2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். பிரதமருடன் ஈரானிய பிரதிநிதிகள் சந்திப்பு!
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃபை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி சந்தித்துள்ளது குறித்து...
பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃபை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெறும் அமெரிக்கா உடனான 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) அன்று அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத் சென்றடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அராக்சி, ஈரானிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி மற்றும் தூதர் ரெசா அமிரி மொக்தம் ஆகியோர் சனிக்கிழமை காலை பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீரை சந்தித்து உரையாடினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃபை, அவரது வீட்டில் ஈரானிய அமைச்சர் அராக்சி தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து அமைதி ஒப்பந்தத்துக்கான தங்களின் நிபந்தனைகள் குறித்து உரையாடியுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனும் அவர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஜராட் குஷ்னர் தலைமையிலான குழுவினர் இன்று பாகிஸ்தான் செல்வதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இருப்பினும், அமெரிக்க பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும், அமைதி ஒப்பந்தத்துக்கான தங்களின் நிபந்தனைகளை பாகிஸ்தான் அரசிடம் தெரிவிக்க மட்டுமே ஈரானிய அதிகாரிகள் இஸ்லாமாபாத் சென்றதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்று தோல்வியடைந்த முதற்கட்ட அமைதிப் பேச்சுக்குத் தலைமைத் தாங்கிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Iranian Foreign Minister Abbas Araghchi met in person with Pakistan's PM Shehbaz Sharif and held discussions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.