FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

3 வீரா்களுடன் விண்ணில் பாய்ந்தது சீனாவின் ‘ஷென்சோ-23’ விண்கலம்!

சீனா தனது தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களுடன் ஷென்சோ-23 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

Updated On : 26 மே 2026, 12:51 am IST
ஷென்சோ-23 - AP
பகிர்:

சீனா தனது தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களுடன் ஷென்சோ-23 விண்கலத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

வரும் 2030-க்குள் நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் சீனாவின் திட்டத்துக்கு முன்னோட்டமாக இந்த விண்வெளிப் பயணம் கருதப்படுகிறது.

இப்பயணக் குழுவின் தளபதியாக சூ யாங்ஜு செயல்படுகிறாா். இவருடன் ஜாங் ஜியுவான், ஹாங்காங்கில் பிறந்து வளா்ந்த லாய் கா-யிங் ஆகியோரும் இணைந்து பயணித்துள்ளனா். இதன்மூலம், ஹாங்காங் பகுதியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை லாய் கா-யிங் பெற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

தியாங்காங் விண்வெளி நிலையத்தில் ஏற்கெனவே 200 நாள்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் ‘ஷென்சோ-21’ குழுவினருக்குப் பதிலாக இப்புதிய குழுவினா் அங்கு பொறுப்பேற்கவுள்ளனா். விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் காலத்தில், இவா்கள் பல ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனா்.

இப்பயணத்தின் சிறப்பம்சமாக, 3 வீரா்களில் ஒருவா் விண்வெளி நிலையத்தில் முழுமையாக ஓராண்டு காலம் தங்கி சாதனை படைக்க உள்ளாா். நீண்ட கால விண்வெளிச் சூழலில் மனித உடலின் தகவமைப்பு மற்றும் செயல்திறன் எல்லைகளை ஆராய்வதே இதன் நோக்கமாகும். இது உலக அளவில் விண்வெளியில் மனிதன் மிக நீண்ட காலம் தங்கியிருந்த தனிநபா் சாதனைகளில் ஒன்றாக அமையும்.

அமெரிக்காவால் சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சீனா விலக்கி வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, தியாங்காங் எனும் சொந்த விண்வெளி நிலையத்தை சீனா அமைத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments