நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய மைல்கல்! 42 நிமிஷங்கள் தொடர்பை இழந்ததால் பரபரப்பு! என்ன நடந்தது?
நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' திட்டம் படைத்துள்ள புதிய சாதனை பற்றி...
சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு, நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து அதிக தொலைவு சென்று சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தேசிய வானூர்தி விண்வெளி நிலையம் (நாசா), கடைசியாக 1972 ஆம் ஆண்டு அப்போலோ 17 ராக்கெட் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பியிருந்தது.
அதன்பின்னர், 53 ஆண்டுகளாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஃபுளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஆர்டெமிஸ் -2 என்ற திட்டத்தின்கீழ் ஓரியன் விண்கலம் மூலம் 4 விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுக்கு அனுப்பியது.
Advertisement
Advertisement
1970 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட அப்பல்லோ 13 விண்கலம் பூமியிலிருந்து அதிகபட்சமாக பயணித்த 4,00,171 கி.மீ. என்ற சாதனையை முறியடிக்கும் நோக்கில் ஓரியன் விண்கலம் அனுப்பப்பட்டது.
நிலவில் இறங்காமல் அதனை மிக அருகில் சுற்றி, 4 பேரும் ஆராய்ச்சி செய்யும் வகையில் ஆர்டெமிஸ் -2 திட்டம் திட்டமிடப்பட்டது.
இந்த பயணத்தின் போது, முதல்முறையாக நிலவின் பின்புறத்தை நேரடியாக வீரர்கள் கண்டனர். இதுவரை நிலவின் பின்புறத்தை செயற்கைக்கோள் புகைப்படம் மூலமே கண்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை நிலவுக்கு மிக அருகில், பூமியிலிருந்து அதிக தொலைவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து 4,06,771 கி.மீ. தொலைவு வரை இன்று அதிகாலை சென்றதாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம், பூமியிலிருந்து அதிக தொலைவு பயணித்தவர்கள் என்ற சாதனையை விண்வெளி வீரர்கள் ரீட், விக்டர், கிறிஸ்டினா மற்றும் ஜெர்மி ஆகியோர் படைத்துள்ளனர்.
42 நிமிஷங்கள் தொடர்பு துண்டிப்பு
நாசாவின் கட்டுப்பாட்டு மையத்துடனான ஓரியன் விண்கலத்தின் தொடர்பு இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் 42 நிமிஷங்கள் துண்டிக்கப்பட்டதால் அனைவரும் பதற்றமடைந்தனர்.
இன்று அதிகாலை 4.13 மணியளவில் நிலவுக்கு மிக நெருக்கமாக அதன் பின்புறத்தில் விண்கலம் பயணித்த போது, நாசாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நாசா விஞ்ஞானிகள் அனைவரும் பதற்றமடைந்த நிலையில், விண்வெளி வீரர்களுடனான தொடர்பை மீண்டும் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், மீண்டும் விண்கலத்துடனான தொடர்பு அதிகாலை 4.55 மணியளவில் கிடைத்துள்ளது. இடைப்பட்ட நேரமான அதிகாலை 4.35 மணியளவில்தான் இதுவரை இல்லாத மிக அதிக தொலைவான 4,06,771 கி.மீ. பதிவாகியுள்ளது.
இதனிடையே, நிலவுக்கு மிக அருகில் பறந்து கொண்டிருக்கும் விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துரையாடி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஓரியன் விண்கலம் மீண்டும் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியை நோக்கித் தள்ளப்பட்டு, ஏப்ரல் 11 ஆம் தேதி பசிபிக் கடலை வந்துசேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
NASA's 'Artemis II' Reaches a New Milestone! Brief Alarm as Contact Was Lost for 42 Minutes—What Happened?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.