முகப்பு
உலகம்

அமெரிக்க தேர்தலுக்கு பிறகு எக்ஸ் தளத்தைவிட்டு வெளியேறிய 1.15 லட்சம் பயனர்கள்!

அமெரிக்காவின் ப்ளூஸ்கை சமூக ஊடகத்தை ஒரே வாரத்தில் 10 லட்சம் பயனர்கள் பதிவிறக்கம்..

Updated On : 14 நவம்பர் 2024, 8:53 am IST
எலான் மஸ்க் - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு, எக்ஸ் செயலியை பயன்படுத்தும் 1.15 லட்சம் பயனர்கள் வெளியேறியுள்ளனர்.

கடந்த 2022-ல் எக்ஸ் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கிய பிறகு, அதிகளவிலான பயனர்கள் வெளியேறியது இதுவே முதல்முறை. இதனிடையே, ப்ளூ ஸ்கை போன்ற சமூக ஊடகங்களின் பயனர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் அதிகரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்புக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து, பெரும் அளவிலான தேர்தல் நிதியும் வழங்கினார். அவருக்கு ஆதரவாக பல்வேறு விதமான பிரசாரத்தையும் வெளிப்படையாக மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் மஸ்க்கின் செல்வாக்கை பயன்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

டிஜிட்டல் நுண்ணறிவு தளமான சிமிலர்வெப் வெளியிட்ட அறிக்கையின்படி, ”தேர்தலுக்கு அடுத்த நாள் முதல் எக்ஸ் தளத்தை வலைதளம் மூலமாக பயன்படுத்தும் 1.15 லட்சம் பேர் தங்களின் கணக்கை செயலிழக்கச் செய்துள்ளனர். இதில், மொபைல் செயலி மூலம் எக்ஸ் பயன்படுத்தி செயலிழக்கச் செய்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 90 நாள்களில் மட்டும் அமெரிக்காவில் பிரபலமடைந்து வரும் ப்ளூஸ்கை சமூக ஊடகத்தின் பயனர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 லட்சம் புதிய பயனர்கள் வந்ததையடுத்து, ப்ளூஸ்கை தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக அதிகரித்துள்ளது.

பிரபல செய்தி நிறுவனமான ‘தி கார்டியன்’ அதிபர் தேர்தலில் மஸ்க்கின் தலையீட்டுக்கு கவலை தெரிவித்து, எக்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்தின் 80-க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கிலிருந்து பதிவிடப் போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்குக்கு பதவி!

டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த எலான் மஸ்க்குக்கு, அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைமை பதவியை வழங்குவதாக செவ்வாய்க்கிழமை டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான இந்த துறையை மஸ்க்குடன் இணைந்து இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமியும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments