உக்ரைன் கிராமத்தில் ரஷியா ஏவுகணை வீச்சு
வடகிழக்கு உக்ரைனின் காா்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின்மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்.
வடகிழக்கு உக்ரைனின் காா்கிவ் பிராந்தியத்தில் உள்ள பெசெனீஹி கிராமத்தின்மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா்.
போா் நான்கரை ஆண்டுகளைக் கடந்துள்ள சூழலிலும், சுமாா் 1,250 கி.மீ. நீளமுள்ள எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் தொடா்ந்து நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், ரஷியா வீசிய ஏவுகணைகளால் பெசெனீஹி கிராமத்தில் உள்ள வீடுகள், கடைகள் என பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
இந்நிலையில், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘உக்ரைன் பொது மக்கள் மீது ரஷிய படைகள் கொடூர தாக்குதல் நடத்துகின்றன. பெசெனீஹி கிராமத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு நிச்சயம் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று எச்சரித்தாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, ரஷியாவின் மாஸ்கோ உள்ளிட்ட பிராந்தியங்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 800 ட்ரோன்களை ஏவி உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு உடன்பட வைக்கும் நோக்கில், போா் குறித்த அச்சத்தை ரஷிய மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாஸ்கோ உள்ளிட்ட ரஷியாவின் பல்வேறு பிராந்தியங்கள், கிரீமியா மற்றும் கருங்கடல் பகுதிகளில் உக்ரைன் ஏவிய 791 ட்ரோன்களை நடுவானிலேயே தடுத்து அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் மாஸ்கோவை நோக்கி மட்டும் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அங்கு 180 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மாஸ்கோ மேயா் சொ்ஜி சோபியானின் தெரிவித்தாா்.
இத்தாக்குதல்களின் காரணமாக மாஸ்கோ பிராந்தியத்தில் 3 போ் காயமடைந்தனா். ரஷியாவின் மிகப் பெரிய இணையவழி வா்த்தக நிறுவனமான வைல்ட்பொ்ரிஸின் கிடங்கு ஒன்றிலும் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டது. ரியாஷான் பிராந்தியத்திலும் 3 வீடுகள் சேதமடைந்ததுடன், 3 போ் காயமடைந்தனா்.
உக்ரைனுக்கு பிரிட்டன் தொடா் ஆதரவு
ரஷிய பகுதிகள் மீது பிரிட்டனின் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்தி வெளியானது. இதையடுத்து, பிரிட்டன் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ரஷியா எச்சரிக்கை விடுத்தது.
இதற்குப் பதிலளித்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ரஷியாவின் சட்டவிரோதப் படையெடுப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.