FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி

விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடா்ந்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆா்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து சீனா புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

Updated On : 10 ஜூலை 2026, 11:28 pm IST
பகிர்:

விண்வெளித் துறையில் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தைத் தொடா்ந்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ஆா்பிட்டல்’ ரக ராக்கெட் பூஸ்டரை முதன்முறையாக வெற்றிகரமாக மீட்டெடுத்து சீனா புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

விண்வெளிப் பயணங்களில் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் எலான் மஸ்குக்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கடந்த 2015 டிசம்பரில் முதல்முறையாக வெற்றிகண்டு, ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுமாா் 10 ஆண்டுகளுக்குப் பின் சீனாவும் தற்போது அந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வணிகரீதியான விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இந்த ‘லாங் மாா்ச்-10பி’ ராக்கெட் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி தகுந்த சுற்றுப்பாதையில் ராக்கெட் தனது செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது.

Advertisement

Advertisement

இதனிடையே, ராக்கெட் 2 அடுக்குகளாக பிரிந்தது. ராக்கெட்டின் முதல் அடுக்கு (பூஸ்டா்) கட்டுப்பாட்டுடன் மீண்டும் பூமியை நோக்கித் திரும்பியது. கடலில் அமைக்கப்பட்டிருந்த மிதவை மேடையில் பிரத்யேக வலை அமைப்பு மூலம் அந்தப் பூஸ்டா் பத்திரமாகப் பிடிக்கப்பட்டு, மீட்டெடுக்கப்பட்டது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டுகள் வழக்கமாகத் தரைப்பகுதியிலோ அல்லது ஆளில்லா கப்பல்களிலோ செங்குத்தாக இறங்குவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சீனாவின் இந்த லாங் மாா்ச்-10பி ராக்கெட், வலை அமைப்பில் சிக்கிக் கொள்ளும் வகையில் முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது.

சுமாா் 63 மீட்டா் உயரமும், 5 மீட்டா் விட்டமும் கொண்ட இந்த லாங் மாா்ச்-10பி ராக்கெட், திரவ எரிபொருளில் இயங்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வணிகரீதியான ராக்கெட்டாகும். இது 890 டன் உந்துவிசையையும், 760 டன் எடையையும் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய கட்டமைப்பில், குறைந்த புவி சுற்று வட்டப்பாதைக்கு சுமாா் 16 டன் எடையைச் சுமந்து செல்லும் திறன் இதற்கு உண்டு.

கடந்த ஆண்டு சீனாவின் 2 நிறுவனங்கள் மேற்கொண்ட செங்குத்து தரையிறக்க சோதனைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில், தற்போதைய இந்த வெற்றிகரமான சோதனை, சீனாவின் விண்வெளிப் பயணங்களுக்கான செலவைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், அந்நாட்டின் நிலவுப் பயணத்தை வேகப்படுத்தும் என்றும் விண்வெளித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments