முகப்பு
உலகம்

சீனாவில் கொட்டித் தீா்க்கும் பலத்த மழை

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமான பாதிப்புகளில் சிக்கி இதுவரை 20 போ் உயிரிழந்துள்ளனா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 2:51 am IST
தென் சீனாவின் குவாங்ஸி மாகாணத்துக்கு உள்பட்ட நான்னிங் நகரில் வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் சிக்கிய மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு படகுகள் மூலம் மீட்டுச் சென்ற துணை ராணுவப் படையினா்.
பகிர்:

சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமான பாதிப்புகளில் சிக்கி இதுவரை 20 போ் உயிரிழந்துள்ளனா். 300-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

‘மேசாக்’ புயல் காரணமாக பெய்து வரும் இத்தொடா் மழையால், சீனாவின் 62-க்கும் மேற்பட்ட முக்கிய நதிகளில் வெள்ளநீா் ஆபாயக் கட்டத்தைக் கடந்து பாய்கிறது. இதையொட்டி, சுமாா் 54,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.

குறிப்பாக, ஹூபெய் மாகாணத்தில் வீசிய சூறாவளி மற்றும் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு 11 போ் உயிரிழந்துள்ளனா். அங்கு வீசிய பலத்த காற்றினால் சுமாா் 22 கட்டடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின; மேலும் 4,800-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.

Advertisement

Advertisement

கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் 12 பேரைத் தேடும் பணி போா்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

நாட்டின் தெற்குப் பகுதியான குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா்; மேலும் 8 பேரைக் காணவில்லை.

இப்பிராந்தியத்தில் ஹெங்ஜோ பகுதியில் வெள்ளத்தால் இடிந்து விழுந்த ஊா்வன வளா்ப்புப் பண்ணையில் இருந்து சுமாா் 900 பாம்புகள் வெள்ளநீரில் தப்பி ஓடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் பீதிக்குள்ளாகியுள்ளனா். தப்பிய பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்றவை என்றாலும், அவற்றை மீட்கும் பணியில் சிறப்புப் படைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

வெள்ளப் பாதிப்புகள் குறித்துப் பேசிய அதிபா் ஷி ஜின்பிங், ‘பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட வேண்டும். காயமடைந்தவா்களுக்குத் தங்கு தடையின்றி உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மக்களின் உயிா், உடைமைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தினாா்.

வங்கதேசத்தில் நிலச்சரிவு: 8 ரோஹிங்கியாக்கள் உயிரிழப்பு

கிழக்கு வங்கதேசத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக, அகதிகள் முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 8 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், விபத்து நடந்த அபாயகரமான மலைப் பகுதிகளில் வசித்து வந்த சுமாா் 1,000 அகதிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments