதை வளர்க்கும் பல ஆண்டுகளின் சுமையை பெற்றோர் தனியாகச் சுமக்க வேண்டாம் என்பதே நோக்கம்' என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
குழந்தை பிறப்புக்கான செலவு, வளர்ப்பு, வேலை, குடும்பச் சமநிலை, குழந்தை பராமரிப்பு, பெற்றோர் விடுப்பு, வீட்டு வசதி உள்ளிட்ட அம்சங்களை ஒருங்கிணைத்த குடும்ப ஆதரவுக் கொள்கையாக த் திட்டம் கருதப்படுகிறது.
ஒரு குழந்தை உள்ள பெற்றோருக்கு ஆண்டுக்கு 8 நாள்கள், இரண்டு குழந்தைகள் உள்ளவர்களுக்கு 10 நாள்கள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு 12 நாள்கள் என விடுமுறை வழங்கும் முறையில் மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக வீடு வாங்கும் குடும்பங்களுக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதல் நிதி வாய்ப்பு வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தை பராமரிப்புச் செலவும் குறையும். இதன் மூலம், குழந்தை வளர்ப்பின் பொருளாதாரச் சுமையை குழந்தை பிறக்கும் நேரத்தில் மட்டும் அல்லாமல், குழந்தையின் ஆரம்பக் கல்வி, பராமரிப்புக் காலத்திலும் குறைக்க சிங்கப்பூர் அரசு முயற்சி செய்கிறது.
அரசு பல ஆயிரம் டாலர்களைச் செலவிட்டாலும், குழந்தை பெறும் முடிவைப் பொருத்தவரையில், அது பெற்றோரிடம்தான் உள்ளது. வீட்டு வேலை, வேலைப்பளு, குழந்தை பராமரிப்பு, கல்விச் செலவு, பெற்றோரின் தொழில் வளர்ச்சி, திருமண வயது உள்ளிட்ட பல விஷயங்களை கவனத்தில் கொள்ள நேரிடுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.