திருக்குறளில் குடி மேலாண்மை
திருக்குறளில் மேலாண்மை நுட்பங்கள் செறிந்து கிடக்கின்றன. உலக மேலாண்மைத் துறை வித்தகமெல்லாம் இந்த தவ நூலில் பொதியக் காணலாம்.
பா. பூமாரி
திருக்குறளில் மேலாண்மை நுட்பங்கள் செறிந்து கிடக்கின்றன. உலக மேலாண்மைத் துறை வித்தகமெல்லாம் இந்த தவ நூலில் பொதியக் காணலாம்.
உலகெங்கும் அரைக்காணி நிலத்தில் தனிமனிதன் ஏர்பிடித்து உழுது தன் குடும்பத்துக்கான உணவை விளைவித்துக் கொண்டிருந்த காலத்தில் மேலாண்மை விதை முளைக்கவில்லை.
Advertisement
Advertisement
பிரிட்டனில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குப் பிறகு தொழில் துறைகள் பொருள் உற்பத்தியைப் பெருக்கின. ஆர்த்திடும் இயந்திரக் கூடங்கள் முகிழ்த்தன. தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பெருகினர். கூலி ஊதியமாயிற்று. அவர்கள் தேவைகள் பெருகின. இந்நிலையிலேயே மேலாண்மைக் கோட்பாடுகள் உருவாகின.
குடி என்பது குடும்பம், குலம் எனும் அமைப்புகளைக் குறிக்கும். உழவதிகாரத்தின் முன் இடம்பெறும் குடிசெயல்வகை' என்னும் அதிகாரம் குடி மேலாண்மை குறித்தது.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். (1023)
எனக் குடி மேலாண்மையில் முயல்வானுக்குத் தெய்வம் ஆடையை வரிந்து கட்டிக்கொண்டு தானே முற்பட்டு நிற்கும் என்று கூறக் காணலாம். குடும்ப மேலாண்மைக்கு என்ன வேண்டும்!
கருமம் செய்யத் தயங்காமை', முயற்சியும் ஆன்ற அறிவும்' குற்றமில்லா மனநிலை' சுற்றத்தவரைத் தாங்கும் பண்பு' சோம்பாமை'.
இப்பண்புகள் உடையவனது குடும்பம் எவ்வகை ஆராய்ச்சிக்கும் இடனின்றி முன்னேறக் காணலாம். குடி மேலாண்மை செய்வார். தாளாண்மை என்னும் முயற்சியை உடையவராதல் வேண்டும். தாளாண்மை என்பது இடையீடற்ற உழைப்பைக் குறிப்பது.
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு. (613)
இங்கு வேளாண்மை என்பது பிறர்க்கு உதவி
செய்தலைக் குறித்தது. குடி மேம்பட்டவரே பிறர்க்குதவ முடியும். அவ்வகையில் குடி மேலாண்மைக்கு முதற்கண் வேண்டுவது தாளாண்மை.
தாளாண்மைக்கு அடுத்தது பேராண்மை. அது செயற்கண் மடங்காத துணிவைக் குறிக்கும்.
பேராண்மை என்பது தறுகண்; ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு. (773)
குடிமேலாண்மையிலும் படைமேலாண்மையிலும், தாழ்வுக்கு இடம்கொடாது ஆண்மை வேண்டுமெனக் கூறியது காணலாம். இரண்டாம் உலகப் போரில் அழிவின் விளிம்புக்கே சென்ற
ஜப்பான் தன் குடி மேலாண்மையாலும் அரசு
நிர்வாக மேலாண்மையாலும் உலகம் வியக்க விழுந்ததே தெரியாமல் எழுந்து நின்றது. மேலாண்மையைத் தெள்ளத் தெளிய எடுத்துணர்த்தும்
சூத்திரத்தை மொழியும் வகையில் திருக்குறள் இரண்டு குறட்பாக்களைத் தருகின்றது.
பொருள் கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். (677)
இக்குறட்பாக்கள். ஒருவினை செய்வதற்குரிய பொருள், கருவி, தக்க காலம் வினை, இடம் என்னும் ஐந்தையும் கணித்துத் துல்லியமாகத் திட்டமிட்டுக் கொண்டு இறங்குதலையும், செய்வினை, செய்வான், செயல்முறை என்பவற்றையும் கருத்திற் கொண்டு செயற்படுதலையும் எடுத்துரைக்கக் கானலாம்.
குடியாயினும் நாடாயினும் இம்மேலாண்மைக் கூறுகள் கொள்ளற்குரியன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.