FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருக்கலைப்புச் சட்டம்: ஆர்ஜென்டீனா நாடாளுமன்றம் நிராகரிப்பு

தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில், கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவை வியாழக்கிழமை நிராகரித்தது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
கருக்கலைப்புச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்த செய்தியறிந்து கதறியழும் பெண் உரிமை ஆர்வலர்கள்.
பகிர்:

தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில், கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்ற மேலவை வியாழக்கிழமை நிராகரித்தது.
ஏற்கெனவே கீழவையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற இந்த மசோதா, தற்போது மேலவையில் நிராகரிக்கப்பட்டுள்ளது மனித உரிமை ஆர்வலர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆர்ஜென்டீனா செனட் சபையில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதாவுக்கு எதிராக 38 உறுப்பினர்களும், ஆதரவாக 31 பேரும் வாக்களித்தனர்.
அதையடுத்து அந்த மசோதா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதும், நாடாளுமன்றத்துக்கு வெளியே குழுமியிருந்த கருக்கலைப்பு எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
எனினும், விருப்பமில்லா கருவைக் கலைத்துக் கொள்ள பெண்களுக்கு உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்ணிய அமைப்பினர், இந்த முடிவை எதிர்த்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
கலவரத் தடுப்பு போலீஸார் மீது எரியும் குப்பைகளையும், மரத் துண்டுகளையும் வீசி அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், நீரைப் பாய்ச்சியடித்தும் போலீஸார் விரட்டியடித்தனர்.
கத்தோலிக்க பாரம்பரியத்தைக் கொண்ட நாடான ஆர்ஜென்டீனாவில் கருக்கலைப்பு என்பது பாவமாகக் கருதப்படுகிறது. இந்த நாட்டில்தான் தற்போதைய கத்தேலிக்க மதத் தலைவர் போப் பிரான்ஸ் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு, பெண்கள் தங்கள் விருப்பத்தின் கீழ் கருக்கலைப்பு செய்து கொள்வது சட்டப்படி குற்றமாகும்.
இந்த நிலையில், இதே போன்ற தடை விதிக்கப்பட்டிருந்த அயர்லாந்து நாட்டில், கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு அந்த நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ஆர்ஜென்டீனாவிலும் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதற்கான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்ற கீழவையில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சூழலில்தான், தற்போது அந்த மசோதாவை மேலவை நிராகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments