சிஜேபி போராட்டக்காரர்களை சுற்றிவளைக்கும் காவல்துறை?பிரதமர் சொன்ன மன்னிப்பு இதுதானா?
சிஜேபி போராட்டக்காரர்களை சுற்றி வளைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையில், பிரதமர் மோடி மன்னிக்க வேண்டும் என்று விடியோ வெளியிட்டது பற்றி..
சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தன்னை அவதூறாகப் பேசினாலும் அவர்களை மன்னிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விடியோ வெளியிட்ட சில மணி நேரங்களில், மாணவி ஒருவரின் மன்னிப்புக் கோரும் விடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களது விவரங்களைத் திரட்டி, நேரடியாக வீடுகளுக்கே சென்று மிரட்டல் விடுப்பது, காவல்நிலையம் அழைத்து வந்து மிரட்டுவது, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடித்து இவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சி தன்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறது.
சிஜேபி போராட்டத்தில் காவல்துறை வரம்பு மீறல் குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், போராட்டத்தில் பங்கேற்ற குற்றப் பின்னணி இல்லாத 18 வயதுக்குக் கீழுள்ள சிறார்களை விடுவிக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றன, தகுதியுள்ள போராட்டக்காரர்கள் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலும் சிறுமி மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் மிரட்டப்பட்டு, மன்னிப்புக் கேட்கும் விடியோ வெளியாகியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Advertisement
Advertisement
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜிநாமாவை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான்பூச்சி மக்கள் கட்சி போராட்டத்தின்போது, மாணவர்கள் சிலர் பிரதமர் மோடி குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டனர். கேலியாகச் சித்திரிக்கும் புகைப்படங்கள் கொண்ட பதாகைகளையும் வைத்திருந்தனர்.
இந்த நிலையில்தான், சிஜேபி போராட்டத்தில் பங்கேற்ற 15 வயது மாணவி ஒருவரின் மன்னிப்புக் கோரும் விடியோ நேற்று வெளியாகியிருக்கிறது.
நொய்டாவைச் சேர்ந்த ருச்சிகா சிங் என்ற அந்த 15 வயது மாணவி, கைகளைக் கூப்பியவாறு மன்னிப்புக் கோரும் விடியோவை வெளியிட்டிருக்கிறார். "சிஜேபி போராட்டத்துக்கு எனது நண்பருடன் சென்றேன். அங்கே போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, பலரும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அதுபோல நானும் சில மோசமான கருத்துகளை தெரிவித்தேன். எனக்கு வயது 15தான். நான் சொன்ன கருத்துகளுக்கு மன்னிப்பு இல்லை. மிக மோசமான கருத்துகளைக் கூறினேன். இதுதான் என்னுடைய முதலும் கடைசியுமான தவறு. இதுபோல மீண்டும் செய்ய மாட்டேன், விடியோக்களை வெளியிட மாட்டேன், ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்புக் கோருகிறேன். என்னால் உங்களைப் பார்க்கவே முடியவில்லை. தயவுகூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள்" என்று விடியோவில் அவர் குறிப்பிடுகிறார்.
பிரதமரை அவதூறாகப் பேசியதாக கடந்த புதன்கிழமை, நெய்டாவைச் சேர்ந்த இந்த சிறுமி மீது, காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, அது தில்லி காவல்துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், இந்த விடியோ வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குழந்தைகள், அவர்களை மன்னித்துவிட வேண்டும் என்று கூறி பிரதமர் மோடி விடியோ வெளியிட்ட சில மணி நேரங்களில் இந்த சிறுமியின் விடியோ வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
அதாவது, தில்லி ஜந்தா் மந்தரில் நீட் தோ்வு தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் சிலா், என்னையும் மறைந்த எனது தாயாரையும் தரக்குறைவாகப் பேசினா், அவர்களை மன்னிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் விடியோ வெளியிட்ட ஒரு சில மணி நேரத்தில், இந்த சிறுமியின் விடியோ வெளியாகியிருக்கிறது.
பிரதமர் மோடி வெளியிட்ட விடியோவில், "போராட்டத்தில் ஈடுபட்டுத் தரக்குறைவாகப் பேசியவா்களை தவறாக வழிநடத்தப்பட்ட குழந்தைகளாகவே கருதுகிறேன். அவா்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற விசாரணையை எதிா்கொள்ள வைப்பதோ பிரச்னைகளை தீா்க்காது. அவா்களை நான் மன்னிக்க விரும்புகிறேன்.
மனிதா்கள் தவறு செய்வது இயல்பு. ஆனால் நம் நாட்டு பெண்கள் ஆபாசமாக பேசுவது அதிா்ச்சியளிக்கிறது. இது நமது கலாசாரம் அல்ல. வழிதவறிச் சென்ற நமது இளைஞா்களை நாம் மன்னிக்க வேண்டும். அவா்களை நல்வழிப்படுத்துவோம்.
நாக்கை கடித்துக்கொண்டதற்காக பற்களை நாம் பிடுங்கிவிடுவதில்லை. அதுபோலத்தான் நமது இளைஞா்களும். அவா்கள் நமக்குச் சொந்தமானவா்கள். இளைஞா்கள் முன்வந்து தமது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும். நமது நாடு முன்னேறி வருகிறது; இளைஞா்களும் முன்னேறிச் செல்ல வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
மாணவர்களை மன்னிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடியோ வெளியிட்டிருந்தாலும், மறுபக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து அவர்களது வீடுகளுக்குச் சென்று மிரட்டல் விடுப்பதாகவும், குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
மேலும், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தன்னடைய எக்ஸ் பக்கத்தில், தகாத வார்த்தைகளைப் பேசியவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றால், பெண்கள் குறித்து பேசிய பாஜக தகவல் தொழில்நுட்ப நபர்கள் மீதும் வழக்குத் தொடர வேண்டும் அல்லவா?
பிரதமரின் ஆதரவாளர் என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொள்ளும் பலரும், சமூக வலைத்தளங்களில் பெண்களை மிக மோசமாகப் பேசுகிறார்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவது எப்போது?
அவதூறாகப் பேசுபவர்கள் மீது நேரடியாக கிரிமினல் குற்றச்சாட்டு நடவடிக்கைகளை எடுப்பதா? அவ்வாறு தொடர்வதாக இருந்தால் பாஜகவினர் மீது அல்லவா தொடர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி விடியோ வெளியிட்டிருக்கிறார்.
மன்னிப்பு கேட்டு வெளியிட்டுள்ள விடியோவில் சிறுமி ருச்சிகா சிங் மிகவும் மிரண்டுபோயிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தச் சிறுமியும் குடும்பத்தினரும் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தததாகவும் சில நாள்கள் அந்தச் சிறுமியைக் காணவில்லை என்றும் சமூக ஊடகர்கள் தகவல்களைப் பகிர்கின்றனர்.
Is the police surrounding the CJP protesters? Is this the apology the Prime Minister spoke of?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.