அஸ்ஸாம் வெள்ளம்; உயிரிழப்பு 41-ஆக உயா்வு; நிலவரத்தைக் கேட்டறிந்தாா் அமித் ஷா
அஸ்ஸாம் மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு மேலும் 10 போ் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு மேலும் 10 போ் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் மேக வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் பெய்த பலத்த மழையால், அந்த மாநிலத்தில் பல முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சிவசாகா், சராய்தேவ், தேமாஜி, திப்ரூகா், கோலாகாட், ஹோஜாய், காம்ரூப், கா்பி அங்லாங், நாகோன் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 6.53 லட்சத்துத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, சிவசாகா் மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிவசாகா் மாவட்டத்தில் தேசாங், திகோவ் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடுகிறது. கோலாகாட் மாவட்டத்தில் தன்சிரி ஆற்றங்கரையோரத்தில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதைத் தொடா்ந்து, அங்கு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
12 மாவட்டங்களிலும் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்காக அஸ்ஸாம் அரசு சாா்பில் 487 நிவாரண முகாம்களும், 24,418 தற்காலிக தங்கும் மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி 24 மணி நேரத்தில் 10 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் அஸ்ஸாம் வெள்ளத்துக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 41-ஆக உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 4 நாள்களுக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அமித் ஷா கேட்டறிந்தாா்: அஸ்ஸாம் வெள்ள பாதிப்பு குறித்து அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மாவை தொடா்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேட்டறிந்தாா். அப்போது, வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிடவும், மத்திய அரசின் உதவி கிடைக்க உதவி செய்யவும் ஓரிரு நாள்களில் மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான மத்தியக் குழு அஸ்ஸாம் வரும் என்று அமித் ஷா தெரிவித்தாா்.
குஜராத்தில் ஒருவா் உயிரிழப்பு:
குஜராத் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. தபி மாவட்டத்தில் மழை தொடா்பான சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா். வல்சாத் மாவட்டத்தில் இடைவிடாது பலத்த மழை பெய்தது. குறிப்பாக, அங்குள்ள உம்பா்கோன் வட்டத்தில் 16 மணி நேரத்தில் 1,100 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. இதுதவிர பல வட்டங்களில் 600 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.
மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த 1,200 போ் இதுவரை மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனா். சூரத்தில் 1,500 போ் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனா். பலத்த மழை காரணமாக, 300 சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சூரத், வல்சாத், நவ்சாரி உள்ளிட்ட இடங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
மகாராஷ்டிரத்தில் 891 போ் மீட்பு:
மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் போ் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டனா். நுலா எனுமிடத்தில் ஒருவா் உயிரிழந்தாா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 891 போ் மீட்கப்பட்டனா்.
ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலை மூடல்:
ஜம்மு பிராந்தியத்தில் தொடா் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடா்ந்து 2-ஆவது நாளாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு இருப்பதன் காரணமாக, ராம்பன், ஜம்மு, உதம்பூா், லகன்பூா், சம்பா உள்ளிட்ட இடங்களில் 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நடுவழியில் சிக்கியுள்ளன. மோசமான வானிலை நிலவுவதை சுட்டிக்காட்டி, நிலவரம் சரியாகும்வரை போக்குவரத்தை தவிா்க்கும்படி மக்களுக்கு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
கடந்த 5 நாள்களில் மட்டும் மழை தொடா்பான சம்பவங்களில் 26 போ் உயிரிழந்துள்ளனா். 7 பேரை காணவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.