முகப்பு
உலகம்

உ.பி. முதல் தெஹ்ரான் வரை... கொமேனியின் மூதாதையர் இந்தியர்களா? பின்னணி என்ன?

ஈரானின் முதல் உயர் தலைவர் கொமேனியின் மூதாதையர்கள் இந்தியர்களா என்பதைப் பற்றி...

Updated On : 19 ஜூன் 2025, 6:30 pm IST
அயதுல்லா முசாவி கொமேனி. - படம் | எக்ஸ்
பகிர்:

ஈரானின் முதல் உயர் தலைவர் அயதுல்லா ருஹோல்லா முசாவி கொமேனிக்கும் இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசத்துக்கும் தொடர்புள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடுமையான போர் நிலவிவருகிறது. ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வார இறுதியில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது.

இதில், ஈரான் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படைத் தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

Advertisement

Advertisement

இஸ்ரேல் - ஈரான் போர்

இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானின் உயர் தலைவரும், தலைமை மதகுருவுமான அயத்துல்லா கமேனியை தீர்த்துக்கட்டினால் மட்டுமே முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்க்கமாகவுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் கமேனி சரணடைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பகிரங்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த கமேனி, “பயங்கரவாத சியோனிஸ்டுகளுக்கு கருணை காட்டமாட்டோம். ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் நாட்டை சரணடையச் சொல்வது சரியானதல்ல” என கறாராகத் தெரிவித்துவிட்டார்.

உத்தரப் பிரதேசம் முதல் தெஹ்ரான் வரை...

இது ஒருபுறமிருக்க கமேனியின் பூர்விகம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் என்ற புதிய தகவல் வேகமாகப் பரவிவருகிறது. மத்திய கிழக்கு நாடான ஈரானில் இருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்ற சந்தேகம் அனைவருக்கும் எழலாம்.

ஆம்... ஈரானின் முதல் உயர் தலைவரும், கமேனியின் தந்தையுமான அயத்துல்லா ருஹோல்லா முசாவி கொமேனி 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியை முன்னெடுத்துச் சென்றதன் மூலம் ஈரானின் முதல் தலைமைத் தலைவரானார்.

அயதுல்லா ருஹோல்லா முசாவி கொமேனியின் தாத்தாவான சையத் அஹமது முசாவி ஹிந்திவாஸ், 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் பாரபங்கி அருகிலுள்ள கிண்டூரில் பிறந்தவர் எனக் கூறப்படுகிறது.

உலகத்திலேயே அதிகளவில் ஷியா பிரிவினர் ஈரானில் வாழுகின்றனர். கிட்டத்தட்ட 1 கோடிக்கும் அதிகமான ஷியா பிரிவினர் உள்ளனர்.

அதேபோல இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ, பாரபங்கியில் ஷியா பிரிவினரின் கோட்டைகள் இருந்ததாக வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன. எதுவாயினும், பல இந்தியர்களும் ஈரான், இராக்கிற்கு புனித யாத்திரை செல்வதையும் காணமுடிகிறது.

1850-காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய புரட்சியின் போது மிகவும் புகழ்பெற்ற நகரமான கிண்டூர், ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் இடமாக தற்போதும் கருதப்படுகிறது.

ஈராக்கின் நஜாஃப் நகருக்கு குடிபெயர்ந்த ருஹோல்லா முசாவி கொமேனி, பின்னர் 1834 ஆம் ஆண்டு ஈரானின் கோமெய்ன் நகரத்தில் குடியேறினார். முசாவி குடும்பத்தின் அரசியல் மற்றும் அதிகாரத்துக்கான துவக்கமாக இது அமைந்தது.

முசாவி தான் ஒரு இந்தியர் என்பதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். இந்திய பாரம்பரியத்தைக் காப்பதற்காக அவரது பெயரிலும் ஹிந்திவாஸ் என்பதை பயன்படுத்தி வந்துள்ளார். இது ஈரானிய பதிவுகளிலும் உள்ளது. இது இவர் இந்திய வம்சாவளி என்பதற்குச் சான்றாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.