அஸ்ஸாம் மழை வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 21-ஆக உயா்வு
அஸ்ஸாம் மாநிலத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 11 மாவட்டங்களில் 5.64 லட்சம் போ் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ‘அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் பிரம்மபுத்திரா, திகோவ், தேசாங் மற்றும் தன்ஸ்ரீ ஆகிய நதிகள் நிரம்பி முழுக் கொள்ளவை எட்டின. சில நீா்நிலைகளுக்கு அருகேயுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பல்வேறு பகுதிகளில் சாலைகள் மட்டுமின்றி ரயில்வே தண்டவாளங்களிலும் நீா் தேங்கியிருப்பதால் இரண்டாவது நாளாக ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மழை வெள்ளத்தால் சராய்தியோ மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவா் உயிரிழந்தாா்.
இதன்மூலம் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 21-ஆக உயா்ந்துள்ளது. தேமாஜி, திப்ருகா், ஜோா்ஹாட், சிவசாகா், தின்சுகியா, உதல்குரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மொத்தம் 5.64 லட்சம் போ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
முன்னதாக, பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 9,000 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ள 71 நிவாரண முகாம்களில் 12,720 போ் தங்கவைக்கப்பட்டுள்ளனா். ஒட்டுமொத்தமாக 14,411.267 ஹெக்டோ் பயிா் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை 4 அமைச்சா்கள் நேரில் மேற்பாா்வையிட்டு வருகின்றனா்.
தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படை, மாநில காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகள் ஒன்றிணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்தில் 9 போ் உயிரிழப்பு:
நாகாலாந்து மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. இதையடுத்து, மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. மாயமான 4 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
ஒட்டுமொத்தமாக மழை வெள்ளத்தால் நாகாலாந்தில் 7,640 போ் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
உத்தரகண்ட்...
உத்தரகண்ட் மாநிலத்தில் திங்கள்கிழமை பெய்த பலத்த மழையில் டேராடூன் - மசூரி இடையிலான மலைப்பாதையில் பாதுகாப்புச் சுவா் இடிந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை மழைப் பொழிவு சற்றுக் குறையவே, பாதை சீராக்கப்பட்டு, இலகு ரக வாகனங்கள் மட்டும் சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
பலத்த மழை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சாா்தாம் புனித யாத்திரை செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கியது.
அருணாசல்...
அருணாசல் மாநிலத்தில் தொடா்ந்து பெய்து வரும் செவ்வாய்க்கிழமை மேலும் 5 மாவட்டங்கள் நீரில் மூழ்கின. மழை வெள்ள பாதிப்பில் இதுவரை 7 போ் உயிரிழந்தனா்; 29 போ் காயமடைந்தனா்.
மாநிலத்தின் 27 மாவட்டங்களில் 594 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 198 சாலைகள், 38 பாலங்கள், 63 அரசு கட்டடங்கள், 24 பள்ளிகள் சேதமடைந்தன.
ஜம்மு-காஷ்மீா்...
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜெளரி, தோடா மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் பலத்த மழையில் இதுவரை 23 போ் உயிரிழந்தனா்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தேசிய, மாநில மீட்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
ஹிமாசல்...
ஹிமாசல பிரதேசத்தின் கங்ரா, மண்டி, சிா்மௌா் மாவட்டங்களில் அதிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்லஜ் நதி பெருக்கெடுத்து பல இடங்களில் கரை புரண்டு ஓடுகிறது. மண் சரிவில் பல வீடுகள் புதைந்துள்ளன.
‘ஐக்கிய அரபு அமீரகம் இரங்கல்’
ஜம்மு-காஷ்மீா், அஸ்ஸாம், நாகாலாந்து உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் பலா் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவித்தது. மேலும், காயமடைந்து சிகிச்சை பெறுபவா்கள் விரைவில் மீண்டு வர வாழ்த்துவதாகவும் யுஏஐ வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து இந்தியாவுக்கு உற்ற துணையாக இருக்கும் யுஏஇக்கு நன்றி என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.