FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

'முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்'

சங்க இலக்கிய அகப் பாடல்களில் தலைவனைப் பிரிந்துறையும் தலைவியின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் பனுவல்கள்அதிகமாகக் காணப்படுகின்றன.

49 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

சங்க இலக்கிய அகப் பாடல்களில் தலைவனைப் பிரிந்துறையும் தலைவியின் பிரிவாற்றாமையை வெளிப்படுத்தும் பனுவல்கள்அதிகமாகக் காணப்படுகின்றன. பிரிவாற்றாமையால் வருந்தும் தலைவியின் மனநிலையைப்

பல்வேறு புலவர்கள் தங்கள் பனுவல்களில் சிறப்பாக அமைத்துள்ளனர். தலைவனைப் பிரிந்த தலைவி, எப்பொழுதும் அவன் நினைவாகவே இருக்கிறாள்.  பிரிவுத்துயரில் பெரிதும் வருந்துகிறாள். தொடர் வருத்தத்தின் காரணமாகத் தூக்கத்தை இழந்து அவதிக்குள்ளாகிறாள்.

Advertisement

Advertisement

தன்னுடைய நிலையை யாரிடமும் வெளிப்படையாகக் கூறவும் முடியாமல் தவிக்கிறாள். தலைவியின்  தவிப்புநிலையைத் தோழி மட்டுமே சரியாகப் புரிந்து கொள்கிறாள். தனித்திருக்கும் தலைவியிடம் உரையாடும் வாய்ப்பு கிட்டும்போது தோழி இதுகுறித்து வினவுகிறாள்.

தலைவியின் அமைதியை மெதுவாகக் குலைத்துப் போடுகிறாள். இந்தச் சூழலில் தலைவி பேசத் தொடங்குகிறாள். தலைவியின் பேச்சினூடாக அவளது மனத்தில் உறைந்திருக்கும் ஆற்றாமையும் இயல்பாக வெளிப்படுகிறது.

அது கொல், தோழி! காம நோயே;

வதி குருகு உறங்கும் இன்நிழல் புன்னை,

உடை திரை திவலை அரும்பும் தீம் நீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்,

பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே. (குறுந். 5)

'குருகுகள் வந்து தங்கி உறங்குவதற்கு ஏற்ற இனிய நிழலை அளிக்கும் புன்னைமரம் கடல் அலையின் துளிகள் பட்டமையால் அரும்பும் தன்மையாயிற்று. இத்தகைய இனிய நிலப்பரப்பையுடைய மென்புலத் தலைவன் பிரிந்தமையால், பல இதழ்களையுடைய மலரைப் போன்ற கண்கள் துயிலுதலை இழந்தன. இதுதான் காமநோயின் இயல்போ தோழி' என்று நரிவெரூ உத்தலையார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

'தலைவனைப் பிரிந்த துக்கத்தால் எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. நான் தூங்க நினைத்தும் என் கண்கள் உறக்கம் மறுக்கின்றன' என்று தலைவி மென்மையான முறையில் தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இது நெய்தல் திணைப் பாடலாக அமைந்துள்ளது.

இதே சூழ்நிலையில் ஒளவையார் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் காணப்படுகிறது.  தலைவி இரவில் தூக்கமின்றி அவதியுறுகிறாள். தோழியிடம் தன்னுடைய ஆற்றாமையைச் சற்றுக் காத்திரமான முறையில் வெளிப்படுத்துகிறாள்.

முட்டுவேன் கொல்? தாக்கு வேன்கொல்?

ஓரேன், யானும்; ஓர் பெற்றி மேலிட்டு,

'ஆஅ ஒல்' எனக் கூவுவேன் கொல்?

அலமரல் அசைவளி அலைப்ப, என்

உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே. (குறுந். 28)

'சுழன்றும் அசைந்தும் வரும் காற்று என்னை வருத்துகின்றது. என் காமநோயை அறியாமல் இந்த ஊர் துஞ்சுகிறது. இதனால், நான் மோதிக்கொள்வேனோ? தாங்குவேனோ? உணர்வு மேலிட 'ஆ அ' என்றும் 'ஒல்'வொன்றும் கூவுவேனோ?  இன்னது செய்வேன் என்பதை அறியேன் தோழி' என்றாள்.

'என் துன்பத்தை இவ்வூரில் உள்ள என் தாய் முதலிய உறவினர்களும் அறியாமல் உறங்குகின்றனர். நான் இதற்கு என்ன செய்வேன்' என்றாள். இது பாலைத் திணைப் பாடலாக அமைந்துள்ளது.

நரிவெரூ உத்தலையார் ஆண்பாற் புலவர். ஒரு பெண்ணின்  பிரதிநிதியாக மட்டுமே நின்று பேசுவதால் உணர்ச்சி வசப்படாமல் சற்று மென்மையான மொழியில் ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடலில் தலைவன் திரும்பி வந்து விடுவான் என்ற தொனியும் கூடுதலாக இருப்பதை அறியமுடிகின்றது.

ஒளவையார் பெண்பாற் புலவர். இவரது பாடலில் குறிக்கப்பெறும் ஆற்றாமை என்பது நேரடியாக அவரே அனுபவித்த துன்பமாகக் கருத இடமிருக்கின்றது. தன்னுடைய துன்பத்திற்குத் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும்  காரணகர்த்தாவாக்கி விடுகின்றார். இந்தப் பாடலில் தலைவன் தலைவியை ஏமாற்றி விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்ற தொனியும் மறைமுகமாக வெளிப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.