FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

மின்னொளியாள் குறம்

"குறம்' என்பது சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. "மின்னொளியாள் குறம்' என்ற சிறிய நூல் புகழேந்திப் புலவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.

Updated On : 22 ஆகஸ்ட் 2021, 5:00 pm IST
பகிர்:

"குறம்' என்பது சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. "மின்னொளியாள் குறம்' என்ற சிறிய நூல் புகழேந்திப் புலவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த புகழேந்திப் புலவர், தான் இருந்த இடத்தின் அருகில் வந்த மக்களுக்காக சில நூல்களைப் பாடிக் கொடுத்தார் என்று ஒரு செய்தி உண்டு. அவற்றுள் ஒன்று "மின்னொளியாள் குறம்' என்று நம்பப்படுகிறது. அழகான தமிழ்ப் பெயர் கொண்ட இந்நூல் நாட்டுப்புறப் பாட்டமைப்பில் அமைந்துள்ளது.

இந்நூல் விநாயகர் வணக்கத்துடன் "ஐந்து கரத்தானே, அருள் சடையாள் புத்திரனே'  என்றும், "பட்டணமாம் பட்டணமாம் இந்திராபுரி பட்டணமாம்' என்றும் தொடங்குகிறது. இந்நூலின் தலைவி மின்னொளி. அர்ச்சுனனுடைய தேவியர்கள் (மனைவிகள்) 17 பேர் என்று குறிப்பிடுகிறது. அவர்களுள் ஒருத்தியே இந்த மின்னொளி. இவள் மேகராசன் பெற்ற மகள். (நூலின் பிற்பகுதியில், இவள் சோழன் திருமகள் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்)

மின்னொளி சிவபூஜையில் ஆழ்ந்திருந்தாள். அப்போது அர்ச்சுனன் அங்கு வந்தான். அவன்,  "ஆசையெல்லாம் உன்மேல் /  அலையுதே, என்ன செய்வேன் / என்னிலும் பூசைஎன்ன / ஏந்திழையே உந்தனுக்கு / பத்தா நான் இருக்கையிலே / பரமன்பூசை உனக்கேண்டி' என்கிறான். 

Advertisement

Advertisement

அரனை நினைந்துருகி பூஜை செய்துகொண்டிருந்த மின்னொளி கடுங்கோபம் கொண்டாள். "புத்தியில்லாமல் போச்சோ போர் விசயா உந்தனுக்கு' என்றாள். மேலும்  அவள், "வேண்டாம் என்று சொல்லி விருதெடுத்து ஊதிவைத்தாள் / ஆகாது அவனன்என்று அருச்சுனனை ஊதி வைத்தாள்'. அப்படி அவள் சொன்னதைக் கேட்டு சினம் கொண்ட அர்ச்சுனன் அங்கிருந்து வெளியேறினான்.

இந்தச் செய்தியை துரோபதை (திரெளபதி) அறிந்தாள். அவள் சமாதான முயற்சி மேற்கொண்டாள். பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தாள். அழகு மன்னன் அர்ச்சுனரின் தேவியர் அனைவரையும் விருந்துக்கு அழைத்தாள். கொம்பனை மின்னொளியும் வந்தாள். மனைவியர் அனைவரும் அம்மானைப் பந்தாடினர்; மகிழ்ச்சியும் கொண்டனர்;  விருந்துணவும் உண்டனர். பிறகு, மின்னொளியாள் பற்றிய பேச்சு எழுந்தது. "புருஷன் இருக்கையிலே (அவள்) பெருஞ்சிறை காப்ப தென்ன?' என்ற கேள்வியும் பிறந்தது.

மின்னொளியின் எதிர்மாறான போக்கு மாறுவதற்கு விடை ஒன்று கிடைத்தது. அர்ச்சுனன் குறத்தி வேடம் போட்டுக்கொள்ள வேண்டும். அவன் மின்னொளியிடம் போக வேண்டும். அவளுக்குக் குறிசொல்ல வேண்டும். அவளை இணங்கச் செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தைத் துரோபதையும் அல்லியும் வகுத்தார்கள்.

அர்ச்சுனன் அழைத்துவரப்பட்டான். அவனிடம் அந்தத் திட்டம் சொல்லப்பட்டது. அவனும் சம்மதித்தான். அவன் குறத்தி ஒப்பனை செய்துகொண்டு மின்னொளி வீட்டை அடைந்தான். குறத்தியை (அவனை) அவள் வரவேற்றாள். 

அர்ச்சுனன் அவளுக்குக் குறி சொன்னான். அறிவுரையும் கூறினான். "பத்தாவை நொந்தவர்கள் புற்றாகச் சமைவார்' என்றான். அதாவது, "கணவனின் மனத்தை நோகச் செய்யும் மனைவி புற்றாக மாறிவிடுவார்கள்' என்றான். "வித்தான கணவன் விரைந்தோடி வருவான்' என்றும் சொன்னான். மகிழ்ச்சி கொண்டாள்  மின்னொளி. பின்பு அவளும் அவனும் ஒரு கலத்தில் உணவு உண்டனர். 
பிறகு குறத்தி வேடம் நீங்கிய அர்ச்சுனன் மின்னொளியின் கண்களைப் பொத்தினான். அவள் அவனை உணர்ந்தாள். இருவரும் மகிழ்வுற்றார்கள். இவ்வாறு மின்னொளியாள் குறம் இனிதாக நிறைவு பெறுகிறது. இதன் இறுதிப் பகுதி பின்வருமாறு அமைகிறது:

"விளங்கிய சீர் மாதவத்து 
மின்னொளியாள் தன் கதை
எழுதிப் படித்தவர்கள் இந்திரனைப்
போல் வாழ்ந்திடுவார்
காளை குறம் கற்றோர்கள்
காசினியில் வாழ்ந்திடுவார்
கன்னியர்கள் கேட்டால்
கடுகமணம் பெறுவார்
ஆல்போல் தழைத்து 
அறுகுபொல் வேரோடி
மூங்கில் போல் சுற்றம் 
முசியாமல் வாழ்ந்திருப்பார்'

இறுதியிலுள்ள உவமைகள் இன்றும் வாழ்கின்றன. இந்நூலில் பல புதிய உவமைகளும் உள்ளன. "இஞ்சி இடுப்பழகி' என்று தொடங்கும் திரைப்பாடல் முன்பு நாடெல்லாம் பரவலாகப் பாடப்பட்டது. 

அதன் வேர் மூலம், இந்த நூலில்தான் உள்ளது. அது "இஞ்சி இடை துவள, எலுமிச்சை தனம் குலுங்க' என்ற அடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments