எளிய தமிழில் ஆதிசங்கரர் வாழ்க்கை
சென்னை நாரத கான சபாவில் 'மதர் கிரியேஷன்ஸ்' அரங்கேற்றிய ஜகத்குரு நாடகம் ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக விளக்குகிறது.
டி.எஸ்.
சென்னை நாரத கான சபாவில் 'மதர் கிரியேஷன்ஸ்' அரங்கேற்றிய ஜகத்குரு நாடகம் ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக விளக்குகிறது. ஆதிசங்கரர் வரலாற்றில் அனைவராலும் ஏற்கப்பட்ட விஷயங்களை மட்டுமே மையப்படுத்தி, நாடகத்தை வடிவமைத்து, மிக எளிமையாக, அழகாகச் செய்துள்ளனர்.
தெரிந்த கதை, திடீர் திருப்பங்களுக்கு இடமில்லை. இருந்தும்கூட சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பார்வையாளர்களை வசப்படுத்த முடிகிறது என்பதே பெருமை சேர்க்கிறது.
Advertisement
Advertisement
நாடகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நிஜம். பிரதமர் மோடி கேதார்நாத்தில் திறந்து வைத்த ஆதிசங்கரர் சிலை ஒளித்திரையில் தெரிய, ஒருவர் வணங்கி நிற்கிறார். சில நிமிடங்களில் புரிந்து விடுகிறது. அவர் பிரதமர் மோடி. அந்த அளவுக்கு கச்சிதமான மேக்அப். சிலையை
பிரதமர் மோடி திறந்து வைத்துப் பேசிய உரையை அதே தொனியில் அந்த நடிகர் பேசி அசத்துகிறார். பிறகு கதை தொடங்குகிறது.
தாயின் அனுமதி கிடைத்தவுடன் சந்நியாசம் மேற்கொள்ளும் பாலசங்கரர் மேடையைவிட்டு அரங்கத்தில் பார்வையாளர்கள் மத்தியில் இறங்கி நடந்து, கதவைத் திறந்து வெளியேறுவதும், மற்றொரு கதவு வழியாக வளர்ந்த ஆண் மகனாக சங்கரர் நுழைந்து மேடையேறுவதும் அழகாக அமைந்திருந்தது. நோய்ப் படுக்கையில் உள்ள தாய் ஆரியபட்டாள் முன்பாக பால சங்கரர் இரண்டு முறை கடந்துசென்று மறையும்
போதுதான், பிரிவால் தவிக்கும் தாயின் மனச் சித்திரம் என்று புரிகிறது. நாடக இயக்குநர் சி.வி. சந்திரமோகனின் திறமை பிரகாசிக்கிறது. சங்கரரின் தாயாக நடித்துள்ள மாலதி சம்பத் சிறப்பாகச் செய்திருந்தார்.
'விலகிப் போ?' எனச் சொல்லும் சங்கரரிடம், 'இந்த உடலையா அல்லது ஆன்மாவையா... எதை விலகிப் போகச் சொல்கிறாய்?' என்று கேட்கும் சண்டாளனாக நடித்த சி.வி.குமார் பிரதமர் மோடியாகவும் நடித்துள்ளார். அபார நடிப்பு. சங்கரராக நடித்த ஸ்ரீராம் உள்பட அனைவருமே நன்றாகவே நடித்துள்ளனர்.
சங்கரரை முதலை கவ்வும் காட்சியின் நேரத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். அந்தச் சூழ்நிலையில் எவ்வளவு நேரம் ஒருவர் வாக்குவாதம் செய்ய முடியும். சங்கரர் பிறந்தவுடன் தொட்டில் ஆட்டும் காட்சியும் குறைத்திருக்கலாம். எவ்வளவு நேரம்தான் தொட்டிலை ஆட்டி, அங்கு இல்லாத குழந்தையைத் தொட்டுத் தொட்டு முத்தமிட முடியும்.
இந்த நாடகத்தில் பாராட்டுக்குரிய விஷயம், எளிய நல்ல தமிழ் வசனங்கள் அமைந்திருந்தன.
'நான் வரவேண்டி வணங்கினாயா, என் வரம் வேண்டி வணங்கினாயா...?'
'மகனே நான் வெள்ளந்தியாகப் பேசுகிறேன், நீயோ வேதாந்தியாகப் பேசுகிறாய்'
'நீ கனிவுடன் கொடுக்கும் கனியை ஏற்றுக்கொள்வேன் தாயே'
'அன்னையே நான் போயாக வேண்டும். அப்படியான் மகனே நான் அழுது ஓய வேண்டும்.'
இப்படியாக நல்ல தமிழில் எதுகை மோனையுடன் வசனங்கள். பகவத்பாதர், 'நீ யார்' என்று கேட்கிறபோது, 'நிர்வாண ஷட்கம் ஒலிக்கும்' என்று நாம் நினைத்தால், பாலசங்கரர், 'மனம் புத்தி அகங்காரம் சித்தம் இவை நான் அல்ல' என்று தமிழில் வசனம் பேசுகிறார்.
இந்தியாவில் இந்து மதம் நிலைக்க சங்கரர் ஆற்றிய பணியை விவரிக்கும் இந்த நாடகம் தமிழ்ச் சமூகம் முழுமைக்கும் பொதுவானது என்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளனர் நாடகக் குழுவினர்.
ஆதிசங்கரர் அழைத்தவுடன் கங்கை மீது நடந்து வரும் பத்மபாதர் எவ்வாறு வந்தார் என்பதை விளக்க தாமரை மலர்கள் நதியில் இருந்து மேலெழுகிற காட்சியும், ஏழைப்பெண் குடில் எதிரே கிளைகளுடன் ஒரு மரமும் , பொன்மழை அந்தப் பெண்ணின் தலைமீது தங்க நெல்லிக் காய்களாகப் பொழிவதும், பால சங்கரரின் காலை முதலை கவ்வுவதும், ஈசன் தோன்றுகிற காட்சிகளில் புகை எழுப்புவதும் பார்வையாளர்களை காட்சியில் ஒன்றிடச் செய்கின்றன.
மண்டன மிஸ்ரருடன் சங்கரர் நடத்தும் விவாதங்களை இசையில் கலந்த உடல் அசைவுகளாக மாற்றிய உத்தியும், சரஸவாணியின் விவாதத்தை தவிர்த்த நுட்பமும் பாராட்டுக்குரியவை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.