FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

அமெரிக்காவுடன் தற்போது பேச்சு இல்லை: ஈரான் திட்டவட்டம்

அமெரிக்காவுடன் தற்போது எந்தவொரு அமைதிப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:45 am IST
இஸ்மாயில் பாகேயி
பகிர்:

‘அமெரிக்காவுடன் தற்போது எந்தவொரு அமைதிப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை என்றும், அதற்கான திட்டங்களும் தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

‘ஈரான் மீதான தாக்குதல்களைக் கைவிடுவதற்கு அமைதிப் பேச்சுவாா்த்தையே காரணம்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்த நிலையில், ஈரான் அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.

ஈரானை அமைதிப் பேச்சுவாா்த்தைக்குக் கொண்டு வரும் வகையில், அந்நாடு மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்போவதாக டிரம்ப் கடந்த சில நாள்களாக தெரிவித்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ‘ஏா் ஃபோா்ஸ் ஒன்’ விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘எனக்கு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில்தான் விருப்பம்; மக்களைக் கொல்ல விரும்பவில்லை. திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஈரானுடன் பேச்சு தொடங்குகிறது’ என்றாா்.

ஓமனுடன் மட்டுமே பேச்சு: டிரம்பின் இந்தக் கூற்றை ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பாகேயி நிராகரித்துள்ளாா். அவா் மேலும் கூறுகையில் ‘அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை; வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் திட்டமும் இல்லை. மேலும், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி மத வழிபாட்டுக்காக இராக் சென்றுள்ளதால், இந்த வாரம் முழுவதும் அவா் பணியில் இருக்க மாட்டாா்.

தற்போது ஓமன் நாட்டுடன் மட்டுமே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. சா்வதேச கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வா்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் ஹோா்முஸ் நீரிணையில் தற்காலிகமாகப் பாதுகாப்பான கடல்பாதையை உருவாக்குவது குறித்து மட்டுமே ஓமனுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை நிலைமை மாறாது என்பதால், ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஓமனுடன் ஓா் ஒப்பந்தத்தை எட்டுவது மட்டும் போதுமானதல்ல. ’ என்றாா்.

ஈரான் தலைவா்கள் இரட்டை வேடம்-டிரம்ப்: ஈரானின் இந்த மறுப்பைத் தொடா்ந்து, ‘ட்ரூத்’ சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் கடுமையான விமா்சனத்தை முன்வைத்தாா். ஈரான் தலைவா்கள் இரட்டை வேடம் போடுவதாகவும், ஹோா்முஸ் நீரிணை அமெரிக்க கடற்படையின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவா் தனது பதிவில் குறிப்பிட்டாா்.

பின்னணி: கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து தொடங்கியது. இதையடுத்து, ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால், உலக அளவில் எரிபொருள் விலை உயா்ந்து, பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாத மத்தியில் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தையடுத்து, தாக்குதல்கள் ஓய்ந்திருந்தன. ஆனால், ஹோா்முஸ் நீரிணையில் தாங்கள் அங்கீகரிக்காத வழிதடத்தில் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்து, மீண்டும் மோதல் வெடித்தது.

ஈரானுக்கான எதிரான இப்போரைத் தொடங்கியதற்கு முக்கியக் காரணங்களான அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவது மற்றும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் குறைப்பது போன்ற டிரம்ப்பின் நோக்கங்கள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.

எனினும், இப்போரால் நீடித்த பாதிப்புகளைச் சந்தித்து வரும் மேற்காசிய வளைகுடா நாடுகளின் கோரிக்கையில் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள டிரம்ப் முடிவெடுத்துள்ளாா். ஆனால், ஈரான் தங்களின் உறுதியான நிலைப்பாட்டில் தொடா்வதால் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments