விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர்! 8 மாதங்கள் தங்குகிறார்!
விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன் பற்றி...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அவசர மருத்துவ நிபுணரும் நாசா விண்வெளி வீரருமான கர்னல் அனில் மேனன், வருகின்ற ஜூலை 14 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) முதல்முறையாக பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
49 வயதான அனில் மேனன், கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ரஷிய விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோருடன் ரோஸ்கோஸ்மோஸ் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலத்தில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 மாதங்கள் வரை தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
யார் இந்த அனில் மேனன்?
இந்திய மற்றும் உக்ரேனில் குடியேறிய பெற்றோருக்கு அமெரிக்காவின் மினியாபோலிஸில் பிறந்தவர் அனில் மேனன். மருத்துவம், ராணுவம் மற்றும் மனித விண்வெளிப் பயணம் ஆகிய துறைகளில் படிப்பை முடித்துள்ளார்.
அமெரிக்க விமானப் படையில் பணியாற்றியபோது, 'ஆபரேஷன் எண்டூரிங் ஃப்ரீடம்' திட்டத்துக்காக ஆப்கானிஸ்தானில் அவர் பணியமர்த்தப்பட்டார். மேலும், இமயமலை மீட்புக் குழுவில் இணைந்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மலையேறுபவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டார்.
ரோட்டரி தூதரக அதிகாரியாக இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கி, போலியோ தடுப்பூசி திட்டங்களுக்கு அனில் மேனன் பணியாற்றியுள்ளார்.
பின்னர், 2014 ஆம் ஆண்டு, நாசாவின் அறுவை சிகிச்சை நிபுணராகச் சேர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு உதவினார். பின்னர் 2018-ல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு, விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு வடிவமைக்கப்படும் விண்கலங்கள் தயாரிப்புக்காக பங்காற்றினார்.
பின்னர், 2021-ல் நாசா விண்வெளி வீரராக தேர்வு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்து, தற்போது முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கும் அனில் மேனன், நீண்டகால விண்வெளி பயணத்தில் மனிதர்களின் உடல்களில் ஏற்படும் விளைவுகளை ஆராயவுள்ளார்.
இவரது மனைவி அன்னா மேனனும் ஒரு விண்வெளி வீரர் ஆவார். கடந்த 2024-ல் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலன் மூலம் 5 நாள்கள் சுற்றுப்பாதையில் பயணித்துள்ளார்.
Indian-origin astronaut heading to space! To stay for 8 months!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.