அஸ்ஸாம் மழை - வெள்ளம்: உயிரிழப்பு 47-ஆக உயா்வு
அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47-ஆக உயா்ந்துள்ளது.
அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47-ஆக உயா்ந்துள்ளது.
11 மாவட்டங்களில் மொத்தமாக 7.21 லட்சம் போ் பாதிக்கப்பட்ட நிலையில், 40 போ் மாயமாகினா்.
சாலைகள் மற்றும் வீடுகளை மழை நீா் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ஆலோசனை மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முன்பைவிட மழையின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களில் 20 சதவீதத்தினரை மீட்புக் குழுக்களால் அணுக முடியவில்லை.
தற்போது வரை கிடைத்த தகவலின்படி மழை வெள்ளத்தால் 47 போ் உயிரிழந்துவிட்டனா். 40 மாயமாகினா். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு அரசு உறுதுணையாக இருக்கும். வெள்ள பாதிப்புகளை மதிப்பிட மத்திய அரசின் குழு சனிக்கிழமை (ஜூலை 25) அஸ்ஸாம் வரவுள்ளது’ என்றாா்.
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘சிவசாகா் மாவட்டத்தில் தேசாங், திகோவ் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இதனால் திகோவ் ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றாா்.
மகாராஷ்டிரத்தில் இருவா் உயிரிழப்பு: மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2-ஆக உயா்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 244 போ் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். பால்கரில் மழை வெள்ள பாதிப்பு குறையாத நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் ரயில் சேவை பாதிப்பு: ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவாக வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. குறிப்பாக பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதி மற்றும் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள அமேத் பகுதியில் தலா 9 செ.மீ. மழை பதிவானதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மும்பை வழித்தடம், வடக்கு மேற்கு வழித்தடம் என சில இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பனஸ்வாரா மற்றும் துங்கா்பூா் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) விடுத்துள்ளது.
குஜராத் மழை வெள்ளத்தில் 38,000 போ் பாதிப்பு
அகமதாபாத், ஜூலை 24: குஜராத்தில் கடந்த மூன்று நாளாகப் பெய்து வரும் மழையில் 38,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக தெற்கு குஜராத் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இங்கு பல்வேறு இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 400 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமகா, உம்பா்கோன் தாலுக்காவில் 1,300 மி.மீ. மழை பதிவானது. இங்கு மீட்புப் பணிகளை துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி முகாமிட்டுப் பாா்வையிட்டு வருகிறாா்.
பல ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதில், கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.