FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விளைக வயலே வருக இரவலர்!

தமிழர் தம் வாழ்வில் உயர்ந்த மதிப்புடையதாக அறம் போற்றப்பட்டது.

1 நவம்பர் 2026, 1:07 pm
கோப்புப் படம்
பகிர்:

தமிழர் தம் வாழ்வில் உயர்ந்த மதிப்புடையதாக அறம் போற்றப்பட்டது. சமூக வாழ்விலும் தனிமனித வாழ்விலும் அறம் முதன்மையானது என்ற கொள்கை தமிழருக்கு இருந்தது. அறவழிபட்ட வாழ்க்கையில் புகழ் வளரும் என நம்பினர். அதற்கென உயிரையும் தருவதற்குத் தமிழர்கள் மனமுவந்தனர். அறம் தவறும் போது பழி ஏற்படும் என அஞ்சினர்.

சமூக அளவில், நாட்டு நிர்வாகத்தில் அறங்கூறும் அவையத்தார் என சான்றோர்கள் குழு அமைந்திருந்ததை மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

"அச்சமும் அவலமும் ஆர்வமு நீக்கிச்

Advertisement

Advertisement

செற்றமும் உவகையுஞ் செய்யாது காத்து

ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்

சிறந்த கொள்கை அறங்கூ றவையமும்

நறுஞ்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து

ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து

மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல

நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி

அன்பும் அறனும் ஒழியாது காத்துப்

பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த

செம்மை சான்ற காவிதி மாக்களும்

அறநெறி பிழையா தாற்றி னொழுகி'

என்று மதுரை காஞ்சி அற நெறியில் நாடு

திகழ்வதற்கு அறத்தை எடுத்துச் சொல்ல சான்றோர்கள் இருந்ததைக் கூறுகிறது.

பட்டினப்பாலையில் அறச்சாலை அமைத்தல் பேசப்படுகிறது. பசித்தோர்க்கு உணவு வழங்கும் இடம் அறச்சாலை என்று அழைக்கப்பட்டது. இந்த அறச் சாலைகளில் பசித்தோருக்கு உணவிட சோறு வடிக்கிறார்களாம், அப்படி வடித்த கஞ்சி ஆறு போல ஓடுகிறதாம். இதனை,

"புகழ்நிலைஇய மொழிவளர

அறநிலைஇய அகனட்டிற்

சோறுவாக்கிய கொழுங்கஞ்சி

யாறுபோலப் பரந்தொழுகி (பட்டி.42-45)

எனப் பெருமையாகக் கூறுகிறது.

பெரியோர்கள் அறமென உரைப்பதை பிடித்துக் கொண்டு வாழ அறிவுறுத்துகிறது கலித்தொகை.

"மை இல் மதியின் விளங்கு முகத்தாரை

வெளவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று (கலி.62)

என்று அறநூல்கள் கூறும் அறத்தை எடுத்துக் கூறு

கிறது. இதிலிருந்து சங்க காலத்தில் அறங்கள் தொகுத்து நூலாக இருந்தமையை அறிந்து கொள்ளலாம்.

பழைமையான மரபுகளையும், வரலாறுகளையும், பழங்கதைகளையும் எடுத்துரைத்து தனிமனிதர்களுக்கு ஒழுக்கம் அறமாகக் கற்பிக்கப்பட்டது என்பதையும் சங்க இலக்கியம் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, கற்புக்கு அருந்ததியின் கதையை எடுத்துக்கூறி மக்களை நல்வழிப்படுத்தினர் என்ற செய்தியைப் புறநானூறு,

"வடமீன் புரையுங் கற்பின், மடமொழி,

அரிவை தோள் அளவு அல்லதை,

நினது என இலைநீ பெருமிதத் தையே (புறம்.122)

எனப் பதிவு செய்கிறது.

மனை வாழ்க்கை சங்க காலத்தில் சிறந்து விளங்கியதற்குத் தனிமனிதர்கள் அறத்தின் மீது கொண்டிருந்த பிடிப்பே காரணம். இல்லறப் பண்புகள் தனியே உணர்த்தப்பட்டன. இல்லறத்தாரை வாழ்த்துதல் என்பதே அறிவுரைகளையும் நெறிமுறை

களையும் கூறி அவர்கள் நெறியுடன் வாழ வேண்டும் என்று சொல்வதாகவே அமைந்தது. இதனை,

வாழி ஆதன் வாழி அவினி

விளைக வயலே வருக இரவலர்

எனவேட் டோளே யாயே யாமே

பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்

தண்துறை யூரன் கேண்மை

வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே

என்று இரவலர் வர வேண்டும்; அவர்களுக்குத் தருவதற்காக வயல் விளைய வேண்டும் என்ற அறத்தை ஐங்குறுநூறு பாடல் உணர்த்துகிறது.

நீதி, ஒழுக்கம் போன்றவற்றைக் கற்பித்தல் சங்க இலக்கியத்தில் அகம்- புறம் என்ற பாகுபாடு இல்லாமல் நிரம்பி இருக்கிறது. அறம் கற்பிக்கத் தனி நிறுவனங்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கவில்லை. பெரியோர்களின் வழியில் வாழ்வதே சிறப்பானதாகக் கருதப்பட்டது.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நல்லொழுக்கங்களையும் நீதிகளையும் குடும்பமும் சமுதாயமுமே கற்பித்தன. சான்றோரின் மூதுரைகளும் அவர்தம் நூல்களும் அறச்சிந்தனைகளைக் கற்பிக்கும் நோக்கில் அமைந்தன. அதனால்தான் இயற்கை இன்றைக்கும் அவசியமான அந்த இலக்கியங்களைக் காத்து நமக்கு அளித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments