முகப்பு
தமிழ்மணி

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

Updated On : 17 மே 2026, 5:22 pm IST
பகிர்:

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி. ஜெர்மனி கணிதவியலாளர் கார்ல் ஃப்ரீட்ரிக் காஸ் கணிதத்தை 'அறிவியலின் ராணி' என்றழைத்தார். அது போலத் தமிழைந்திலக்கணத்தின் ஒரு பகுதியான 'அணியிலக்கணத்தில் ராணி'யாகப் போற்றப் பெறுவது உவமையணி.

'உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை' என்று உவமவியல் தொல்காப்பிய நூற்பா 274 குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, முத்துப் போன்ற பல் என்பதில் முத்து} உவமை. பல் - உவமேயம் (உவமிக்கப் பெறும் பொருள்). பொதுவாக உவமேயத்தைக் காட்டிலும் உவமை உயர்ந்ததாகயிருக்க வேண்டும் என்பதே மேற்குறித்த நூற்பாவின் பொருள் என்று கருதுகிறார்கள்.

ஆனால், இளம்பூரணர் உரைக் கருத்து அவ்வாறு அமையவில்லை. அதாவது உயர்ந்த பொருளை உவமையாகக் கூறுவது மட்டுமன்று. அதனுள் உவமை கூற வந்த பொருள்களிலேயே உயர்ந்த ஒன்றைக் குறிப்பிடுவதே 'உவமை உயர்ந்ததன் மேற்றே' என்பதன் பொருளாகும் என்பது இளம்பூரணரின் உவமையிலா உரைச் சிறப்பு.

Advertisement

Advertisement

இதற்கு எடுத்துக்காட்டாகக் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடல் வரியான- 'தாமரை புரையுங் காமர் சேவடி' என்பதைக் காட்டி, 'என்றவழிச் சிவப்புடைய பலவற்றினும் தாமரை யுயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது' என்று எழுதுகிறார் உரையாசிரியர் இளம்பூரணர்.

மற்றொன்று, பூவில் உயர்ந்தது தாமரை. 'பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை' என்றார் தேவாரத்தில் திருநாவுக்கரசர்.

நால்வர் நான்மணிமாலையில் மணிவாசகரின் பெருமையைக் கூற வந்த கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் 'பாவெனப்படுவது உன் பாட்டே! பூவெனப்படுவது பொறிவாழ் பூவே' என்று பூவில் உயர்ந்தது தாமரை என்றார்.

இதைக் கருத்தில் கொண்டு தயரதன் குறித்த கம்பரின் பாடல் ஒன்றைக் காண்போம்.

தாயொக்கும் அன்பின், தவமொக்கும் நலம் பயப்பின்

சேயொக்கும் முன்னின்று ஒரு செல்கதியுய்க்கும் நீரால்

நோயொக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்குகேள்வி

ஆயப் புகுங்கால் அறிவொக்கும் எவர்க்கும்; அன்னான்.

உலகில் அன்புக்கு உவமையாகப் பற்பல கூறப்படினும் அனைத்திலும் முதன்மையானதும் உயர்ந்ததும் தாயன்பே ஆகும். 'கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே' என்றும் 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' என்றும் தாயன்பின் உயர்வைத் திருவாசகம் போற்றுகிறது. தம் குடிமக்களிடத்தே தயரதன் காட்டும் அன்புக்கு உவமையில் உயர்ந்ததான தாயன்பு எடுத்துக் கொள்ளப் பெற்றது. பெறுதற்கரிய நன்மைகளை, நாம் வேண்டுகிற அனைத்தையும் எய்துவிக்கின்ற திறம் தவத்துக்குண்டு.

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்

என்று வள்ளுவர் தவத்தின் மேன்மையைக் குறிப்பிடுகிறார். தாம் உயிராய் நினைக்கும் தம் மக்களுக்கு எல்லாவிதமான நன்மையையும் உருவாக்கித் தரும் தயரதனைத் தவத்துடன் ஒப்பு நோக்கி உயர்த்துகிறார் கம்பர்.

ஈன்று புறந்தந்த தாய்க்கும், சான்றோன் ஆக்கிய தந்தைக்கும் மீண்டும் பொன்னோ, பொருளோ, உறைவிடமோ தந்துதவ வேண்டியது மதிதரும் குமரர் செயலாகும். ஆனால், அவர்களை நற்கதி அடையச் செய்யும் கருமங்களே ஒரு சேய் செய்ய வேண்டிய யாவற்றினும் உயர்ந்த ஒன்றாகும்.

பெற்றோருக்குத் தத்தம் பிள்ளைகள் எவ்வாறு நற்காரியங்களைச் செய்ய வேண்டுமோ? அதைப் போல, எவர்க்கும் அவரவரது பிள்ளைகளைப் போலச் செயல்படுகிற தயரதனை 'சேயொக்கும் முன்னின்று ஒரு செல்கதியுய்க்கும் நீரால்' என்றார்.

நோயுற்ற ஒருவனுக்கு ஆறுதல் தரும் வார்த்தைகள், நல்ல உணவு, பணம் இவையெல்லாம் இருந்தாலும் மருந்தே நோயாளன் நோயிலிருந்து விடுபட முக்கியமான ஒன்றாகும். அது போல, உயிரினங்களுக்கு ஏற்படுகிற துன்ப நோயை மருந்தாயிருந்து நீக்குவான் தயரதன் என்பதைக் குறிக்கும் விதமாக 'நோயொக்கும் என்னின் மருந்து ஒக்கும் திறத்தன்' என்று உயர்ந்ததை உவமித்தார்.

உள்ளதை உள்ளபடியறிய அறிவு தேவை. தீமையை விலக்கி நன்மையின் பக்கம் எது நம்மைச் செலுத்துகிறதோ அதுவே தெளிந்த நல்லறிவின் பயனாகும். அறிவே அற்றம் காக்கும் கருவியாகும். அது போலக் கோசல நாட்டு மக்களுக்கு அறிவாய் விளங்கியவன் தயரதன்.

காப்பியத்தில் இராமன் என்னும் அறமூர்த்திக்குத் தந்தையாய் விளங்கும் பேறு பெற்ற நல்லற மூர்த்தியான தயரதனை உயர்ந்தவற்றுள் உயர்ந்தவற்றைத் தேர்ந்தெடுத்து உவமையாக்கி மகிழ்கிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.