முகப்பு
வெள்ளிமணி

வேதங்கள் வழிபட்ட வேதபுரீஸ்வரர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம். கி.பி. 900 ஆண்டில், தஞ்சையை ஆண்ட ஆதித்த சோழன், போரில் தான் பெற்ற வெற்றிகளுக்கு காணிக்கையாக காவிரியின் இருபுறத்திலும் இருந்த ஆலயங்களைப் புதுப்பித்தான்.

Updated On : 23 ஜனவரி 2014, 4:53 pm IST
பகிர்:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம். கி.பி. 900 ஆண்டில், தஞ்சையை ஆண்ட ஆதித்த சோழன், போரில் தான் பெற்ற வெற்றிகளுக்கு காணிக்கையாக காவிரியின் இருபுறத்திலும் இருந்த ஆலயங்களைப் புதுப்பித்தான். அப்படி புதுப்பிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றுதான் திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் ஆலயம்.

தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் 10 கி.மீ. அங்கிருந்து 3 கிலோ மீட்டரில் திருவேதிக்குடி கிராமம். சிற்றுந்து அல்லது ஆட்டோ மூலம் அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

பிரம்மனுக்கு "வேதி' என்ற ஒரு பெயரும் உண்டு. அந்த வேதியன் பூஜித்ததால் வேதிக்குடி. கல்வெட்டுகளில் திருவேதிக்குடி. மகாதேவர் என்றும், சதுர்வேதி மங்களத்து மகாதேவர் என்றும் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். அத்துடன் வேதங்களும் இங்கு வந்து வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.

Advertisement

நவகிரகங்களின் தலைவனை சூரியன் வழிபட்ட தலம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 13,14.15 ஆகிய தேதிகளில் சூரியன் தன் பொற் கிரகணங்களால் வேதபுரீஸ்வரரை அர்ச்சிப்பதைக் காணலாம். இங்கு தவம் செய்து தான் பெற்ற பேறு காரணமாக இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சூரியன் செய்யும் பூஜை இது. திருநந்தி தேவரும், மார்க்கண்டேயரும், குபேரனும் வழிபட்ட தலம். எனவே, திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தல இறைவனை "செல்வப்பிரான்' என்று சிறப்பித்துப் பாடுகிறார்.

திருமணத் தடை நீங்கும்: திருஞான சம்பந்தர் இத்தலத்தை ""இணை வாழை மடுவில் வேறு பிரியாது விளையாட'' என்று பாடுகிறார். இங்கு வாளை மீன்கள்கூட தன் ஜோடியுடன் இணைந்து விளையாடுவதாகக் குறிப்பிடுகின்றார். இரண்டாவது பாடலில் ""சொற்பிரிவில்லாத மறை'' என்கிறார். வேதத்தை ""புருஷன்'' என்று சொல்வது மரபு. அதற்குண்டான இசையை (சந்தஸ்) மனைவி என்று கொள்வதும் மரபு. வேதமும், சந்தஸஸும் போல இணை பிரியாது வாழலாம் என்பது குறிப்பு. திருவேதிக்குடியை ""கன்னியரோடு ஆடவர்கள் மாமணம் விரும்பி யருமங்கலம் மிக மின்னியலும் நுண்ணிடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே'' என்கிறார். திருமணம் நன்றாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாடி வந்து வழிபட வேண்டிய தலம் இது என்பதாம். இத்தகைய சிறப்புமிக்க இத்தலத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் தனித்தனியாக வராமல் தம்தம் தேவியருடன் வந்து வழிபட்டுச் சென்றதாக சம்பந்தப் பெருமான் குறிப்பிடுகின்றார்.

நந்தியெம்பெருமானுக்கும், சுயசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரத்தில் திருமழபாடியில் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார் அய்யாரப்பர். அதற்கு திருவேதிக்குடியில் இருந்துதான் வேதியர்களை அழைத்தார். அந்த அளவுக்கு வேதம் செழித்திருந்த ஊர். அய்யாரப்பரின் அழைப்பினை ஏற்று திருவேதிக்குடி வேதியர்கள் சென்று நந்தியெம் பெருமானின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சித்திரை மாதத்தில் புது மணமக்களான நந்தி தேவரையும், சுயசாம்பிகையையும் பல்லக்கில் திருவேதிக்குடி அழைத்து வந்தாராம் அய்யாரப்பர். அதன் நினைவாக சித்திரை மாதத்தில் சப்தஸ்தானம் எனும் ஏழூர் வலம் வரும் விழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

சோழ மன்னன் ஒருவனின் மகளுக்கு திருமணம் நடைபெறாமல் தடைபட்டுக்கொண்டே வந்தது. இங்கு வந்து இறைவன் வேதபுரீஸ்வரரையும், அம்பாள் மங்கையர்க்கரசியையும் வழிபட திருமணம் கூடி வந்தது. அதனால் அரசி தன் மகளுக்கு பிறந்த மகளுக்கு மங்கையர்க்கரசி என்று பெயரிட்டார். அரசனும் பல திருப்பணிகள் செய்து ஆலயத்தைப் புதுப்பித்தான். எனவே இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது.

ஜாதக ரீதியாக திருமணத் தடைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். வரன் அமையவில்லையே என்று மனம் கலங்காமல் திருவேதிக்குடி வந்து வேதபுரீஸ்வரரையும் மங்கையர்க்கரசியையும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். வீட்டிற்குச் சென்ற பின் கீழ்காணும் திருஞான சம்பந்தர் இயற்றிய பாடலை 48 நாட்களுக்கு பாராயணம் செய்து வந்தால் தடைபட்ட திருமணம் நடக்கும்.

திருமணத் தடை நீக்கும் பதிகம்:

உன்னி இரு போதும் அடி பேணும் அடியார்

தம் இடர் ஒல்க அருளி

துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல்

இருந்த துணை வன்தன் இடமாம்

கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம்

விரும்பி அரு மங்கலம் மிக

மின்இயலும் நுண்இடை நல் மங்கையர்

இயற்று பதி வேதிகுடியே

சிவனே மருந்து

திருமணம் நடந்தும் பிரிந்திருப்பவர்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்து வழிபட மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இத்தகைய சிறப்புகள் கொண்ட திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்குள் நுழைகிறோம். கிழக்கு நோக்கிய சந்நிதி. முதலில் நந்தி மண்டபம். வலதுபுறம் அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி. மூலவர் சந்நிதிக்கு முன்புறம் வேத விநாயகர் சந்நிதி. தலையைச் சற்றே சாய்த்து வேதம் கேட்கும் நிலையில் மெய்மறந்து அற்புதமாக அமர்ந்திருக்கிறார் வேதவிநாயகர். மூலவர் வேதபுரீஸ்வரருக்கு வாழைமடுநாதர் என்ற பெயரும் உண்டு. வாழை மடுவின் நடுவில் சுயம்புவாகத் தோன்றியதால் அந்தப் பெயர். மூலவரை தரிசனம் செய்து இடது புறம் பிராகாரத்துக்கு வந்தால் மண்டபத்தை சுற்றி 108 சிவலிங்கங்கள். காணும் இடமெல்லாம் கண்கொள்ளாக் காட்சியாக சிவலிங்கங்கள். இந்த 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. பிராகாரத்தை வலமாக வந்து வெளியில் மங்கையர்க்கரசி அம்மனை தரிசிக்கிறோம்.

பிரம்மாண்டமான மதில் சுவரும், ராஜகோபுரங்களும் இருந்த ஆலயம். காலப்போக்கில் கவனிப்பாரின்றி சிதிலமடைந்து போனது. கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது திருப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தகவலுக்கு: 94435 86453

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.